பாடல் வரிகளில் ஓவியங்கள்!
நன்றி குங்குமம் தோழி
மனதில் ஓடும் எண்ணங்களின் பிரதிபலிப்புதான் ஓவியங்கள். சிலர் தனிநபரை அல்லது புகைப்படங்களை பார்த்து அப்படியே தத்ரூபமாக வரைவார்கள். தூத்துக்குடியை சேர்ந்த உக்ரா, பாடல் வரிகளை அழகான ஓவியங்களாக தீட்டி வருகிறார்.‘‘தூத்துக்குடிதான் என் சொந்த ஊர். ஆனால், நான் பிறந்தது எல்லாம் சென்னையில் என்பதால், தூத்துக்குடி மற்றும் சென்னை என மாறி மாறி நான் வளர்ந்திருக்கிறேன். ஓவியங்கள் வரைவது மேல் எனக்கு சின்ன வயசில் இருந்தே ஈடுபாடு இருந்து வந்தது.
எங்க வீட்டுச் சுவர் முழுக்க என்னுடைய சித்திரமாகத்தான் இருக்கும்னு அப்பா சொல்வார். அதன் பிறகு நான் 10ம் வகுப்பு படிக்கும் போதுதான் முழுமையாக ஓவியங்கள் வரைவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இதற்காக நான் யாரிடமும் பயிற்சி எல்லாம் எடுக்கவில்லை. நானேதான் கற்றுக்கொண்டேன். யுடியூப்பில் அதற்கான பயிற்சி முறைகள் நிறைய உள்ளன. அதைப் பார்த்து நானே வரைய ஆரம்பித்தேன். அப்படித்தான் ஓவியங்கள் எனக்கு பரிச்சயமாயின. சில சமயம் ஏற்படும் சந்தேகங்களை நான் ஓவியங்களை வரைபவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வேன். எந்த ஒரு விஷயமும் நாம் உடனே சரியாக செய்திட முடியாது. தவறுகள் மூலம்தான் அதனை திருத்திக்கொள்ள முடியும். நானும் அப்படித்தான் என்னுடைய ஓவியங்களை திருத்திக் கொண்டேன்.
அப்பா கடல் சார்ந்த வியாபாரம் செய்து வருவதால், கடல் எங்க வாழ்க்கையில் முக்கிய பங்கு என்று சொல்லணும். என்னுடைய பெரும்பாலான ஓவியங்கள் நீல நிறங்களில்தான் இருக்கும்’’
என்றவர் ஆரம்பத்தில் கருமை நிறத்தில்தான் வரைந்துள்ளார்.‘‘நான் முதலில் என்ன ஓவியம் வரைந்தேன் என்று எனக்கு நினைவு இல்லை. ஆனால், என் டீனேஜ் பருவத்தில் நான் ரொம்பவே மன உளைச்சலில் இருந்தேன். அவை என் ஓவியத்தில் பிரதிபலித்தது. என்னுடைய ஓவியங்கள் பெரும்பாலும் அந்த நேரத்தில் கருமை நிறத்தில்தான் இருக்கும். நான் அவ்வாறு வரைவதைப் பார்த்து பலர் ஓவியங்கள் நன்றாக இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.
என் பெற்ேறாருமே இது என்ன இப்படி இருக்கிறது என்று சொல்வார்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக என் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. பிறகு நான் ஓவியங்கள் வரைவது முற்றிலும் மாறிவிட்டது. முழுக்க முழுக்க நீல நிறம் என் ஓவியங்களில் பிரதிபலிக்க ஆரம்பித்தது. கடல், வானம் இரண்டும் எல்லையற்றது. வாழ்வின் சந்தோஷத்தையும், எல்லையில்லா ஆனந்தத்தையும் குறிப்பிடும். அதனால் நான் அந்த நிறம் மேல் காதல் வயப்பட்டேன். விளைவு என் ஓவியங்கள் முழுதும் நீல நிறமாக மாறியது’’ என்றவர் திரைப்பட பாடல் வரிகளை தன் ஓவியங்களாக வரைந்து வருகிறார்.
‘‘ஓவியம், பாட்டு இரண்டுமே என்னுடைய உலகம் என்று சொல்லலாம். சந்தோஷம், வருத்தம் எதுவாக இருந்தாலும் பாடல்கள்தான் எனக்கு ஒரே ஆறுதலாக இருக்கும். பாடல்களை அடுத்து என் மனதினை லேசாக மற்றக்கூடியது ஓவியங்கள். அப்படி எனக்குப் பிடித்த பாடல்களின் வரிகளை ஓவியங்களாக தீட்டினேன். அதை என் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. சொல்லப்போனால் அதுவே என்னுடைய அடையாளமாக மாறியது. இதுவரை 50க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறேன்.
என்னுடைய காதல், பார்வை, மொழியினை பாட்டு வரிகளைக் கொண்டு ஓவியமா கொடுப்பதுதான் என் விருப்பம். அதேபோல் என் அம்மாவிற்கு கடல் பிடித்தமானது என்பதால், அவர்களுக்காக நிறைய கடல் சார்ந்த ஓவியங்களை வரைந்திருக்கிறேன்’’ என்றவர், கடந்த இரண்டு வருடங்களாக தன் ஓவியங்களைக் கொண்டு காலண்டர்களை உருவாக்கி வருகிறார்.
‘‘எனக்கு காலண்டர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. ெபரும்பாலும் என்னுடைய ஓவியங்களை நான் மறு பிரதி எடுக்க மாட்டேன். ஒரு தடவை அவ்வாறு எடுத்த போது பார்க்க ரொம்பவே அழகாக இருந்தது. அப்போதுதான் இதையே ஏன் நிறைய பிரதியாக எடுத்து காலண்டராக மாற்றினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படித்தான் காலண்டர் கான்செப்ட் உருவானது. கடந்த இரண்டு வருடமாக என் ஓவியங்களை காலண்டராக வெளியிட்டு வருகிறேன்.
ஒவ்வொரு வருடம் ஒரு தீம் என இந்த காலண்டரை உருவாக்குவேன். வரும் வருஷம் சினிமா இசையின் ஆணிவேரான இளையராஜா மற்றும் ரஹ்மான் அவர்களின் இசையில் வெளியான பாடல்களை மையமாகக் கொண்டு காலண்டர் அமைக்க இருக்கிறேன். அதற்கான தயாரிப்பில் இருக்கிறேன். இளையராஜா அவர்கள் இசையமைத்த ‘சந்தனக் காற்றுக்குள்ளே’... பாடலை இளையராஜா மற்றும் அவரின் மனைவி இருவரும் காட்டுக்குள் இருப்பது போல் வரைந்திருக்கிறேன். இந்த ஓவியம் என் மனசுக்கு ரொம்பவே நெருக்கமானது. நான் அக்ரிலிக், டிஜிட்டல் என இரு வகை ஓவியங்கள் செய்கிறேன்.
குழந்தைகள் கலை மேல் ஆர்வம் செலுத்தினால், அந்த ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு கிரையான்ஸ், வாட்டர் கலர், பென்சில்களை வாங்கி ஊக்கப்படுத்தினால், நிறைய திறமையான கலைஞர்கள் உருவாக வாய்ப்புள்ளது. நானும் எனக்குத் தெரிந்த கலை குறித்து வர்க் ஷாப் நடத்தி வருகிறேன். ஆர்வம் இருந்தாலும் எப்படியும் வரைய கற்றுக்கொள்ள முடியும். அதற்கு நிறைய வழிகள் உள்ளன. என்னுடைய வாழ்நாள் கனவு வாழ்க்கையை கலை உணர்வோடு மனசுக்குப் பிடித்தவருடன் வாழவேண்டும், கடலோர ஆர்ட் ஸ்டுடியோ, ஆர்ட் கேலரி, பீச் கஃபே போன்றவற்றை அமைத்து அதில் என் ஓவியங்களை காட்சிப்படுத்த வேண்டும்.
எல்லோருக்குள்ளும் ஒருவித ஆர்டிஸ்ட் மறைந்திருப்பான். அந்த ஆர்வத்தை வெளியே கொண்டு வரவேண்டும். கலை உணர்வோடு வாழ்ந்தால் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். என்னதான் வேலைக்குப் போனாலும் ஒரு கலையினை கற்றுக் கொள்ளுங்கள். உங்களை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்கும். வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும் அது நம் கைப்பிடித்து மேலே உயர வழிவகுத்து தரும்’’ என்றார் உக்ரா.
தொகுப்பு: திலகவதி