பேட்மேன் ஆஃப் ஜார்கண்ட்!
நன்றி குங்குமம் தோழி
சமூகத்தில் பொதுவெளியில் பேசப்படாத, ஆனால் விழிப்புணர்வு தேவைப்படுகிற விஷயங்கள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் மாதவிடாய். சமீப காலமாக மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வந்தாலும், சில கிராமங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு இல்லை. இதை கருத்தில் கொண்டு ஜார்கண்ட் மற்றும் சுற்றியுள்ள கிராமப்
பகுதிகளில் மாதவிடாய் கால சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கி வருகிறார் தருண்குமார். இவரை ‘ஜார்கண்ட் பேட்மேன்’ என்று அங்குள்ள மக்கள் அழைக்கிறார்கள்.
“நான் கல்லூரி படிக்கும் போதே சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். அப்போது இந்தப் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் குழந்தைகளுக்கு சரியான கல்வி இல்லை என்பதால், பெண் பிள்ளைகள் வீட்டு வேலையும், ஆண் பிள்ளைகள் குழந்தை தொழிலாளர்களாகவும் இருந்தார்கள். அவர்களுக்கு கல்வி அவசியம் என்பதை என் நண்பருடன் இணைந்து உணர்த்தினாலும், அதில் பல தடைகளை சந்தித்தோம்.
இங்குள்ள பெண் பிள்ளைகள் வயதிற்கு வந்தவுடனே திருமணம் முடித்திடுவார்கள். அது குறித்தும் விழிப்புணர்வில் ஈடுபட்டோம். இவர்களுடன் தொடர்ந்து செயல்பட்ட போதுதான் பெண் பிள்ளைகள் அங்கு சந்திக்கும் பிரச்னைகள் பற்றி எங்களுக்கு தெரிய வந்தது. பெண்கள் கிண்டல், கேலி, துன்புறுத்தல், வன்கொடுமை போன்றவற்றை சந்தித்து வந்தார்கள். இவர்களுக்கு என்னால் முடிந்த உதவியினை செய்ய நினைத்தேன்.
அதன் முதல் கட்டமாக பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் குறித்து சிறப்பு பாடங்கள் எடுத்தேன். அவர்களுக்கு வாழ்வியல் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடிய தன்னம்பிக்கையை விதைத்தேன். மேலும் அவர்கள் மன ரீதியாக மேம்படுவதற்கான வழிமுறைகளை கற்பித்தேன். அவர்களும் தங்கள் முன் இருந்த தடையினை தகர்த்தி சந்திக்கும் பிரச்னைகளை மனம் விட்டு பகிர்ந்தார்கள். ஒரு முறை பள்ளியில் சிறப்பு வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்த போது, ஒரு சிறுமி அசௌகரியமாக இருப்பதை உணர்ந்தேன்.
விசாரித்த போது மாதவிடாய் நாட்களில் இருப்பதாக தயக்கத்துடன் கூறினாள். எங்க கிராமத்தில் பெண்கள் மாதவிடாய் குறித்து பேச தயங்குவார்கள். துணிகள்தான் பயன்படுத்துவார்கள். அந்த துணியினை துவைத்து மீண்டும் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் உடல் ரீதியான பிரச்னைகளையும் சந்தித்து வந்தார்கள். அதனால் அவர்களுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் அதன் பயன்பாடு பற்றி புரிய வைத்து அதனை வழங்கவும் முடிவு செய்தேன். முதலில் பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்கினேன். பின்னர் கிராமங்களில் முகாம்களை அமைத்து பெண்களுக்கும் வழங்கி வந்தேன். இதனைத் தொடர்ந்து மாதவிடாய் சுழற்சி பற்றிய கல்வியும் சுகாதார நடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு பாடங்களாக எடுத்தேன்.
இதனை பெண் பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல் ஆண் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான் எடுத்து வந்தேன். ஆண் பிள்ளைகளும் மாதவிடாய் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். சிறுமிகள் மட்டுமில்லை சிறுவர்களும் வளர்ச்சி அடையும் போது அவர்களும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களை எதிர்கொள்வார்கள். என்னுடைய தொடர் அறிவுரையினை பின்பற்றி சானிட்டரி நாப்கின்களை கிராமப் பெண்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்’’ என்று கூறும் தருண், மாதவிடாய் மட்டுமில்லாமல் பசுமையான சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.
“சமூக ஆர்வலர் என்பதால், பசுமை சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் விதத்தில் ‘ஒன் பேடு ஒன் ட்ரீ’ என்ற திட்டத்தின் மூலம் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களுடன் ஒரு மரக்கன்றையும் கொடுத்தேன். அவர்கள் அதை வீட்டில் வளர்த்தார்கள். அது பசுமையாக வளர்ந்திருப்பதை எனக்கு புகைப்படம் எடுத்து அனுப்பும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கும். இந்த திட்டத்தை பரவலாக்கி திருமணமாகும் தம்பதியினருக்கும் பரிசாக மரக்கன்றுகளை வழங்கி வந்தேன். கொரோனாவின் போது இது குறித்து நிறைய விழிப்புணர்வினை ஏற்படுத்தினேன். அரசு அனுமதியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான முகாம்களை நடத்தினேன். அதில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வினை தொடர்ந்து போதித்தேன்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு என் சேவையை புரிந்து கொண்டு பலர் உதவ முன்வந்தார்கள். சானிட்டரி நாப்கின்களை கொரியர் மூலம் எனக்கு அனுப்பினார்கள். அவற்றை நான் கிராமப்புற பெண்களுக்கு வழங்குவேன். தனி மனிதனாய் ஒவ்வொரு வீட்டுப் பெண்களுக்கும் இதனை வழங்குவது கஷ்டமாக இருந்தது. அந்த சமயத்தில் கிராமத்து சிறுவர்கள் என்னுடன் இணைந்து செயல்பட துவங்கினார்கள். மேலும் கிராமத்தில் பல்வேறு இடங்களில் ‘பேட் பேங்க்’ என்ற பெயரில் நாப்கின்களை வழங்க ஆரம்பித்தோம். தன்னார்வலர்களும் தங்களால் முடிந்தவரை நாப்கின்களை பெண்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். இதனைத் தொடர்ந்து ‘நிஷ்சய்’ என்ற பெயரில் அமைப்பு ஒன்றை துவங்கினேன். அமைப்பின் மூலம் நாப்கின்களை தானம் செய்ய விரும்புபவர்கள் செய்யலாம்.
பல இடங்களில் நாப்கின்கள் வழங்கும் இந்த நிகழ்வு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது’’ என்ற தருண்குமார் பலரின் உதவியும் ஆதரவும் கிடைத்தால் பின்தங்கிய நிலையில் இருக்கும் பெண்களுக்கு நாப்கின்களை வழங்க முடியும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்