வெளிநாட்டிற்கு பறக்கும் கொலு பொம்மைகள்!
நன்றி குங்குமம் தோழி
நவராத்திரி சீசன் வந்தாச்சு... உங்க வீடுகளில் கொலு வைக்க எல்லோரும் தயாரா? கொலுப்படிகளில் கண்கவர் வண்ணங்களிலும் ரசித்து பார்க்க வைக்கும் கலைநயத்துடனும் உள்ள பொம்மைகளை நேர்த்தியாக அடுக்கி வைத்து அலங்கரித்து, அதை நாம் மட்டும் ரசித்திராமல் உற்றார், உறவினர்களை வீடுகளுக்கு அழைப்போம். அனைவரின் மனதையும் கவரும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கொலுவை கண்டால் மனம் நெகிழ்ந்து போவார்கள். கொலுவில் வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளையும் அவை சொல்கின்ற கதைகளையும் ஆர்வத்துடன் கேட்க குழந்தைகளும் வருவார்கள். அவர்களுக்கு தெரியாத கடவுள்களின் பெயர்களையும் அவர்களை பற்றிய கதைகளையும் முதல் முதலாக கேட்டு தெரிந்து கொள்ளும் போது, அவற்றை சரியாக விளக்கி சொல்வதற்கு நமக்குள்ளும் ஆர்வம் துள்ளும்.
நவராத்திரி தினங்களில் ஒன்பது நாட்களும் கொலு வைக்கும் வீடுகளுக்கு சென்று அவற்றை ரசித்து, கதைகளை பகிர்ந்து, விசேஷமான உணவுகளை புசித்து மனமகிழ்வுடன் கொலு நிகழ்ச்சியை கண்டு களிப்பதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை நடக்கின்ற இனிமையான தருணங்கள். நாம் மட்டுமின்றி நம் சுற்றத்தாரையும் மகிழ்விக்க வீடுகளில் கொலு வைத்து கொண்டாடுவது சிறப்பு தானே. கொலு நாட்கள் நெருங்கியதுமே ஒவ்வொரு வருடமும் பொக்கிஷமாக எடுத்து வைத்திருக்கும் பொம்மைகள் இந்த ஆண்டும் கொலுவில் இடம் பெற வேண்டும் என விரும்புவது நம் வழக்கம்.
இருப்பினும் ஒவ்வொரு வருடமும் புதுவிதமான அமைப்புகளை கொண்ட பொம்மைகளையும் சுவாரஸ்யமான கதைகளை சொல்லும் பொம்மைகளையும் கொலுப்படிகளில் வைக்க ஆர்வம் காட்டுவோம். புதுவரவு பொம்மைகளை வாங்கும் தேடலில் நாமே இதுவரையில் பார்த்திராத பொம்மைகள் கண்ணில் தென்படும். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் அருகே அமைந்திருக்கும் ‘நற்பவி’ எனும் சிறப்பு பொம்மை கடையில் பொம்மை கலைஞர்களின் கைவண்ணமும் சுவாரஸ்யமான சிந்தனைகளும் வெளிப்படுகின்ற நவராத்திரி கொலு பொம்மைகள் இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழாவிற்காகவே புது வரவாக வந்துள்ளன.
கடையின் உள்ளே நுழைந்ததுமே புதுத் தோற்றத்துடன் ஆங்காங்கே ஜொலித்துக்கொண்டிருந்தன பொம்மைகள். புது வரவாக வந்திருக்கும் பொம்மைகளை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் மக்கள். பொம்மைகள் சொல்லும் கதைகளை விளக்கிக்கொண்டிருக்கும் பணியாளர்கள் என கடை முழுக்க
நவராத்திரி வைபவம். கடையின் உரிமையாளர் வினோத் பாலாஜி நற்பவி குறித்தும், புது வரவான பொம்மைகள் குறித்தும் பகிர்ந்தார்.
“நவராத்திரி கொலுப் படிகளில் அழகாக வீற்றிருக்கும் பொம்மைகள்தான் ஹைலைட். கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்க காரணம், மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. ஒவ்வொரு வருடமும் புது வித அவதாரத்தில் கடவுள் பொம்மைகள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கும். அதனை பார்க்கும் போது இவை நம் வீட்டுக் கொலுவில் இடம் பெற வேண்டும் என்ற ஆர்வம் மக்களுக்கு ஏற்படும். இதை மனதில் கொண்டு ஒவ்வொரு வருடமும் புதுவரவு பொம்மைகளை விற்பனைக்கு வைக்கிறோம்.
நவராத்திரி தினத்தில் நம் வீடே ஜொலிக்கும் போது கொலுப் படிகளில் புது ஜொலிப்புடன் நேர்த்தியாகவும் கலைநயத்துடனும் வடிவமைக்கப்பட்ட பொம்மைகளை வைத்தால்தானே பார்க்க சிறப்பாக இருக்கும். எனவே நன்கு தேர்ந்த பொம்மைகளை உருவாக்கும் கலைஞர்களுடன் இணைந்து கலந்தாலோசித்து ஒவ்வொரு ஆண்டிற்குமான நவராத்திரி சிறப்பு பொம்மைகளை அவர்களிடமிருந்து தயாரித்து கொண்டு வருகிறோம்.
நம் வீடுகளில் நடக்கும் கொலு விழாக்களில் நம் உள்ளூர் கலைஞர்களால் பாரம்பரியமான முறையில் செய்யப்படுகின்ற பொம்மைகளை வைப்பது நமக்கு பெருமை மட்டுமின்றி இது உள்ளூர் கைவினை கலைஞர்களை ஆதரிக்கும் செயலாகவும் இருக்கும். இந்த ஆண்டு மண்ணினால் செய்யப்பட்ட நிறைய பொம்மைகள் வந்துள்ளன. ஆழ்வாரான ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியின் 6ம் பதிகமாகிய, கண்ணன் மீது தான் கொண்ட காதல் மற்றும் தன்னுடைய கனவில் கண்ட திருமண நிகழ்வுகளையும், கண்ணனின் அணிவகுப்பு முதல் திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் விவரிக்கின்ற வாரணம் ஆயிரம் பொம்மைகள் சிறப்பாக வந்துள்ளன. ஜலபெருமாள், சிவலிங்கத்தின் முன்னின்ற ஆண்டாள், வெண்ணெய் கிருஷ்ணன், நந்தியின் மீது நடனமாடும் சிவன் போன்ற அரிய சிலைகளும் உள்ளன.
திருவெண்காடு அகோரமூர்த்தி சிலை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தட்சிணாமூர்த்தி, அம்மன் சிலைகள், நெல்லையப்பர், அஷ்ட பைரவர், நவ நரசிம்மர், சக்கரத்தாழ்வார், கபாலீஸ்வரர்-கற்பகாம்பாள், மீனாட்சி கல்யாணம், அயோத்தி ராமர், நவ திருப்பதி, பிரம்மோஸ்வ செட், விஸ்வரூப அம்மன், பக்த பிரலயா, அகல்யா மோட்சம், தசரா திருவிழா பொம்மைகள், திரெளபதி செட், ராமானுஜர், ராவணன் தர்பார், சூரிய பகவான், வடூவூர் ராமன், சவுந்தரராஜன் செட், நவ சக்தி, அயோத்தியா கோவில் போன்றவையும், மண் மற்றும் பேப்பரில் செய்து பிராஸ் கோட்டிங் செய்த பொம்மைகள், மார்பில் செட் பொம்மைகள், மரப் பொம்மைகளும் விற்பனைக்கு உள்ளது.
தவிர, தியா ஸ்டேண்ட், கிஃப்ட் பொருட்கள், கண்ணாடியில் மற்றும் மார்பிளில் செய்த பொருட்கள், மேக்னட்டிக் டைப் ஸ்டிக்கர் போன்றவையும், நவராத்திரி பண்டிகையின் போது வழங்க ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் போன்றவையும் உள்ளன. சென்னை மட்டுமின்றி இந்தியா முழுவதும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும் கூட வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பொம்மைகளை வாங்குகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி விழாவினை சிறப்பாக கொண்டாட வாழ்த்துகள்” என்றார் வினோத் பாலாஜி.
தொகுப்பு: ஆர்.ஆர்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்