கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கல்விக் குழுவில் இடம் பெறும் முதல் இந்தியர்!
நன்றி குங்குமம் தோழி
கல்விப் பெருங்கடலில் இந்திய பெண்கள் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள். சமூகம், குடும்பம், பாலின வேறுபாடுகள் என அனைத்தும் கடந்துதான் பெண்கள் தங்களின் முத்திரையை பதித்து வருகிறார்கள். ஆனால், அதிலும் சாதித்த பெண்கள் அனைவருக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. பெண்களுக்கான நிராகரிப்புகள், போராட்டங்கள் பல நிலைகளில் நடந்து கொண்டு இருந்தாலும், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர்மட்ட கல்விக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார் முனைவர் உபாசனா மஹந்தா.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் கல்வி வல்லுநர்கள் இருந்தாலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார் உபாசனா.இவர் அஸ்ஸாமைச் சேர்ந்தவர். அரியானா, சோனிபட் நகரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார்.
புது தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகள் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும், கனடாவின் வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பெண்கள் மற்றும் பாலின ஆய்வுகள் மையத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மும்பையில் உள்ள TISS கல்லூரியில் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார். உலகளாவிய புகழ் பெற்றிருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், தனது ஸ்தானத்தைத் தக்க வைத்துக்கொள்ள கல்வியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களின் பாடத்திட்டங்களை வடிவமைப்பதில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
கல்வித் திட்டங்கள் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் கேம்பிரிட்ஜ் மட்டுமல்ல உலகளவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் அந்தப் போட்டியில் உள்ளன. அதில் முனைவர் உபாசனா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கல்வித் திட்டம் மற்றும் கல்விக் கொள்கைகளை வரையறுப் பதில் தன்னுடைய பங்களிப்பினை வழங்க இருக்கிறார். இது குறித்து, உபாசனா பேசுகையில், ‘‘எனக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்தை, மரியாதையை என்னால் இப்போதும் நம்ப முடியவில்லை. அபரிமித தொழில்நுட்ப வளர்ச்சி, காலநிலை மாற்றங்கள், சமூக பொருளாதார வேறுபாடுகளை கருத்தில் கொண்டு உலகளாவிய கல்வித் திட்டத்தின் மறு வடிவமைப்பில் எனது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்” என்கிறார்.
தொகுப்பு: பாரதி