தடைகளை தாண்டி வென்ற மாணவி!
நன்றி குங்குமம் தோழி
உழைப்புதான் நம் ஒவ்வொருவரின் கனவுகளை நிறைவேற்றும். கனவிற்கேற்ப உழைப்பு இருந்தால் எந்த துறையிலும் ஜொலிக்கலாம். நமக்குள் இருக்கும் பயத்தை தூர வீசி விட்டு முழு முயற்சியோடு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்கிறார் ஸ்ரீ வர்த்தினி. சமீபத்தில் உத்ரகாண்டில் தேசிய அளவில் நடைபெற்ற 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் ஸ்ரீ வர்த்தினி. உலக தரவரிசைப் பட்டியலில் 10வது இடத்தில் இருக்கும் இந்த வீர மங்கையிடம் வெற்றி குறித்து உரையாடிய போது...
‘‘உடுமலைப்பேட்டை அருகே உள்ள கிராமத்தில்தான் நான் பிறந்தேன், வளர்ந்தேன். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தற்போது திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறேன். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் அப்பாதான் என்னை தினமும் பள்ளிக்கூடம் அழைத்து போவார். அதே போல் பள்ளி விட்டதும் அப்பாவிற்காக காத்திருப்பேன். பள்ளி முடிந்த பிறகு அங்கு கிரவுண்டில் ஒவ்வொரு விளையாட்டிற்கும் பயிற்சி அளிப்பாங்க. நான் அப்பா வரும் வரை அவங்க விளையாடுவதை பார்த்துக் கொண்டு இருப்பேன். அதில் ஓட்டப்பந்தயத்திற்கான பயிற்சி தினமும் நடைபெறும். மாஸ்டர் ஆணை பிறப்பித்ததும், எல்லோரும் ஓட ஆரம்பிப்பாங்க.
அவங்க வேகமாக ஓடுவதைப் பார்க்க எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. எனக்கும் ஓட வேண்டும்னு ஆசை வந்தது. அப்பாவிடம் சொன்ன போது அவரும் விருப்பம் இருந்தால் பள்ளியில் பயிற்சி எடுத்துக் கொள்ள சொன்னார். நானும் பயிற்சியில் கலந்து கொள்ள ஆரம்பிச்சேன். வேகமாக ஓடவும் தொடங்கினேன். என்னுடைய வேகத்தைப் பார்த்து என் மாஸ்டர் என்னை ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொள்ள சொன்னார். நானும் முதலில் மாரத்தான் போட்டிகளில் கலந்துக்க தொடங்கினேன்.
தினமும் அதற்கான சிறப்பு பயிற்சிகள் எடுக்க தொடங்கினேன். மாரத்தான் போட்டி என்பது நீண்ட தூரம் சலிப்பில்லாமல் ஓடணும். மற்ற ஓட்டப்பந்தயம் போல் வேமாக ஓட முடியாது. நிதானமாக அதே சமயம் வெற்றி இலக்கை அடையணும். அதனால் அதற்கான பயிற்சிகளை எடுத்தேன். போட்டியில் பங்கேற்கவும் செய்தேன். ஆரம்பத்தில் என்னால் ஜெயிக்க முடியல. ஆனால் அடுத்தடுத்த போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறவும் துவங்கினேன். அந்த வெற்றி என்னை ஓட்டப்பந்தயங்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது’’ என்றவர், இது வரை 50க்கும் மேற்பட்ட மாரத்தான் போட்டியில் பங்கு பெற்றுள்ளார்.
‘‘போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டிருந்த நேரத்தில்தான் எனக்கு சின்னதா ஒரு விபத்து ஏற்பட்டது. அதனால் என்னால் ஓட முடியாமல் போனது. என் கால் சரியாகும் வரை வீட்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. உடல் நிலை சரியானதும் மீண்டும் ஓட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் என் வீட்டில் என்னை திருப்பூருக்கு படிப்பதற்காக அனுப்பிட்டாங்க. அங்கு போன பிறகு படிப்புடன் சேர்த்து தடகள விளையாட்டிற்கான பயிற்சியும் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன். பயிற்சியாளர் அழகேசன் அவர்கள் எனக்கு தடை தாண்டும் போட்டிக்கான பயிற்சி கொடுக்க தொடங்கினார்.
பயிற்சிக்கு ஏற்ப உணவும் அவசியம். ஆனால் விடுதியில் நமக்காக சிறப்பு உணவு எல்லாம் தயாரிக்க மாட்டாங்க. அதனால என் பெற்றோர் எனக்காக திருப்பூருக்கு வந்துட்டாங்க. எங்க அப்பாவும் அவரின் தொழிலை திருப்பூருக்கு மாத்திட்டார். என் ஒருத்திக்காக குடும்பமே மாறுவதை பார்த்த எங்க ஊர்க்காரங்க பொண்ணை ஓட வச்சிட்டு இவங்களும் ஓடிட்டு இருக்காங்கன்னு சொல்லி கிண்டல் செய்வாங்க. அம்மா, அப்பா இருந்த தைரியத்தில் நான் அதிகமாவே பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். ஒரு வருடம் தீவிரமா பயிற்சி எடுத்தேன். காலை 5 டூ 8 மணிக்கு பயிற்சிகள் இருக்கும். அதன் பிறகு 10 மணி ஜிம்மில் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சிகள் செய்வேன்.
மறுபடியும் 5 மணிக்கு பயிற்சிகள் துவங்கும். பயிற்சிகள் நடுவே கிடைக்கும் இடைப்பட்ட நேரத்தில் படிப்பு. எனக்கு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் இருப்பதால் கல்லூரியும் எனக்கு முழு ஆதரவு கொடுத்தாங்க. அதனால் என்னால் அனைத்து பாடங்களிலும் தேர்வு பெற முடிந்தது. இதுவரை நான் பங்கு பெற்ற மாரத்தான் போட்டிகளில் 5 கிலோ மீட்டர் வரை ஓடியிருக்கிறேன். இந்தப் போட்டியை பொறுத்தவரை அதிக தூரம் ஒரே மாதிரி ஓட வேண்டும்.
அதனால் அதற்கு ஏற்ப என் உடல் மாறியிருந்தது. தற்போது தடகளப் பயிற்சிகள் எடுத்து வருவதால், அதற்கேற்ப என் உடலை மாற்றி அமைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். 800 மீட்டர் ஓட்டப் பந்தயங்களுக்கு பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். இதில் வேகமாகவும் உடலை வளைத்து ஓட வேண்டும் என்பதால் அதற்கென தனிப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டேன். என்னை முழுமையாக மாற்றிக் கொள்ள ரொம்பவே கஷ்டமா இருந்தது. குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஓடுவது சிரமமாக இருக்கும்.
ஆனால் அழகேசன் சார் அந்த நேரங்களில் பயிற்சி எடுத்தால்தான் மற்ற நாட்களில் பயிற்சி எடுப்பது போல இருக்கும்னு சொல்வார். அவர் சொன்னது போலவே இப்போது எனக்கு மாதவிடாய் நாட்களும் சாதாரண நாட்கள் போல இருக்கிறது. பல நாள் பயிற்சி பெற்றும் போட்டியில் என்னால் முதல் மூன்று இடத்தை பிடிக்க முடியவில்லை. அது எனக்கு பெரிய மன உளைச்சலை உண்டாக்கியது. ஆனால் என் கோச்தான் உத்வேகம் கொடுத்து ஓட வைத்தார்.
அதே போல் வெளிமாநிலங்களில் நடக்கும் போட்டியில் பங்கு பெற என்னிடம் போதிய பணம் இருக்காது. அவர்தான் அதற்கான ஸ்பான்சரும் ஏற்பாடு செய்து கொடுத்தார். 2019, சென்னையில் நடந்த போட்டியில் 800 மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு பதிவு செய்ய இருந்த போது, திடீரென கோச் என்னை 400 மீட்டர் ஓடச் சொன்னார். நான் முதலில் பயந்தேன். காரணம், மற்ற இரண்டு போட்டிகளை விட 400 மீட்டர் போட்டிக்கு மிக வேகமாக ஓட வேண்டும்.
என்னால் அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியுமா தோற்று விடுவோம் என்ற அச்சத்துடன்தான் களத்திற்கு சென்றேன். ஆனால் என் கோச் என்னை அதற்காகவும் தயார் செய்திருந்தார் என்பதை அன்று தான் தெரிந்து கொண்டேன். அதில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். அந்தப் போட்டி என்னை மனதளவில் மாற்றியது. அடுத்தடுத்த போட்டிகளில் துணிந்து இறங்கினேன். பதக்கங்களை குவித்தேன். தற்போது உத்ரகாண்டில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதோடு, உலக தர வரிசைப் பட்டியலில் 10வது இடமும் ஆசிய அளவில் 3ம் இடத்திலும் இருக்கிறேன். இது என் உழைப்புக்கும் என் பெற்றோர் மற்றும் கோச் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் கிடைத்த பரிசுன்னுதான் சொல்லணும்’’ என பெருமை பொங்க சொல்கிறார் ஸ்ரீ வர்த்தினி.
தொகுப்பு : மா.வினோத்குமார்