தீபாவளியும் புராணக் கதையும்!
நன்றி குங்குமம் தோழி
இந்தக் கதை தீபாவளியை கொண்டாடும் நியதிகளையும் அற்புதமாக விளக்குகிறது. தீர்க்கதமஸ் என்ற முனிவர், தன் வழிபாட்டுக்கு அரக்கர்களாலும், இயற்கைச் சூழலாலும் ஏற்பட்ட பல தடங்கல்கள் குறித்து மிகுந்த கவலை கொண்டார். தவத்தில் சிறந்த சனாதன முனிவரை சந்தித்து தனக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்துக் கூறி அதற்கு பரிகாரம் என்ன என வினவினார். சனாதனர் அவரிடம், ‘‘உமது இன்னல்கள் யாவும் அகன்று நீர் நலம் பெற ஓர் அருமையான விரதம் உண்டு. துலா மாதமாகிய ஜப்பசி மாதம், தேய்பிறை திரியோதசி (தீபாவளிக்கு முதல் நாள்) அன்று மகா பிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்றி மகாதேவனை வழிபட வேண்டும்.
முன்னோர்கள் சுவர்க்கம் செல்லவும் இந்த யமதீபம் அருள்பாலிக்கும். மறுநாள் நரக சதுர்த்தி (தீபாவளி) அன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து புனித நீராட வேண்டும். இந்தப் புனித நாளில் எண்ணெயில் லட்சுமியும், சிகைக்காய் பொடியில் கலைவாணியும், சந்தனத்தில் பூமி தேவியும், குங்குமத்தில் கெளரியும், மலர்களில் மோகினியும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் அலங்காரப் பிரியனாம் விஷ்ணுவும். பட்சணங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும் உறைகின்றனர். இந்த நாளில் எண்ணெய் தேய்த்து நீராடி, தீபமேற்றி, புத்தாடை அணிந்து இனிப்பும், பட்சணங்கள் படைத்தும் இறை வழிபாடு செய்வதால் நற்கதி அடையலாம் என்று சனாதனர் கூறியதைக் கேட்ட தீர்க்கதமஸ் முனிவரும் அவ்வாறே வழிபட்டு அருள் பெற்றார்.
தொகுப்பு: ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.