பாதங்களைப் பராமரிக்கும் மசாஜ்
நன்றி குங்குமம் தோழி
முகத்தின் அழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் பாதத்தின் அழகிற்கும் கொடுப்பது அவசியமாகும். அந்தவகையில் நம்முடைய கால் பாதங்களை வீட்டிலேயே எளியமுறையில் பராமரிப்பது எப்படி என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.
எண்ணெய் மசாஜ்
சிறிதளவு தேங்காய் எண்ணெயை எடுத்து லேசாக சூடு செய்து பாதத்தின் வலி கொண்ட இடத்தில் மசாஜ் செய்யும் போது நிவாரணம் கிடைக்கிறது. சிறந்த பலன் பெற ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை எடுத்துக் கொண்டு அதனை மிதமாக சூடுபடுத்தி, வலி உள்ள இடத்தில் தடவி சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம். இதனால், பாதிக்கப்பட்ட இடத்தை சுற்றியுள்ள ரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது மற்றும் வலி குறைந்து நிவாரணம் கிடைக்கிறது. வலி குறையும் வரை இதை தொடர்ந்து பல நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம்.
ஐஸ் ஒத்தடம்
பாத அழற்சியால் ஏற்பட்ட வீக்கத்தை மற்றும் வலியை குறைக்க ஐஸ் பேக்கை பயன்படுத்துவது வீட்டிலேயே செய்யக் கூடிய சிறந்த தீர்வாகும். சில ஐஸ்கட்டிகளை எடுத்து பருத்தி துண்டை கொண்டு சுற்றி பின்னர், பாதிக்கப்பட்ட பகுதியில் சில நிமிடங்களுக்கு ஒற்றி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது வீக்கமும் வலியும் குறையும்.
வெந்நீர் மசாஜ்
பாதங்களைப் பாதுகாக்க வெதுவெதுப்பான நீரும், உப்பும் சிறந்த துணை புரிகிறது. உப்பு கரைக்கப்பட்ட வெதுவெதுப்பான நீரில் பாதத்தினை 10-15 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்னர், காலை நன்கு தேய்த்து கழுவிவிட்டு வெளியே எடுத்து மென்மையான துண்டால் துடைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் பாதங்கள் மென்மையாக இருக்கும். அல்லது பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில் சுமாா் 20 நிமிடம் மூழ்கவிட்டு, பின்னா் பாதத்திற்கான ஸ்க்ரப்பரைக் கொண்டு நன்கு தேய்க்கவும். இவ்வாறு செய்வதன் மூலமும் பாதங்கள் சுத்தமாக காட்சியளிக்கும்.
இது தவிர, இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷினால் சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம். பின்பு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து தேங்காய் எண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.
எலுமிச்சை தோல் மசாஜ்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழத்தின் தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து மசாஜ் செய்து பின்னர், வெந்நீரால் கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் கிருமிகளையும் அழிக்கும்.
தொகுப்பு: தவநிதி