சாதுர்யமாக செயல்பட்டால் எந்தத் தொழிலும் சக்சஸ்தான்!
நன்றி குங்குமம் தோழி
புடவை எந்த ரகமாக இருந்தாலும், அதை மேலும் அழகாக எடுத்துக்காட்டுவது அதற்கு அணியும் மேட்சிங் பிளவுஸ்தான். இன்று சாதாரண புடவைக்கும் ஆரி, எம்பிராய்டரி போன்ற டிசைன்கள் கொண்ட பிளவுஸ்களையே பெண்கள் விரும்புகிறார்கள். அவ்வாறு டிசைன் செய்யக்கூடிய டிசைனர்கள் பலர் இருந்தாலும், ஒவ்வொருவரும் தனக்கென தனிப்பட்ட பிரத்யேகமான யுக்திகளை கையாள்வது வழக்கம். வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து பிரத்யேகமாக அவர்களின் விருப்பத்திற்கு ஏற்படிசைன் செய்து தருவது மட்டுமில்லாமல், ஆல்டரும் செய்து தருகிறார் கோவையை சேர்ந்த ஸ்பர்ஷ் பொட்டிக் உரிமையாளர் ரேவதி.
‘‘நான் பட்டப்படிப்பு எல்லாம் படிக்கவில்லை. 2 வரைதான் படித்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு என்னுடைய படிப்பிற்கு ஏற்ப வேலைக்குப் போக நினைத்த போது, கையில் ஒரு கைத்தொழில் இருந்தால் நன்றாக இருக்கும்னு நினைச்சேன். அதனால் தையல் குறித்த பயிற்சியில் ஈடுபட்டேன். என் கணவரும் சப்போர்ட் செய்ய அதற்கான பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டேன்.
அதன் பிறகு என் வீட்டருகில் உள்ள தையல் கடையில் வேலைக்கு சென்றேன். அதன் மூலம் தையல் சார்ந்த நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன்.
குழந்தை பிறந்த பிறகு என்னால் தொடர்ந்து தையல் கடையில் வேலைக்குச் செல்ல முடியவில்லை. அங்கு அளவு எடுப்பது முதல் கட்டிங், டெய்லரிங் என அனைத்தும் கற்றுக் கொள்ள முடிந்ததால், வீட்டில் இருந்தபடியே வாடிக்கையாளர்களுக்கு தைத்து கொடுக்க ஆரம்பித்தேன். நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என அனைவரும் ஆர்டர் கொடுத்தார்கள்.
இதற்கிடையில் குழந்தைகளும் வளர்ந்துவிட்டதால், வீட்டருகே ஒரு கடையினை வாடகைக்கு எடுத்து செயல்படுத்த ஆரம்பித்தேன். ஒரு தையல் மெஷின் போட்டு கட்டிங், தையல் என அனைத்தும் நான் மட்டுமே பார்த்து வந்தேன். ஆர்டர்கள் வரத் துவங்கியதும் என் ஒருத்தியால் மட்டுமே செய்ய முடியாது என்பதால் உடன் ஒரு பெண்ணை வேலைக்கு நியமித்தேன். இப்போது என் கடையில் 40 பேர் வேலை பார்க்கிறார்கள். என்னுடைய வாடிக்கையாளர்கள் அதிகரிக்க காரணம் நான் தைக்கும் ஸ்டைல் அவர்களுக்கு பிடித்திருந்ததுதான்’’ என்றவர், 2003ல் இந்த பொட்டிக்கினை துவங்கியுள்ளார்.
‘‘எனக்கு கட்டிங் மற்றும் தைக்க தெரியும் என்பதால், ஒவ்வொரு பிளவுசினையும் நானேதான் டிசைன் செய்வேன். மேலும் மார்க்கெட்டில் இப்போது என்ன டிரெண்டிங் என்று தெரிந்து கொள்வேன். அந்த டிசைன்களை நான் வாடிக்கையாளர்களுக்கு தைத்துக் கொடுப்பேன். சிலர் அவர்களுக்கு வேண்டிய டிசைன்களை தைத்து தரச்சொல்லி கேட்பார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைசும் செய்து தருகிறேன்.
அந்த சமயத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பிய டிசைன்களை முதலில் பேப்பரில் வரைந்து காண்பிப்போம். அவர்களுக்கு அது பிடித்திருந்தால், டிசைன் செய்வோம். சிலர் அதில் சின்ன மாற்றங்கள் சொல்வார்கள். அதற்கு ஏற்ற மாற்றி அமைத்து தைத்து தருவோம். பிளவுசினை தைத்து முடித்தவுடன் எங்க கடமை முடிந்துவிடாது. அவர்களை
டிரையல் பார்க்க சொல்வோம். அதில் மாற்றங்கள் இருந்தாலும் அதையும் செய்து தருவோம். இவ்வாறு முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்க செயல்பட்டு வருவதால், பலரும் எங்களை நாடி வருகிறார்கள்.
நான் எம்பிராய்டரி மற்றும் ஆரி வேலைப்பாடுகளை கற்றுக் கொள்ளவில்லை. அதற்கென தனிப்பட்ட சிறப்பு டிசைனர்கள் என்னிடம் இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து கொடுப்பார்கள். ஆரி வேலைப்பாடுகள் சாதாரண துணியில் மட்டுமில்லாமல் நெட்டெட் துணியிலும் செய்யலாம். இப்போது நெட்டெட் துணியில் செய்வதுதான் ஃபேஷனாக உள்ளது. வரும் காலத்தில் வேறு துணிகளிலும் ஆரியினை வடிவமைக்கலாம். அதன் பரிணாமங்கள் மாறுமே தவிர இந்த வேலைப்பாடு என்றும் மாறாது. காரணம், இது முழுக்க முழுக்க கைகளால் செய்யக்கூடியது.
எம்பிராய்டரி போல் இயந்திரத்தில் செய்ய முடியாது. சாதாரண நூல், பட்டு நூல் இடையே மணி மற்றும் கற்கள் கொண்டு இருப்பதால் எம்பிராய்டரி வேலைப்பாட்டை விட ரிச் லுக்கினை கொடுக்கும். அதனால்தான் பெண்கள் பலரும் ஆரி வேலைப்பாட்டினை விரும்புகிறார்கள்’’ என்றவர், எந்தத் தொழிலாக இருந்தாலும் பிரச்னை இருக்கும்...
அதை சமாளித்து செயல்படுத்துவதுதான் புத்திசாலித்தனம் என்றார்.
‘‘பிரச்னை இல்லாத தொழிலே கிடையாது. வாடிக்கையாளரை திருப்திப்படுத்த வேண்டும். அவங்க கேட்கும் டிசைன்களை வடிவமைத்து தரணும். பெரும்பாலும் பலருக்கு செட்டாகும். ஆனால் 10% வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாமல் போக வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் அதை அவர்களுக்கு ஏற்ப செய்த தர தெரிந்திருக்க வேண்டும். சிலர் எல்லா விவரங்களையும் கேட்பார்கள். அதன் பிறகு வேண்டாம்னு சொல்லிடுவாங்க. இதனால் எங்களின் நேரம் விரயமாகும்.
இந்தப் பிரச்னைகளை எல்லாம் சமாளித்து விடலாம். ஆனால், இந்தத் தொழிலில் சமாளிக்க முடியாதது லேபர் பிரச்னை. ஒரு ஆர்டர் எடுக்கும் போது அதை எப்போது தர முடியும் என்று கணித்து அதற்கேற்ப திட்டமிடுவோம். திடீரென்று இரண்டு பேர் விடுமுறை எடுத்திடுவாங்க. சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு சென்றுவிடுவார்கள். அந்த சமயம் ஆர்டர்களை முடிக்க முடியாமல் தேங்கி போகும்.
வாடிக்கையாளர்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். வேறு டெய்லர்களையும் நியமிக்க வேண்டும். உடன் இருக்கும் மற்ற டெய்லர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அந்த சமயத்தில் சாதுர்யமாக செயல்பட வேண்டும். முக்கியமான ஆர்டர்களை முதலில் முடித்து, அதன் பிறகு மற்ற ஆர்டர்களை அடுத்தடுத்து முடித்து கொடுப்போம்’’ என்றவர், ஆரி வேலைப்பாட்டிற்கு கூடுதல் விலை நிர்ணயிக்கும் காரணங்களையும் விவரித்தார்.
‘‘ஆரி வேலைப்பாட்டிற்கு அதிக விலை நிர்ணயிக்க காரணம் அதில் செய்யப்படும் டிசைன்கள்தான். இதனை 1500 ரூபாயிலும் செய்து தர முடியும். ஜர்தோசி கற்கள், முத்து மணி வேலைப்பாடுகள் செய்யும் போது அதற்கான விலை மற்றும் லேபர் வேலையும் அதிகம். இவை முழுக்க கை வேலைப்பாடு மற்றும் நுணுக்கமாக செய்யக்கூடியவை. டெய்லரிங் விலையை விட லேபர் வாடகை அதிகம் என்பதால் தான் இந்த பிளவுசிற்கு அதிக கட்டணம் வசூலிக்கிறோம்.
நாங்க பிளவுஸ் மட்டுமில்லாமல் சல்வார், கவுன் என பெண்களுக்கான அனைத்து உடைகளும் தைத்து தருகிறோம். எங்களின் முக்கிய ேநாக்கம் வாடிக்கையாளர்களின் தேவையினை பூர்த்தி செய்ய வேண்டும். பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்றார் ரேவதி.
தொகுப்பு: ஷன்மதி