ஆரோக்கிய கூந்தலுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க!
தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, உச்சந்தலை சுத்தமாக இருக்க வேண்டும். தலையில் எண்ணெய், அழுக்கு, இறந்த சரும செல்கள் தேங்கியிருந்தால், அவை முடியின் ஆரோக்கியத்தை சேதப்படுத்தும். இதை தடுக்க வாரம் இரண்டு முறை உச்சந்தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்து குளிக்கலாம். முடியை எப்போதும் சிக்கில்லாமல் வைத்திருப்பது அவசியம். முடி சிக்காக இருந்தால் அவை உடையக்கூடும். முடியின் நுனியில் பிளவு ஏற்பட்டு, நாளடைவில் அவை உதிரவும் வாய்ப்புள்ளது. இன்று தலைமுடியினை பின்னலிடுவதோ அல்லது ரப்பர் பேண்ட் கொண்டு கட்டுவதோ இல்லை. முழுமையாக விரித்து விடுவதுதான் ஸ்டைலாக நினைக்கிறார்கள். இதனால் வெளியே சென்று விட்டு வந்தாலே முடி சிக்காக வாய்ப்புள்ளது. காலை எழுந்தவுடன், வெளியில் சென்று வந்தவுடன் மற்றும் இரவு படுக்கைக்கு முன் முடியினை சீவுவது அவசியம்.
முடியினை ஷாம்பு கொண்டு மட்டும் சுத்தம் செய்தால் போதாது. அதன் பிறகு கண்டிஷ்னர் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். முடியின் வேர்கால்களில் படாமல் முடியின் மீது மட்டுமே கண்டிஷ்னர் பயன்படுத்த வேண்டும். இது முடி சேதத்தை தவிர்க்கும். மேலும் முடி இழைகளை மென்மையாக்கி, ஈரப்பதத்தினை தக்க வைக்க உதவும். மேலும் முடியை சிக்கில்லாமல் பாதுகாக்கும்.தலைக்குளியலுக்கு பிறகு முடியை உலரவைக்க, ஹேர்டிரையர் பயன்படுத்துவதை தவிர்க்கவும். சில சமயம் தலைக்குளியல் காரணமாக முடி வறட்சியடைய வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்க தலைமுடிக்கான மாய்சரைஸர் பயன்படுத்தலாம். இது முடியை வறண்டு போக செய்யாமல் ஈரப்பதத்தை தக்கவைத்து முடியை மென்மையாகவும் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது.
முடிக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஸ்ட்ரெய்னிங், கர்லிங் போன்ற கருவிகளை தவிர்ப்பது நல்லது. வெப்பம் முடியின் ஈரப்பதத்தை நீக்கி முடியின் மேற்புறத்தில் விரிசலை ஏற்படுத்தும். இதனால் முடி வெடித்து அதிகமாக உதிர வாய்ப்புள்ளது. இயன்றவரை ஸ்டைலிங் கருவிகளை தவிர்ப்பது நல்லது.