பன்முகத் திறமையில் மிளிர்ந்து வரும் இளம் மங்கை!
நன்றி குங்குமம் தோழி
நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்பவர்களுக்கு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர் தான் சந்தியா மணிகண்டன். இவர் பட்டங்கள் பல பெற்றிருந்தாலும், அதோட நில்லாமல், பல்வேறு கலைகளையும் கற்றுக்கொண்டு பல்துறையில் அசத்தி வருகிறார். இருபத்தி ஏழே வயது நிரம்பிய சந்தியா, சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர். ஆசிரியர், நடனக் கலைஞர், இசை வல்லுநர், கையெழுத்து மற்றும் ஓவியப் பயிற்சியாளர், பல்வேறு மொழியியல் வல்லுனர் என பன்முகத் திறமையாளராக திகழ்ந்து வருகிறார். ‘சந்திரா அகாடமி’ என்ற பெயரில் பயிற்சி பள்ளி அமைத்து அதில் அனைத்து கலைகளையும் சொல்லித் தருகிறார்.
கற்பித்தல் மற்றும் கற்பிப்பது...
நான் ரொம்ப சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவள். எனது தாயார் சீனியர் சப்இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அவர்தான் எனது கற்றலுக்கும் பல்துறை சாதனைகளுக்கும் தூண்டுதலாக இருந்தார். நான் பள்ளியில் படிக்கும் போதே தமிழோடு ஆங்கிலம், இந்தி என பல மொழிகளை பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டேன். தனி பயிற்சியாக பிரெஞ்ச் மற்றும் சமஸ்கிருதமும் பயின்றேன். மேல்நிலைப்பள்ளி முடித்த பிறகு நான் வீட்டிலிருந்தே டியூஷன் வகுப்பு எடுத்தேன். அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு மேற் கல்விகளை படித்தேன்.
நான் பி.எஸ்.ஸி, பி.எட் மற்றும் எம்.பி.ஏ படித்துள்ளேன். இந்தியில் டிப்ளமோ மற்றும் எம்.ஏ முடித்துள்ளேன். இதுவரை ஐந்து டிப்ளமோ கல்வியை முடித்துள்ளேன். தற்போது கல்விக்கான டியூஷன் மற்றும் அபாகஸ் போன்ற தனி வகுப்புகள், மொழி வகுப்புகள் என வேளச்சேரியில் எடுத்து வருகிறேன். கல்வி மட்டுமில்லாது கலைகளிலும் எனக்கு ஆர்வம் உண்டு. அதையும் சிறுவயது முதல் முறைப்படி பயின்றேன். பரதநாட்டியம், வாய்ப்பாட்டு மற்றும் இசைக் கருவி பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறேன். இந்தி மொழிக்கான பயிற்சிக்கு மட்டுமே ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். அதே போன்று கையெழுத்து, ஓவியம் மற்றும் போனிக்ஸ் வார்த்தைகளை உச்சரிப்பது என அனைத்துப் பயிற்சிகளும் அளித்து வருகிறேன்.
கலை ஆர்வம்...
என்னுடைய ஐந்து வயது முதல் பரதநாட்டியம் கற்று வருகிறேன். எட்டாவது வயதில் அரங்கேற்றம் நடைபெற்றது. எனது குரு மலர்கொடி விஜயராகவன் அவர்களிடம்தான் முறையாக
பரதம் பயின்றேன். தற்போது பரதக்கலையை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வருகிறேன். 200க்கும் மேற்பட்டவர்கள் என்னிடம் பயிற்சி பெற்றுள்ளனர். பரதக் கலைக்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களின் கையால் கின்னஸ் விருது பெற்றது மறக்க இயலாத அனுபவம்.
இந்த கின்னஸ் சாதனைக்காக 365 நாளும் தொடர்ந்து ஒரு மணிநேரம் ஆடவேண்டும். இதுவொரு மிகச்சிறந்த அனுபவம்தான். இதற்காக விருதுடன் கோல்டு காயின் பரிசும் பெற்றேன். அதே போன்று சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்ட விழாவில் வரவேற்பு நடனமாடியதும் மறக்க இயலாத தருணங்கள்.
பயிற்சி வகுப்புகள்...
வேளச்சேரியில் நேரிடையாக பயிற்சி எடுக்கிறேன். ஆன்லைன் பயிற்சியும் அளிக்கிறேன். அமெரிக்கா, கத்தார், அபுதாபி, துபாய், ஐப்பான், லங்கா, ரஷ்யா, நெதர்லாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளில் இருந்து ஆன்லைன் மூலம் பரதம் கற்று வருகிறார்கள். இந்தியாவில் சட்டீஸ்கர், லக்னோ, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரியிலும் எனக்கு மாணவர்கள் உள்ளனர்.
கல்வி மற்றும் கலைகளில் ஆர்வம் கொள்ள காரணம் என்னுடைய தாயார் தான். எனக்கு நல்ல கல்வியையும், பல்வேறு கலைகளையும் கற்றுக்கொள்ள பெரிதும் ஊக்குவித்தார். என்னை இவ்வளவு தூரம் உயர்த்தியதில் அவரின் பங்கு அளவிட முடியாதது. எனது கணவர் சாஃப்ட்வேர் பணியில் இருந்தாலும், அம்மாவை தொடர்ந்து அவரும் எனக்கு பெரிய சப்போர்ட்டாக இருக்கிறார். இதுவரை 100க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளேன். பல்வேறு கலைகளையும் கற்றுக்கொள்ள ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும், அதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது கிடைக்கும் மனநிறைவுக்கு அளவே கிடையாது. மேலும் கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு இலவசமாக சொல்லித் தருகிறேன்’’ என பெருமிதத்துடன் பகிர்ந்தார் சந்தியா மணிகண்டன்.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்