கனவில் தொடங்கிய கலைப் பயணம்!
நன்றி குங்குமம் தோழி
‘‘கடல் கடந்தும் கலையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் நிலை கொண்டதால், எனது கலைப் படைப்புகளை துபாயிலும் செய்து வருகிறேன்’’ என்கிறார் சுஜிதா ப்ரியா.
‘‘திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை முதுமுத்தன் மொழி என்ற ஊர்தான் என்னுடைய பூர்வீகம். அப்பாவும், அம்மாவும் இணைந்து துபாயில் தொழில்நுட்ப சேவை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அதனால் நானும் துபாயில்தான் வசித்து வருகிறேன். அங்குள்ள பள்ளி ஒன்றில் 2 படிக்கிறேன். எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். அவன் 9ம் வகுப்பு படிக்கிறான்.
எனக்கு ஓவியம் மேல் எப்படி ஆர்வம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஒருநாள் வீட்டில் இருக்கும் போது, பொழுதுபோக்காக ஒரு குரங்கு படத்தைப் பார்த்து அதை அப்படியே வரைந்து அம்மாவிடம் காண்பித்தேன். அப்போதுதான் அம்மாவிற்கு தெரிந்தது எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருக்கிறது என்று. என்னை மேலும் வரைய ஊக்குவித்தார். 3 வயதில் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டேன். அதில் ‘எனது கனவு இல்லம்’ என்பதுதான் தலைப்பு.
அதை முதற் கொண்டு ஓவியம் வரைய வேண்டும். ஒரு சிறிய வீடு, அதனைச் சுற்றி அழகான தோட்டம், இரண்டிற்கும் நடுவில் அப்பா, அம்மா, தம்பி என மூவரையும் சேர்த்து வரைந்தேன். அதற்கு எனக்கு பரிசு கிடைத்தது. நான் வரைந்த முதல் ஓவியத்திற்கு கிடைத்த முதல் பரிசு என்று நினைக்கும் போது அந்தத் தருணத்தை இன்றும் என்னால் மறக்க முடியாது. அன்று கனவு இல்லத்தோடு தொடங்கிய எனது கலைப் பயணம் இன்று நிஜமாக மாறிவருகிறது.
எனது ஒவ்வொரு கலைப்பணியிலும் தனித்துவம் இருக்க வேண்டும் என்று விரும்புவேன். அதனால் என்னுடைய ஓவியத்தில் பல்வேறு புதுமைகளைப் புகுத்துவேன். பென்சில், ஸ்கெட்ச், அக்ரிலிக், ஆயில், வாட்டர் கலர் போன்ற பலவற்றில் ஓவியங்கள் வரைய எனக்குப் பிடிக்கும். ஒவ்வொரு உருவத்திலும் உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். அண்மையில் ஆயில் பெயின்டிங் மூலமாக நான் வரைந்த தஞ்சை பெரிய கோயில் ஓவியம் என் மனசுக்கு மிகவும் நெருக்கமான ஓவியம் என்று சொல்ல வேண்டும். இதை முடிக்க எனக்கு 160 மணி நேரம் பிடித்தது. அந்த ஓவியத்தை துபாயில் நடைபெற்ற கண்காட்சியில் வைத்தேன். நல்ல வரவேற்பினை பெற்றது. பலரும் பாராட்டினர். மேலும், என்னுடைய ஓவியம் வரையும் திறமையை நான் அப்டேட் செய்து கொண்ேட இருப்பேன். அதன் மூலம் பல புதிய நுட்பங்களை நான் என் ஓவியத்தில் வெளிப்படுத்துவேன்’’ என்றவர் இரண்டு முறை கின்னஸ்
சாதனையில் இடம் பெற்றுள்ளார்.
‘‘பள்ளிப் பாடங்கள், புத்தகம் வாசிப்பு, உடற்பயிற்சிக்கு இடையே கிடைக்கும் இடைப்பட்ட நேரங்களை ஓவியங்களுக்காக ஒதுக்கி வருகிறேன். எங்கு ஓவியப் போட்டி நடைபெற்றாலும் அதில் கலந்து கொள்வேன். அது நேரடியாக இருந்தாலும் சரி, ஆன்லைனில் இருந்தாலும் சரி. தவறாமல் விண்ணப்பித்துவிடுவேன். போட்டிகளில் கலந்துகொள்ளும் போது, அங்கு வேறு ஓவியர்களின் திறமையினை பார்க்க முடியும். அதன் மூலம் என் கலைத் திறமைகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பிறரிடமிருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள், புதிய யோசனைகள், நுட்பங்களை சோதனை செய்ய உதவுகின்றன. எவ்வளவு வேலை இருந்தாலும் சில மணி நேரம் ஓவியம் வரைவதற்காக ஒதுக்கிவிடுவேன். கலை, கல்வி இரண்டும் என் கண்கள்.
நான் பல ஓவியங்களை வரைந்திருந்தாலும் என்னுடைய நினைவுகளை என்றும் மறக்காமல் வைத்திருக்கும் ஓவியம் நான் வரைந்த என்னுடைய பாட்டியின் ஓவியம். அவர் இப்போது இல்லை. ஆனால், அவருடன் நான் இருந்த காலங்கள் என் மனதில் இன்றும் நீங்காமல் இருக்கிறது. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தான் அந்த ஓவியத்தை உருவாக்கினேன்’’ என்றவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா பெறும் முயற்சியில் உள்ளார்.
‘‘ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கும் கோல்டன் விசா, வெளிநாட்டினருக்கு நீண்ட கால வதிவிட உரிமைகளை வழங்கும் ஒரு சிறப்பு வகை விசா. தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், மாணவர்கள் மற்றும் திறமையானவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை வதிவிட உரிமையை இந்த விசா வழங்குகிறது. அதனை பெறும் முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன். சர்வதேச அளவிலான கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளேன். மேலும், பல விருதுகளை பெற்றிருக்கிறேன். என் கலைத் திறமை மூலம் சமூக சேவையில் என்னுடைய பங்களிப்பினை அளித்து வருகிறேன்.
தன்னார்வத் தொண்டு அமைப்பின் மூலம் புற்றுநோயுடன் போராடும் குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் டிஜிட்டல் அட்டைகளை உருவாக்கியுள்ளேன். பெண்களை தாக்கும் மார்பகப் புற்றுநோய் சார்பாக, மார்பக ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அதன் பராமரிப்பு விழிப்புணர்வு நிகழ்வில் ஓவியம் வரைந்து கண்காட்சி நடத்தினேன். என் கலைச் சாதனைகளைத் தாண்டி, சமூக நலனுக்காக கலை மூலம் நான் செய்யும் பங்களிப்பு என் வாழ்க்கையின் முக்கியப் பகுதியாக உள்ளன’’ என்றார் சுஜிதா ப்ரியா
தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்