பாலின பேதங்கள் ஒரு பார்வை
தனி மனிதரை பிளக்கும் பிரிவினைகள்
மனிதர்கள் அனைவரும் மனிதராக மட்டுமே பார்க்கப்படும் சமூகம் கண்டிப்பாக அத்தனை மனிதர்களுக்கும் நன்மையையே பயக்கும். ஆனால், மாறாக இங்கு மனிதர்கள் பலவழிகளில் பிளவுபட்டுக்கிடக்கும் நிலையே பல்லாண்டு காலங்களாக இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே!ஓர் உலகம் என்பது பிரிந்து பல நாடுகளாக உருவெடுத்து, நாடுகளுக்குள் மாநிலங்கள் பல உருவாகி, அந்தந்த தட்பவெப்ப சூழல்களால் மனிதர்களின் தோல் நிறங்கள் வித்தியாசப்படுவதால் அந்த நிறத்தவர், இந்த நிறத்தவர் என்ற பாகுபாடுகள் உருவாகி, தெய்வம் என்ற ஒன்றை உருவாக்கி, தெய்வ வழிபாட்டு வித்தியாசங்களால் மதங்கள் பல உருவாக்கப்பட்டு, மொழிகளால் பிரிவினைகள் ஏற்பட்டு, அதற்கும் மேலே போய் அவரவர் செய்யும் தொழிலை வைத்து சாதிகள் எனப் பிரிக்கப்பட்டு, இன்னும் அடுக்கிக்கொண்டே போகும் அளவிற்கு மனிதர் என்ற ஒரே இனம் இத்தனை பிளவுகளுக்கு ஈடு கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வில், மனித இன பெருக்கத்திற்காக இயற்கையே உருவாக்கி வைத்திருக்கும் ஆண்/பெண் உருவங்கள் பிளவுபட்டுக்கிடப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்.
சற்றே சிந்தித்தோமானால் ஆறறிவு எனப் பெருமைப்பட்டுக்கொள்ளும் நம் அறிவால் நம்மால் உணர முடியும். இத்தனை பிளவுகளுக்கும் ஏதோ சில தனிமனிதர்களின் சுயநலமே சூழ்ச்சியாக
உருவெடுத்து, நம் அறிவுகளை மழுங்கடிக்க வைத்திருக்கிறது என. ஆனால் நாமும் சிறிதும் சிந்திக்காமல் அப்பிரிவினைகளை சுமந்து கொண்டு அலைவதால், சுயநலத்திற்காக இவற்றையெல்லாம் காப்பாற்றிக்கொண்டிருக்கும் சில தனிமனித கூட்டம் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் இங்கு அவசியமேயில்லாத சுமைகளை சுமந்தலைந்து, நாமும் நிம்மதியாக வாழாமல், மற்றவர்களின் வாழ்வையும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறோம்.
ஓர் உலகில் இருக்கும் நாமெல்லாம் சமூகமாக, குடும்பமாக இணைந்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இயைந்துதான் வாழ்கிறோமா என்றால் இல்லை. ஒவ்வொருவர் மனதிலும் ஆயிரம் பிரச்னைகள், குழப்பங்கள், ஒவ்வாமைகள், வன்மங்கள், வெறுப்புகள், வேதனைகள் என்று நம்மைச் சுற்றியிருக்கும் அத்தனை மனிதர்களுடனும் ஏதோ ஒரு பிணக்கத்தில்தான் காலம் தள்ளுகிறோம். இவ்வனைத்திற்கும் ஒரே காரணம் நாமெல்லாம் சமூக ஒற்றுமை என்ற பெயரில், மனிதர் அவரவருடனேயே பிளவுபட்டு வாழும் வாழ்வை திணித்திருக்கிறோம். தனக்குள் தானே பிளவுபட்டு வாழும் தனி மனிதர் எப்படி தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தில் ஒற்றுமையை விளைவிக்க இயலும்?
இங்கு பலவகையான பிரிவுகள் மனிதர்களின் உணர்வுகளை, மகிழ்வாக வாழும் இயற்கையான உந்துதல்களை அழித்துக்கொண்டிருந்தாலும், இந்தக் கட்டுரையானது பாலின பேதங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதினால், அதைக்குறித்து பேசுவதற்கும், அப்பேதங்களை ஒழிப்பதற்கும், இன்னும் இன்னும் நிறைய புரிதல்களும், புரிதல்களின் அடிப்படையில் நாம் கடக்க வேண்டிய தூரங்களும் அதிகம் இருப்பதாலும், அதைக் குறித்து மட்டுமே இக்கட்டுரைகள் வாயிலாக விவாதிப்போம்.
நாமெல்லாம் கற்றவர்கள் அல்ல. நாமெல்லாம் கற்பிக்கப்பட்டவர்கள். இந்த உண்மையை முதலில் நாம் அறிய வேண்டும். அறிந்த பிறகு, அதை ஒப்புக்கொள்ளவும் வேண்டும். ஒப்புக்கொண்ட பிறகு, நாமே கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும், அனுபவங்களும், அறிவாற்றலும் நமக்கு இருக்கையில், நம் அனுபவ வழி, நம் பார்வை வழி இவ்வுலகையும், வாழ்வையும் நாம் கற்றுக்கொள்ளத் தொடங்கினால், நமக்கு கற்பிக்கப்பட்ட, மற்றவர்களின் சுயநலத்திற்காக நம்மீது திணிக்கப்பட்ட பல பார்வைகளிலிருந்து நாம் வெளிவருவதுமில்லாமல், நம்முடனே நாம் பிளவுபடாமல், நம்முடனே நாம் ஒற்றுமையாக வாழக் கற்றுக்கொள்வோம், நம்முடனேயான நம் ஒற்றுமையே மற்றவருடனான நம் ஒற்றுமையையும் நிர்ணயிக்கிறது என்ற உண்மையையும் நாம் உணர்வோம்.
நாம் ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை மட்டுமே இருப்பதாக அறிவித்திருக்கும் அத்தனை உயிரினங்களும், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று மட்டும்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவை எப்பொழுது மற்ற உயிரினங்களை நோக அடிக்கின்றன என்று பார்த்தால், தன் பசியை போற்றிக் கொள்ள வேண்டியோ அல்லது தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற நிலையிலோ மட்டும்தான்.
ஆனால் மனிதன் என்ற ஆறறிவன் மட்டும்தான், தான் வாழ, அதுவும், தான் எல்லோரையும்விட மேல் மட்டத்தில், தான் உருவாக்கி வைத்திருக்கும் அத்தனை செளகரியங்களுடன் வாழும் நோக்கத்துடன், ஏனைய மனிதர்களை தன் விருப்பங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கடவுள், சாத்தான், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்ற பல அச்சுறுத்தல்களை முன்னிறுத்தி, தன்னை ஆண்டானாகவும், மற்றவர்களை அடிமைகளாகவும் உருவகப்படுத்தி, அவற்றையெல்லாம் அச்சத்தினால்தான் ஏற்கிறோம் என்ற உண்மையை கூட உணராமல், உண்மையென பொய்களை ஏற்று, அடிமைகளாக வாழவும், நாம் நம் அறிவை கழற்றி வைத்துவிட்டு, நம் வாழ்வை ஒப்புக்கொடுத்துவிட்டோம்.
இதைத்தான் இங்கு பெண்களும் செய்திருக்கிறார்கள். ஏழை, பணக்காரன், படித்தவர், படிக்காதவர், சாதி, மதங்கள், நாடுகள் என எத்தனை பிரிவினைகள் இருப்பினும், எந்தப்பிரிவில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும், பெண் என்பவள் அத்தனையிலும் அடிமையாகவே இருக்க வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதே நிதர்சனம். அவள் தான் அடிமைதான் என அவளே மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் வகையில் அத்தனை கபட நாடகங்கள் உலகெங்கிலும் அரங்கேயிருக்கிறது. இன்னும் பல்லாண்டு காலங்களாக அந்த நாடகங்கள் நடத்தப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. அதன் தாக்கங்களிலிருந்து இன்னும் பெரிதாக பெண்கள் வெளிவரவில்லை என்பதற்கு இங்கு ஆயிரம் சாட்சியங்கள் இருக்கின்றன.
இத்தாக்கங்களிலிருந்து அங்குமிங்குமாக சிறிது சிறிதாக தங்களின் திறமைகள், தங்களின் ஆற்றல்களை அடகுவைக்க விரும்பாத, தன் பாட்டிகள், அம்மாக்கள் போல் முடங்க விரும்பாத சிலப் பெண்கள் வெளிவர முற்படுகையில், அதற்கு முட்டுக்கட்டாக சில பெண்களே நிற்பதும், எங்கு தங்கள் இடங்களை அவர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டால், தங்களுக்கு அடிமைகள் சிக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் பல ஆண்கள் குறுக்கிடுவதும், இதெல்லாம் போக, தங்களின் அரசியல் நோக்குகளால், கலாச்சாரம் என்ற பெயரில், இன்னும் இன்னும் பெண்களை முடக்கிப்போடும் செயலாக சில அரசாங்கங்கள் முனைப்பெடுப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில், பெண்களின் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்குமான ஒரு தனிப்பட்ட போராட்டமாகவே இருக்கிறது என்றால் அது மிகையில்லை.
தன் வீட்டு வாசலுடன் நிற்கும் பெண்ணைத்தாண்டி, ஒரு பெண் தன் தெருவில் காலடி வைக்க ஒரு போராட்டம் குடும்பத்தில் தொடங்கும். பிறகு தெருவைத் தாண்டி ஊருக்குள் செல்ல வைக்கும் அடியில் பல அடிகள் விழும். அத்தனையும் தாண்டி தனக்கென ஒரு படிப்பு, தொழில், வேலை, எல்லாவற்றையும் போராடி போராடி அடைவதே பல போராட்டங்களின் முடிவாகத்தான் இருக்கும். இதற்கு மேல் தொழிலிலோ இல்லை கலையிலோ முன்னேற்றம் கொள்ள இன்னும் பல தடைகளையும், முற்களையும், கற்களையும் கடந்துதான் வரவேண்டியிருக்கிறது. ஒரு சிறிய சதவிகிதத்து பெண்களுக்கே இத்தனை போராட்டங்களுக்கும் திராணியிருக்கிறது. சிலருக்கு ஆசைகள் இருந்தாலும், வெளிவர அத்தனை சுலபமாக இயலாததால் முடங்கிப் போகிறார்கள்.
உளவியல் ரீதியாக பார்க்க வேண்டியிருக்கிறது இங்கு நடக்கும் இந்த அதிகாரம் செய்கிற, அடிமைப்படுகிற செயல்களை. ஆண்களுக்கு பெண்களின் மீதான அச்சம், எங்கே அவர்களுக்கு சுதந்திரம் இருந்தால், தங்களுக்கு அடங்காமல் போய்விடுவார்களோ, அவர்களை அடிமைகளாக கொண்டிருப்பதால் கிடைக்கும் செளகரியங்கள் கைநழுவிப்போய்விடுமோ என்ற அச்சம். இங்கு நான் அடிமைப்பட மாட்டேன், எனக்கான சுதந்திரத்தை கையில் எடுத்து என் வாழ்வை வாழ்வேன், என்னுடன் நீ நின்றால் இருவரும் முன்னேறலாம், இல்லையென்றாலும் என் முன்னேற்றத்தை நீ தடுக்க இயலாது என்றிருக்கும் பெண்கள் சமூகத்தில் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள். இனியும் இவர்களை அடிமைப்படுத்த இயலாது என்ற புரிதலை ஆண்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் ஏதுவாக இருப்பவர்கள்.
ஆனால், தான் வெளியிலும் வராமல், தன் சுதந்திரத்தையும், அதனுடனான பொறுப்பையும் ஏற்கத் துணிவில்லாத பெண்கள், எங்கே நமக்கில்லாத சுதந்திரத்தை ஆண் மட்டும் கொண்டிருந்தால், தன் அம்மா, பாட்டி, மற்ற பெண்கள் போல் தான் அடிமைப்பட்டு கிடந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், ஆண்களை அடிமைப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார்கள். சிலர் பல்லாண்டு காலங்களாக அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்களின் சார்பாக, தான் நிற்க வேண்டுமென்ற உந்துதலில், அடிமைப்படுத்தும் ஆண்களின் பிரதிநிதியாக தங்கள் வீட்டு ஆண்களை கற்பனை செய்துகொண்டு அவர்களின் சுதந்திரத்தை பறிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
இப்படியாக ஏதோ ஒரு பாலினத்தவர் இன்னொரு பாலினத்தவரை ஆள்வதும் அடிமைப்படுவதுமாக காலங்கள் சென்று கொண்டே இருக்க, இதில் மற்ற பாலினங்களை புரிந்து அங்குமிங்குமாக கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் ஏற்று நடப்பது பெருகிக்கொண்டிருந்தாலும், இன்னும் பாலின சமத்துவம், சமூகம் என்ற கனவு உண்மையாவதற்கு, இன்னும் நாம் வெகுதூரம் கடக்க வேண்டியிருக்கும் ஒரு நீண்ட பயணமே!
(தொடர்ந்து சிந்திப்போம்!)
தொகுப்பு: லதா