மன அழுத்தம் குறைக்கும் குரோஷே பின்னல்!
நன்றி குங்குமம் தோழி
இன்றைய உலகம் கணினி அறிவியல், தகவல் தொடர்பு வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. அந்த துறை மக்களுக்கு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தாலும், சவால்களை சந்திக்கத்தான் வேண்டியுள்ளது. இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினாலும் அதனை தக்க வைத்துக் கொள்ள எல்லோரும் பாடுபட்டு வருகின்றனர். நமக்கான வாழ்வை மேம்படுத்திக் காட்ட வேண்டும் என்ற முயற்சியில் அயராது உழைக்கின்றனர்.
அதுவே நாளடைவில் சலிப்பை ஏற்படுத்துகிறது. இயந்திர வாழ்க்கை மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. விளைவு மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு உடல் நலத்தையும் பாதிக்கிறது. உடல், மனம் சார்ந்த பிரச்னைகளை குறைக்க தியானம், யோகா போன்றவற்றை நாடுகிறார்கள். அந்த வரிசையில் குரோஷே பின்னலும் மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்கிறார்கள் மனோதத்துவ வல்லுநர்கள். இதற்கு நல்ல பலன் கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
நம் பாட்டி காலம் தொட்டே குரோஷே கைவினைக் கலை உள்ளது. அதில் புதுமைகள் புகுத்தி ஆடைகள், பொம்மைகள் என பல டிசைன்களை வடிவமைக்கலாம். இல்லத்தரசிகள் சுய தொழிலாகவும் செய்து முன்னேறுவதுடன் நம்முடைய மன அமைதிக்கும் வழிவகுக்கும் என்கிறார் ஆர்டிடெக்சர்ஸ் நிறுவனர் ஐரின் எட்வின். “எனக்கு சென்னை தான் சொந்த ஊர். ஐடி படித்தேன். கணவரும் ஐடி ஊழியர். விருப்பமே இல்லாமல் அமேசானில் ஐடி வேலை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சின்ன வயசுலருந்தே கிராஃப்ட் செய்வதில் ஆர்வம் அதிகம்.
அதிலும் குரோஷே செய்வதில் மிகவும் விருப்பம். எனக்கு அதனை பின்ன தெரியும். ஆனால், முழுமையாக முடிக்க தெரியாது. காரணம், அப்போது இதனை சொல்லித் தர யாருமில்லை. திருமணத்திற்குப் பிறகு என் மாமியாரிடம்தான் இதனை கற்றுக் கொண்டேன். அவங்க கோயம்புத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் கிராஃப்ட் டீச்சராக வேலை பார்த்தாங்க. தையல், நிட்டிங், தஞ்சாவூர் பெயின்டிங், லெதர் வொர்க், வயர் கூடை என அனைத்தும் அவருக்கு தெரியும். அனைத்தும் தெரிந்த அவரிடம் குரோஷே சொல்லித் தர கேட்டேன். இரண்டு நாள் பயிற்சியில், ஒரு சதுர வடிவிலான குரோஷே பின்னினேன்.
பின்பு என் குழந்தைக்கு குல்லா ஒன்று செய்தேன். நான் செய்த குரோஷேவினை ஃபேஸ்புக்கில் பதிவேற்றினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவரும் பாராட்டினர். 2017ல் இதைப் பார்த்த தனியார் நியூஸ் சேனல் சிறு தொழில் 2.0 என்று பெண்களுக்கான சிறு தொழில் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க என்னை அழைத்தனர். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் எனக்கு ஆர்டர்கள் குவிய ஆரம்பித்தன.
குரோஷே என்றாலே ஸ்வெட்டர் தான் பின்ன முடியும் என்று பலர் நினைத்து வருகிறார்கள். இதிலும் புதுமைகளை புகுத்தி பொம்மைகள், உடைகள், ஹேண்ட் பேக்ஸ், பர்ஸ், ஹேர் பேண்ட்ஸ், ஸ்லிங் பேக்ஸ், மொபைல் பவுச், ஹெட் ஃபோன் பவுச், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஜன்னல் திரைகள், வாசல் தோரணங்கள், கீ-செயின் என பலவற்ைற செய்து விற்பனை செய்து வருகிறேன்.
2019 முதல் பயிற்சியாக மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். 2020ல் கொரோனா தொற்றின் காரணமாக நேரடி வகுப்புகளை எடுக்க முடியவில்லை. அதனால் ஆன்லைனில் சொல்லிக் கொடுத்தேன். ஜப்பான், ஆஸ்திரேலியா, துபாய், யூகே, அமெரிக்க என பல நாடுகளில் இருந்தும் ஆன்லைன் மூலமாக என்னிடம் பயிற்சி பெற ஆரம்பித்தனர். தற்போது வரை ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் பயிற்சி அளிக்கிறேன்’’ என்றவரிடம் இல்லத்தரசிகள் மட்டுமில்லாது மாணவர்கள், மருத்துவர்கள் என அனைத்து துறையை சேர்ந்தவர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
‘‘குரோஷே செய்வதால் மன அழுத்தம் நீங்கியதாக என்னிடம் பயிற்சி பெற்ற மருத்துவர் ஒருவர் சொன்ன போது, மருத்துவருக்கே என்னுடைய கலை மருந்தாக இருப்பதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருந்தது. அதே போல் பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவரும் இதனை மனநல நிபுணரிடம் பரிந்துரை செய்ததாகவும், அதனால் பதட்டம், மன அழுத்தம், கை நடுக்கம் குறைந்ததாகவும் கூறினார்.
சிறு வயதிலேயே குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட மற்றும் பாலியல் தவறுகளால் கைவிடப்பட்டு காப்பகத்தில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கும் பயிற்சி அளித்தேன். அவர்கள் செய்ததை என்னிடம் காட்டும் போது அவர்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷத்தை பார்க்க முடியும். அந்த சிரிப்பினை என்னால் மறக்க முடியாது. இவர்களுக்கு மட்டுமில்லாமல் ஐ.டி நிறுவன ஊழியர்களுக்கும் ஒருநாள் பயிற்சி அளித்தேன்.
பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டில் செல்ஃபோனை பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு இந்தக் கலை ஒரு நல்ல மாற்றாக இருக்கிறது. நான் செய்வதைப் பார்த்து என் இரு மகள்களும் கற்றுக் கொண்டு கீ-செயின் மற்றும் உடைக்கு மேட்சான ஸ்லிங் பேக்கினை செய்து கொள்கிறார்கள். சிலர் பொழுதுபோக்கிற்காக கற்றுக் கொண்டாலும், என்னிடம் பயிற்சி பெற்ற பெரும்பாலான பெண்கள் இதனை ஒரு தொழிலாக செய்து வருகிறார்கள். சிலர் பள்ளியில் கிராஃப்ட் டீச்சராகவும் பணியாற்றி வருகிறார்கள். இதற்கு பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. 1000 ரூபாய் இருந்தால் போதும். நூல் கண்டுகள் பல ரகங்களில் பல விலைகளில் கிடைக்கின்றன. ஊசிகளும் பத்து ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை கிடைக்கின்றன.
எனக்கு இந்த வளர்ச்சி பெரும் ஊக்கத்தை தந்தது. தற்போது குரோஷேவிற்கு தேவையான நூல்களும், ஊசிகளும் விற்பனை செய்து வருகிறேன். சென்னையில் குரோஷேக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடையினை முதன் முதலில் நான் தான் ஆரம்பிச்சேன். நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். என்னிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு எனக்கு வரும் சில பிராஜக்ட்களும் தருவேன். அதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருமானத்தை ஏற்படுத்தி தர முடிகிறது.
இதனைத் தொடர்ந்து என்னிடம் பயிற்சி பெற்றவர்களின் பொருட்களை விற்பனை செய்யவே தனியாக ஒரு இணையதளம் துவங்க இருக்கிறேன். கடையினை மேலும் விரிவுப்படுத்தும் எண்ணம் உள்ளது. இந்த கைவினைக் கலை ஒருவரது உடல், மன நலத்தை சீர் செய்கிறது. அதற்கு நானும் ஒரு கருவியாக செயல்படுகிறேன் என்று நினைக்கும் போது மனசுக்கு நிறைவாக உள்ளது’’ என்றார் ஐரின் எட்வின்.
தொகுப்பு: கலைச்செல்வி