ஜிம் செல்பவர்கள் கவனிக்க வேண்டியவை!
ஜிம்முக்கு செல்ல வேண்டும், உடற்பயிற்சிசெய்து உடலை மெருகேற்ற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் முறையாக ஜிம் விதிமுறைகளை கடைபிடிக்காமல் உடல் வலி ஏற்பட்டு ஓரிரு நாட்களில் இதெல்லாம் சரியாக வராது என்று ஜிம்முக்கு செல்வதையே பலரும் நிறுத்திவிடுகிறார்கள். அப்படியில்லாமல், ஜிம்முக்கு செல்பவர்கள் சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அதில் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.
முதல்முறையாக ஜிம் செல்லும் போது சுய பரிசோதனையாக ஃபிட்னஸ் டெஸ்ட் எடுக்க வேண்டும். உடலின் நெகிழ்வுத்தன்மை, உடல் வலிமை, கார்டியோ உடற்பயிற்சிகளை செய்யும் திறன், உடலின் சமநிலைத்தன்மை, பி.எம்.ஐ. மதிப்பு ஆகியவற்றை பரிசோதித்து தெரிந்து கொண்டு அதன்பிறகு, தங்களது உடலமைப்புக்கு ஏற்றவாறு உடற்பயிற்சியை தொடங்க வேண்டும். ஜிம்முக்கு செல்லும்போது உடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்வானதாக இருக்க வேண்டும். அதற்கு டி-ஷர்ட், டிராக் பேன்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ போன்றவற்றை அணிந்து செல்வது அவசியமாகும்.
உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்பு
5 நிமிடங்கள் வார்ம்-அப் பயிற்சிகள் அவசியம் செய்ய வேண்டும். பின்னர் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை செய்ய வேண்டும். அப்போதுதான் உடற்பயிற்சி செய்வதற்கு உடலில் உள்ள தசைகள் ஒத்துழைக்கும். தசைப்பிடிப்பு உள்ளிட்ட கோளாறுகள் தடுக்கப்படும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அதிகமாக கார்டியோ பயிற்சிகளை செய்வதால் உடல் எடை குறையும். ஆனால் உடல் ஃபிட்டாக இருக்காது. எனவே ஒரு மணிநேர உடற்பயிற்சியில் 40 நிமிடம் கார்டியோ பயிற்சிகளையும், 20 நிமிடம் வலுவூட்டும் பயிற்சிகளையும் செய்யலாம்.
உடற்பயிற்சியின் போது தண்ணீர் குடிக்கக்கூடாது என்று சிலர் சொல்கிறார்கள் அது தவறானது. நாக்கு உலரும் போதெல்லாம் சிறிதளவு தண்ணீர் பருகலாம். பின்னர், உடற்
பயிற்சி முடிந்தவுடன் 15 நிமிடங்கள் கழித்து தேவையான தண்ணீர் குடிக்கலாம்.
வாரத்துக்கு ஒரு நாள் கட்டாயமாக உடற்பயிற்சிக்கு ஓய்வு கொடுப்பது நலம்தரும். இப்படி தசைகளுக்கு ஓய்வு கொடுத்தால் மட்டுமே அடுத்தவாரம் முறையாக உடற்பயிற்சி செய்ய இயலும்.
உடற்பயிற்சிகள் அனைத்தையும் முடித்தவுடன் தசைகளின் இறுக்கத்தை தளர்த்தும் வண்ணம் சில ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை செய்ய வேண்டும். 3 முதல் 5 நிமிடங்கள் வரை செய்யும் இந்த பயிற்சியை உடற்பயிற்சியாளர் கண்காணிப்பில் செய்ய வேண்டியது அவசியமாகும். இவ்வாறு சில விதிமுறைகளை கடைப்பிடித்தால், தினசரி உடற்பயிற்சியும் சாத்தியமே.
தொகுப்பு: ரிஷி