செஸ்மகளிர் உலகக் கோப்பை வென்ற முதல் இந்திய பெண்!
நன்றி குங்குமம் தோழி
செஸ் சாம்பியன்ஷிப் என்கிற வார்த்தை நமக்கு புதிதல்ல... சமீபகாலமாக இந்தியா சார்பாக விளையாடும் செஸ் வீரர்கள், சாம்பியன்ஷிப் பட்டம் பெற்று அசத்தி வருகின்றனர். இந்நிலையில் 2025ம் ஆண்டிற்கான ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி தொடங்கி, ஜூலை 28ம் தேதி வரையிலும் ஜார்ஜியா நாட்டின் பதுமி நகரத்தில் நடைபெற்று வந்தது. பல்வேறு நாடுகளிலிருந்தும் சிறந்த செஸ் வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் இந்தியாவிலிருந்தும் சிறந்த செஸ் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்திய வீராங்கனைகளான கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகிய இருவரும் இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றனர். சிறப்பம்சம் என்னவென்றால் ஃபிடே மகளிர் செஸ் உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெறுவது இதுவே முதல் முறை. இந்த செஸ் ஆட்டத் தொடரின் அரையிறுதி போட்டியில் ஹம்பி மற்றும் திவ்யா இருவரும் சீன வீராங்கனைகளை வீழ்த்தினர். அரையிறுதிக்குப் பின்னர் சிறப்பாக விளையாடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் திவ்யா. ரேபிட் ஆட்டங்களின் தொடக்கத்தில் சீன வீராங்கனை டிங்ஜி லீ என்பவரிடம் தோல்வியடைந்த ஹம்பி, அடுத்தடுத்த ரேபிட் ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் இவரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இரு இந்திய வீராங்கனைகளும் போட்டியிடும் இறுதிச் சுற்றின் முடிவில் இருவரில் ஒருவர் வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெறப்போகின்றனர் என்பது உறுதி. ஜூலை 26ம் தேதி நடைபெற்ற இறுதிச் சுற்றின் கிளாசிக்கல் முறையிலான 2 ஆட்டங்களும் ‘டிரா’ செய்யும் வகையில் முடிந்தது. பின்னர் ஜூலை 28ம் தேதி நடைபெற்ற காய்களை அதிவேகமாக நகர்த்துகின்ற டை-ப்ரேக் முறையிலான முதல் ஆட்டம் ‘டிரா’வை தழுவியது. எனினும் இதன் இரண்டாவது ஆட்டத்தில் சரியான காய் நகர்வை செய்து திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்று, செஸ் மகளிர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்துள்ளார். இவ்வெற்றியின் மூலம் கிராண்ட்மாஸ்டர் பட்டமும் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. இந்தியாவின் 88வது கிராண்ட்மாஸ்டர் ஆகவும், குறிப்பாக கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற 4 பெண்களில் ஒருவராகவும் திகழ்கிறார். நாக்பூரை சேர்ந்த 19 வயதான திவ்யா தன் இளம் வயதில் நிகழ்த்தியிருக்கும் இந்த சாதனையால் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார். திவ்யா தேஷ்முக் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றுள்ள நிலையில், இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் உலக விரைவு சதுரங்க சாம்பியனான கோனேரு ஹம்பி. ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டிகளின் இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்ற முதல் இந்திய வீராங்கனைகள் என்ற வகையில் இருவரையுமே நாம் கொண்டாடும் நேரம் இது!
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்