பாறை பொறியியல் துறையில் கலக்கும் பெண் பொறியாளர்!
நன்றி குங்குமம் தோழி
வானளாவிய கட்டிடங்களையும், பிரமாண்டமான நினைவுச் சின்னங்களையும், வலிமையான பாலங்களையும் வியந்து பார்க்கும் உலகம், அந்த அற்புதங்களுக்கு பின்னால் இருக்கும்
புகழப்படாத நாயகர்களையும் அவர்களின் பெயர்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில்லை. அப்படிப்பட்ட ஒரு கதைதான் செனாப் ரயில் பாலத்தின் கதை.மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை வடிவமைத்து, ஒட்டுமொத்த உலக கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பி இருக்கிறார் வடிவமைப்புக் கலைஞர் மாதவி லதா.புவி தொழில்நுட்ப ஆலோசகராக 17 ஆண்டுகள் இத்திட்டத்தில் உழைப்பை செலுத்தி இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால்-கவுரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலமே உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலம். இந்தப் பாலம் செனாப் நதிப் படுகையிலிருந்து 1,178 அடி உயரத்தில் உள்ளது. இதன் நீளம் 4,314 அடி. உலகெங்கிலும் உள்ள பொறியாளர்களை வியப்பில் ஆழ்த்திய மகத்தான கட்டமைப்பு இது.
உலகப் புகழ் பெற்ற ஈஃபிள் கோபுரத்தைவிட 35 மீட்டர் உயரம் அதிகம் உள்ளது. மொத்தம் 1,315 மீட்டர் நீளமுள்ள எஃகு வளைவு மற்றும் கான்கிரீட் அமைப்பு பாலம் இது.வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டத்தை தனது தொலைநோக்குப் பார்வை, திறமை மற்றும் அர்ப்பணிப்பால் வடிவமைத்து கூடுதல் சிறப்புமிக்க ஒன்றாக மாற்றி, ஒவ்வொரு கணக்கீட்டிற்கும், ஒவ்வொரு சவாலுக்கும், ஒவ்வொரு மைல்கல்லுக்கும் பின்னால் உறுதுணையாய் நின்றிருக்கிறார் பாறை பொறியாளர் மாதவி லதா.
1997ல் தொடங்கப்பட்டு, 2004ல் செனாப் நதியின் குறுக்கே பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்ட போது, சிமென்ட் தூண்களால் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் உறுதி குறித்து கேள்வி எழவே, பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. பின்னர் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில், சிவில் இன்ஜினீயரிங் துறை பேராசிரியர் மாதவி லதா உதவி கோரப்பட, பாறை கட்டுமானத் துறை நிபுணரான இவர், செனாப் நதி பகுதிக்கு தனது குழுவினரோடு சென்று, அங்குள்ள பாறைகளின் தன்மையை ஆய்வு செய்து, இரும்புத் தூண்களால் பாலத்தைக் கட்ட பரிந்துரைத்துள்ளார்.
பிறகு பாறைகளின் இடுக்குகள் மற்றும் பிளவுகளை அஸ்திவாரமாய் பயன்படுத்தி, கட்டுமான வரைபடத்தையும் தயாரித்து கொடுத்துள்ளார். இவரது திட்டப்படியே, பாறை இடுக்குகளில் பிரமாண்ட இரும்புத் தூண்கள் நிறுவப்பட்டு, பிரத்யேக சிமென்ட் கலவையால் மூடப்பட்டன. சில இடங்களில் பாறைகளில் துளையிடப்பட்டு, இரும்புத் தூண்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன.
தூண்களில் சில சேதம் அடைந்தாலும், பாலம் உடைந்துவிடாதபடியும், 266 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் பாதிப்பு ஏற்பட்டு விடாத நிலையிலும், 8 ரிக்டர் அலகில் பூகம்பமோ அல்லது 40 கிலோ அளவில் வெடி குண்டால் பாலம் தாக்கப்பட்டாலோ, தகர்க்க முடியாத நிலையிலும், 120 ஆண்டுகளுக்கு மேலாக பாலம் நீடித்து நிலைத்து நிற்குமென்கிற தரச்சான்றும் அளிக்கப்பட்டு இருக்கிறது.
யார் இந்த மாதவி லதா...
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம், ஏடுகுண்டலபாடு என்ற சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து, அங்குள்ள அரசுப் பள்ளியில் பயின்றவர். பள்ளிப் படிப்பை முடிக்கும் போது, மருத்துவர் கனவு அவருக்குள் இருக்க, பொருளாதார வசதியின்மையால், பொறியியல் துறையை தேர்ந்தெடுத்தார். ஆந்திராவில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இணைந்து பிடெக் முடித்தவர், பின்னர் வாரங்கலில் உள்ள என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் எம்.டெக் படிப்பைநிறைவு செய்தார். பிறகு சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் இணைந்து, பாறை பொறியியல் துறையில் பிஎச்டி பட்டம் பெற்றவர். பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தின் சிவில் இன்ஜினியரிங்
துறை பேராசிரியராய் 2003ல் தொடங்கி, பணியாற்றி வருகிறார்.
மாதவி லதாவின் கட்டுமான வரைபடம், தொழில் நுட்பத்தை பின்பற்றியே முன்னணி கட்டுமான நிறுவனமான அப்கான்ஸ், செனாப் பாலத்தை பிரமாண்டமாக கட்டி எழுப்பி இருக்கிறது. “செனாப் பாலம் பொறியியல் துறையில் மிகப்பெரிய சாதனை. இந்த சாதனையை இந்திய பொறியாளர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்’’ என்கிறார் அப்கான்ஸ் நிர்வாக இயக்குநர் பரமசிவன்.
அப்கான்ஸ் நிறுவன துணை நிர்வாக இயக்குநர் கிரிதர் ராஜகோபாலன் கூறும்போது, “காற்றின் அழுத்தம், பாலத்தின் பாரத்தை தாங்கும் வகையில் வளைவு வடிவில் இரும்புத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே கட்டுமானத்தில் இந்த தொழில்நுட்பம் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது’’ என்கிறார் மிகவும் பெருமிதத்தோடு.“பாலத்திற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கிய போது சாலை இணைப்பின்றி, இயந்திரம் மற்றும் கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதில்
சவால்கள் இருந்தன. தொழிலாளர்கள், பொறியாளர்களை அழைத்துச் செல்லவும், உபகரணங்களை கொண்டு செல்லவும் குதிரைகளையும், கழுதைகளையும் பயன்படுத்தினோம்” என்கிறார் அப்கான்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர்.
“மிகவும் சவாலான மலைப் பகுதிகளில் பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. என்பதுடன், சரிவான மலைகளில் பாறைகளையே அஸ்திவாரமாக பயன்படுத்தி பிரமாண்ட இரும்பு பாலத்தை கட்டி உள்ளனர். செனாப் பாலத்தை கட்ட மாதவி லதாவும் அவரது குழுவினரும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளனர்” என்று இந்திய அறிவியல் நிறுவனமான ஐ.ஐ.எஸ்.சி மாதவி லதாவுக்கு புகழாரம் சூட்டி உள்ளது.ஒவ்வொரு தலைசிறந்த படைப்புக்குப் பின்னால், பெரிதாய் கனவு காண்கிற மனம் ஒன்று இருக்கிறது என்பதற்கான நினைவூட்டலே செனாப் பாலம்.
இது வெறும் எஃகு மற்றும் கான்கிரீட் கலவைகளால் மட்டுமே உருவாக்கப்பட்டது எனச் சொல்லி விட முடியாத படி மன உறுதியின் சின்னமாகவும், தடைகளை உடைத்தெறியும் பெண்களின் பிரதிபலிப்பாகவும் வானளாவ உயர்ந்து பிரமாண்டமாய் நிற்கிறது செனாப் பாலம்.
தொகுப்பு: மணிமகள்