அதிரசம்...அதிரசம்...
நன்றி குங்குமம் தோழி
தீபாவளி பட்சணங்களில் மிகவும் முக்கியமான பலகாரம் அதிரசம். இதனை செய்ய பதம் மற்றும் பக்குவம் மிகவும் முக்கியம்.
* அதிரசத்திற்கு பச்சரிசி மாவு ஈரமாக இருப்பது முக்கியம். உலர்ந்த மாவு உபயோகப்படுத்தினால் நன்றாக இருக்காது.
* மெஷினில் கொடுத்து அரைப்பதைவிட வீட்டிலேயே இடித்த மாவு மிக நன்றாக இருக்கும்.
* மாவை திரித்த பிறகு சலிப்பது முக்கியம்.
* அடி கனமான வாணலிதான் உபயோகிக்க வேண்டும்.
* பாகு வெல்லம் மட்டும்தான் நல்ல அதிரசத்தை தரும். மற்ற வெல்லத்தில் நிறமும் கிடைக்காது. பாகு சரியாக வருமா எனவும் தெரியாது. பாகு வெல்லம்
அடர்ந்த நிறமாகவும், சிறிதே மெத்தென்றும் இருக்கும்.
* ஒரு கிலோ மாவிற்கு 1¼ கிலோ பாகு வெல்லம் துருவல் தேவை. சிறிது கூடுதலாக வேண்டுமானாலும் சேர்க்கலாம். ஆனால், குறைக்கக் கூடாது.
* பாகு ‘முத்து பதம்’ வர வேண்டும். சிறிதே முன்னால் எடுத்தால், அதிரசம் பொரிக்கும் போதே அலண்டு விடும். மிகவும் முற்றி விட்டால் அதிரசம் கெட்டியாக வரும்.
* எண்ணெயில் போட்டதும் மேலெழும்பும். உடனே திருப்பி விட வேண்டும். அதிகம் கரகரப்பாக வேகவிடக் கூடாது. மெத்தென்று இருந்தால்தான் நன்றாக வரும்.
* அதிரசம் எப்போதும் அதிக எண்ணெய் குடிக்கும் என்பதால் ஒன்றொன்றாக போட வேண்டும். பொரித்த பிறகு தட்டில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அடுக்கி வைக்க வேண்டும். ஒன்றன் மீது ஒன்றாக வைக்கக் கூடாது. ஒட்டிக் கொள்ளும். சூடு ஆறிய பிறகுதான் டப்பாவில் போட வேண்டும்.
தொகுப்பு: கி.சுமதி, சென்னை.