பாரதியார் பாடல்களை நினைவுகூரும் கோலங்கள்!
நன்றி குங்குமம் தோழி
கேட்பதற்கும் வாசிப்பதற்கும் இன்ப சுவை அளிப்பவை பாரதியார் பாடல்கள். பாரதியின் ஒவ்வொரு வரியும் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும். இப்படிப்பட்ட மகாகவி பாரதியின் கவிதைகளை மையக்கருத்துக்களாகக் கொண்டு அவற்றை கோலங்களில் கலை வடிவமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் மீனாட்சி. கடந்த மார்கழி மாதம் முழுவதும் 30 நாட்களுக்கும் இவர் வரைந்த 30 கோலங்களும் அனைவரையும் ஈர்த்து மீண்டும் பாரதியார் பாடல்களை திருப்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
இதுகுறித்து மீனாட்சி பேசும் போது...
“சிறு வயதிலிருந்தே பாரதியார் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். எனக்கு பாடல் பாடவும் கொஞ்சம் தெரியும் என்பதால், அடிக்கடி பாரதியின் பாடல்களை பாடிக்கொண்டிருப்பேன். நான் வில்லுப்பாட்டு செய்யும் போது கூட எனக்கு பிடித்தமான பாரதி கவிதைகளை கோர்வையாக பாடியிருக்கிறேன். கடந்த சில வருடங்களாக ஏதேனும் கருத்துக்களை மையப்படுத்தி மார்கழி மாதங்களில் கோலங்களை வரைந்து வருகிறேன். இதன்படிதான் சென்ற மார்கழி மாதம் பாரதியார் கவிதைகளை மையப்படுத்தி கோலங்கள் வரைந்தேன். 30 நாட்களுக்கும் கோலம் இடுவதற்காக 30 பாடல்களை முன்கூட்டியே நான் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.
அதற்காக பாரதியார் கவிதைகளை மீண்டும் படிக்கும் போது அதில் எதை எடுப்பது எதை விடுவது என்றே எனக்குத் தெரியவில்லை. அதனால் மறுநாள் காலை எந்தப் பாடலை மையப்படுத்தி கோலம் இடப்போகிறேன் என்பதை அன்றிரவுதான் முடிவு செய்வேன். தேர்ந்தெடுத்த ஒரு பாடலை மனதளவில் பாடிக்கொண்டே இருக்கும் போது அதை எப்படி சித்திரமாக காட்சிப்படுத்த வேண்டும் என்பதும் சிந்தனையில் தோன்றும். அதிகாலை எழுந்ததும் பாரதியார் கவிதைகளை கோலமாக இடப்போகிறோம் என்கிற உற்சாகம் மனதில் தொற்றிக்கொள்ளும். அதேசமயம் எந்த சொதப்பலும் இல்லாமல் அதை சரியாக காட்சிப்படுத்த வேண்டும் என்கிற பதட்டமும் ஒருபுறம் இருக்கும்’’ என்றவர், 30 நாளும் தன் வீட்டு வாசலில்தான் கோலங்களை வரைந்துள்ளார்.
‘‘நான் இருப்பது அடுக்குமாடி குடியிருப்பு. அதனால் அப்பார்ட்மென்ட் வாசலில் இந்தக் கோலத்தினை போடவில்லை. என்னுடைய வீட்டு வாசலில் தான் வரைந்தேன். அடுக்குமாடி குடியிருப்புகளின் வீட்டு வாசல் எந்த அளவு சிறியதாக இருக்கும்னு எல்லோருக்கும் தெரியும். அந்த சிறிய இடத்தில் பாரதியின் பாடலில் உள்ள எல்லாவற்றையும் வரைவது என்பது மிகப்பெரிய சவாலாகத் தான் இருந்தது.
மேலும் வழக்கமான கோலங்களை விடவும் இது போன்ற தீம் கோலங்களை வரையும் போது புதுவித அனுபவமாக இருந்தது. என் வீட்டு வாசலில் கோலங்களை வரைந்து முடித்ததும், அவற்றை படம் பிடித்து பாரதியின் எந்த பாடல் வரிகளை மையப்படுத்தி வரைந்தேனோ, அந்த பாடல் வரிகளுடன் இன்ஸ்டா, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன். மார்கழி முதல் நாள் முதல் கோலத்தை பதிவிட்டதுமே, இந்த வருடம் இதுதான் தீம் என்பது பலருக்கும் தெரிந்தது.
அடுத்தடுத்த நாள் எந்தப் பாடலை கோலமாக சித்தரிப்பேன் என்பதை என் நண்பர்களும் சமூக வலைத்தளங்களில் என்னை பின்பற்றுகிறவர்களும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக என்னிடம் சொல்வார்கள். ஒவ்வொரு நாளும் கோலங்களை பதிவிடும்போதும் அவர்கள் பகிர்கின்ற கருத்துக்களும் சுவாரஸ்யமாக இருக்கும். அவ்வாறு இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவர் அனுப்பியிருந்த செய்தியை படிக்கும்போது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
அவருக்கும் பாரதி பாடல்கள் என்றால் கொள்ளைப்பிரியம் என்றும், கோலங்கள் பிரதிபலிக்கின்ற பாரதியார் கவிதைகளை மீண்டும் எடுத்து படிக்க தூண்டுவதாகவும், அவற்றை அனைவருக்கும் நினைவுப்படுத்துவதற்கு நன்றியும் தெரிவித்திருந்தார். இது போன்று பலரும் பலவிதமான நெகிழ்ச்சியான உணர்வுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். வழக்கமான கோலங்களை பிறர் பாராட்டும் போது கிடைக்கும் சந்தோஷத்தை விடவும், இது போன்று கருத்துக்களை பிரதிபலிக்கின்ற கோலங்கள் அனைவருக்கும் பாரதி பாடல்களை நினைவுப்படுத்தியிருக்கிறது எனும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இது என் கடமை எனவும் உணர்கிறேன்” என்றவர், தான் வரைந்த கோலங்களை பாடலுடன் விவரிக்கிறார்.
“30 நாட்களுக்கும் நான் கோலமாக வரைந்திருந்த எல்லா பாடல்களும் எனக்கு பிடித்தமானவைதான். அவற்றில் நான் மிகவும் விரும்பி வரைந்தவற்றை சொல்கிறேன். ‘வெள்ளை நிறத்தொரு பூனை’ எனத்தொடங்கும் பாடலை மையப்படுத்தி வரைந்த கோலம்தான். அதில் ‘சாம்பல் நிறமொரு குட்டி கரும் சாந்தின் நிறமொரு குட்டி பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளை பாலின் நிறமொரு குட்டி....’ எனும் வரிகளை பிரதிபலிக்கும்படி கோலம் வரைந்தேன். ஒரு பவானி ஜமுக்காளம் ஒன்றில் பாடலில் குறிப்பிட்டுள்ள 5 நிறங்களை கொண்ட பூனைகள் அமர்ந்திருக்கும் படி கோலம் வரைந்திருந்தேன்.
30 நாட்களும் போடப்பட்ட எல்லா கோலங்களிலும் கோலத்தின் தலைப்பகுதியில் பெரிய சிவப்பு பொட்டு ஒன்றை வைப்பேன். இது பாரதியாரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். அதேபோன்று எனது எல்லா கோலங்களிலும் ஒரு சிறிய மீன் ஒன்றை வரைவேன். இது மீனாட்சி என்கிற என் பெயரை குறிப்பதாக இருக்கும்.
அடுத்ததாக ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என தொடங்கும் பாடல், பின்னர் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ பாடல்களை மையப்படுத்தி போடப்பட்ட கோலங்களும் எனக்குப் பிடித்தமானவை. இப்படி ஒவ்வொரு நாளும் பாரதி பாடல்களை கோலமாக வரைவதன் மூலம் அவரை கொண்டாட எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதினேன்.
இந்த முறை பாரதியார் பாடல்களை மையமாக வைத்து கோலங்கள் வரையப்பட்டது போலவே இதற்கும் முந்தைய வருடங்களில் வாகை, குறிஞ்சி, தாழம்பூ, அத்தி, பிச்சிப்பூ போன்ற தமிழ் மலர்களை மையமாக வைத்து கோலங்கள் வரைந்திருந்தேன். இவையன்றி திருப்பாவை, திருமுருகாற்றுப்படை, கந்தபுராணம், குறிஞ்சிப்பாட்டு போன்றவற்றிலிருந்து பாடல் வரிகளை எடுத்து அவற்றை மையப்படுத்தியும் கோலங்களாக காட்சிப்படுத்தியிருந்தேன்” என்றவர், கோல கலை மீதான ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார்.
“சிறுவயதிலிருந்தே எனக்கு கோலம் வரைவதில் ஆர்வம் அதிகம். என் அம்மாதான் கோலங்கள் வரைய எனக்கு கற்றுக் கொடுத்தார். கோலம் மட்டுமில்லாமல் எம்பிராய்டரி, ஆயில்-பெயின்டிங் போன்றவற்றையும் கற்றுக்கொண்டேன். பல நாட்களாக வழக்கமான கோலங்களையே வரைந்து கொண்டிருந்தேன். அவ்வப்போது கோவில்களிலும் கோலங்களை வரைவேன். அது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அதன் பிறகு ஜி.ஏ பேட்டர்ன் (GA) கோலங்களை பற்றி தெரிந்து கொண்டேன். அதில் போடப்படும் பேட்டர்ன்கள் பிடித்துப்போனதால் அதை அடிப்படையாகக் கொண்டே நிறைய புதுவிதமான டிசைன்களில் நானே கோலங்களை வரைந்தேன். அதற்கு பிறகு தான் தீம்களில் கோலங்களை வரையத் தொடங்கினேன்.
கோலங்கள் வரைவதனால் பல்வேறு பலன்களும் கிடைக்கின்றன. முக்கியமாக மன அமைதி. வளைவுகள், கோடுகள், புள்ளிகள் என எல்லாவற்றையும் நேர்த்தியாக வரைய முயலும் போது கவனக்கூர்மை அதிகரிக்கும். இதனால் ஒருவரின் படைப்பாற்றலும், நினைவாற்றலும் கூட மேம்படும். ஒருவரின் மன அழுத்தம் குறையவும் மூளை செயல்பாடுகள் மேம்படவும் உதவுகிறது. அதேபோல கோலங்கள் வரைய நிறைய பொறுமையும் அவசியம்.
நீண்ட நாட்களாக பாரதியார் பாடல்களை வைத்து ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். இந்த முறை அது நிறைவேறியுள்ளது. சிறியதாக இருக்கின்ற எனது வீட்டு வாசலில் வரையப்பட்ட கோலங்கள் அக்கம் பக்கத்து வீட்டினரை தவிர்த்து யாரும் பார்த்திருக்க முடியாது. ஆனால் சமூக வலைத்தளங் களின் மூலம் அவற்றை வெளிப்படுத்திய போது இந்த உலகமே பாரதியாரை பார்த்த சந்தோஷத்தை அளிக்கிறது’’ என்று முகம் மலர்ந்தார் மீனாட்சி.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்