நடனம்தான் எனது முழுநேரப்பணி!
நன்றி குங்குமம் தோழி
தொன்மையான பரதக்கலையில் முறையான பயிற்சிகள் பெற்று பல வருடங்களாக சென்னையில், ராயபுரம் பகுதிகளில் நடனம் பயிற்றுவித்து வருகிறார் நடனக் கலைஞர் திவ்ய பாபு.
நடனத்தை தனது முழுநேரப் பணியாகவே நினைத்து வாழ்ந்து வரும் இவர் வடசென்னை பகுதியில் ‘சாய் நாட்டியாலயா’ என்ற பெயரில் பயிற்சி பள்ளி ஒன்றை நிர்வகித்து பலருக்கு நடனம் சொல்லித் தருகிறார். பரதம் மட்டுமின்றி நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம் போன்றவற்றையும் தனது மாணவிகளுக்கு சொல்லித் தருகிறார். தற்போது மலேசியா, பினாங் என வெளிநாடுகளிலும் தனது மாணவிகளுடன் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகிறார்.
‘‘என்னுடைய மூன்று வயதில் பரதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். கடந்த 33 வருடங்களாக நடனத்தையே எனது முழுநேரப் பணியாக தொடர்ந்து வருகிறேன். பள்ளியில் நடன ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன். நடனப் பள்ளி ஒன்றை அமைக்க வேண்டும் என்பதுதான் என் சிறு வயது கனவு. அதற்கேற்ப ‘சாய் நாட்டியாலயா’ என்ற பெயரில் துவங்கி அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு நடனப் பயிற்சி அளித்து வருகிறேன். எனது இரு மகள்களும் முறையாக நடனப் பயிற்சியினை பெற்று வருகிறார்கள். என் கணவர் சொந்தமாக தொழில் செய்து வந்தாலும், என்னுடைய நடனக் கலைக்கு மிகவும் ஒத்துழைப்பினை அளித்து வருகிறார்.
எனது முதல் குரு தனவந்தனி. அவரைத் தொடர்ந்து நடனக் கலைஞர்களான சித்ரா வடிவேல் மற்றும் கவிதா சார்லஸிடம் பயிற்சி பெற்றேன். கோபிகா வர்மாவிடம் பரதம் மற்றும் மோகினி ஆட்டம் இரண்டும் கற்றுக் கொண்டேன். குற்றாலம் செல்வம் மாஸ்டர், தேவசேனா மற்றும் ஹிமஜா விடமும் நடனப் பயிற்சி எடுத்திருக்கிறேன். புதுச்சேரியில் அபயங்கரம் கிருஷ்ணனும்
என்னுடைய குரு.
நடனப் பயிற்சி மேற்கொண்டது மட்டுமில்லாமல், சென்னையில் உள்ள தமிழ் இசைக் கல்லூரியில் கர்நாடக இசைக்கான தேர்வு சான்றிதழும், பரதநாட்டியத்தில் பட்டயமும் பெற்றுள்ளேன்.
நட்டுவாங்க கலைமணி பட்டம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டிய ஆசிரியர் பட்டம், தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். தற்போது நாட்டியத்தில் பி.எச்.டி படித்து வருகிறேன். நடனம் மட்டுமில்லாமல் இசையின் மீதும் ஆர்வம் இருந்ததால், அதில் லோயர் க்ரேட் முடித்தேன்.
தூர்தர்ஷன் ெதாலைக்காட்சியில் பி கிரேட் ஆர்டிஸ்டாக தேர்வாகியுள்ளேன். அடுத்த லெவலான பி கிரேட் high மற்றும் ஏ கிரேடுக்கான பயிற்சி எடுத்து வருகிறேன். கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிக்கான B.Ed பட்டமும் பெற்றுள்ளேன்’’ என்றவர், தன் வெளிநாட்டு நடன அனுபவங்கள் குறித்து பகிர்ந்தார்.
‘‘நான் மலேசியாவில் ஒருமுறை என் நடன நிகழ்ச்சியினை அரங்கேற்றி இருக்கிறேன். சமீபத்தில் மலேசியாவில் மகா மாரியம்மன் மற்றும் பட்டு கேவ்ஸ் முருகன் கோவிலில் என் மாணவிகளுடன் சேர்ந்து நடனமாடினோம். அதனைத் ெதாடர்ந்து பினாங் சென்றோம். அங்கு சிவன் கோவிலின் விழாவில் எனது மாணவி மற்றும் திசா அகாடமியின் நடனக் கலைஞர் விஜயலஷ்மியுடன் இணைந்து நடனமாடினேன். நானும் எனது மாணவியும் சிவன்- பார்வதி வேடத்தில் ஆடினோம். இந்த நடன நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு அங்கு கிடைத்தது.
நடன ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர் என வலம் வருகிறேன். என் முதல் மகள் சென்னையில் கலாஷேத்திராவில் நடனம் பயின்று வருகிறாள். அவளைப் போல் இரண்டாவது மகளையும் அங்கு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. நடனத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஆன்லைன் மூலமாக அமெரிக்க மாணவிகளுக்குக் கூட சொல்லித் தருகிறேன். மேலும் பலருக்கு நடனம் சொல்லித்தர வேண்டும்.
காரணம், இந்தப் பகுதியினை சேர்ந்த பிள்ளைகளுக்கு கலைத்துறை புதிது. நாட்டியம் ஆடவேண்டும் என்ற ஆர்வத்துடன் என்னிடம் பயில வருகிறார்கள். அவ்வாறு என்னிடம் நடனக் கலையை கற்றுக் கொண்டவர்கள் பல இடங்களில் நடன நிகழ்ச்சி செய்து வருகிறார்கள். பாரம்பரிய தொன்மை வாய்ந்த பரதக் கலையை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம்’’ என்று கூறும் திவ்ய, சிறந்த நடனக் கலைஞர், அபிநயசிரோன்மணி, நட்டுவாங்க சிரோன்மணி, பரத நிருத்திய சூடாமணி, நட்சத்திர நாட்டிய மாமணி போன்ற
விருதுகளை பெற்றுள்ளார்.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்