விளக்காய் ஒளிர்ந்த கல்வியாளர்!
நன்றி குங்குமம் தோழி
தமிழ்நாட்டின் கல்வித் துறையில் பெண்களின் பங்களிப்பை உயர்த்திய முன்னோடி கல்வியாளர், எழுத்தாளர், சமூகப் போராளி வே. வசந்திதேவி தனது 86 வயதில் காலமானார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், சமூகப் போராளிகள், வசந்திதேவி மறைவைக் கல்வித் துறையின் மிகப்பெரிய இழப்பாகக் குறிப்பிட்டு தங்களின் அஞ்சலியை பதிவு செய்தனர்.
40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கல்வி தளத்திலும், சமுதாய மாற்றத்திலும் விளக்காய் எரிந்து, தான் சென்ற பாதையை மட்டுமின்றி, பிறரின் பாதையையும் ஒளிரச் செய்த மிகச் சிறந்த கல்வியாளர். பெண்களின் கல்வி உரிமைக்காக, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டோருக்காக, வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்தவர்.கல்வியில் சமத்துவம், பெண்களின் உரிமை, சமூக நீதி ஆகியவை மறைந்த பேராசிரியர் வசந்திதேவி வாழ்வின் மூன்று தூண்கள்.
கல்வியாளர் வாழ்க்கை...
1938ல் திண்டுக்கல்லில் பிறந்த வே. வசந்திதேவி, சிறுவயதில் இருந்தே அறிவை நேசித்தவராய் வலம் வந்திருக்கிறார். அந்த நேசம், அவரை சென்னை ராணி மேரி கல்லூரி, பிறகு மாநிலக் கல்லூரி வழியாகப் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறும் உயர்வான பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
மாணவிகளின் ‘ஆசிரியரம்மா’...
ராணிமேரி கல்லூரியில் பேராசிரியராக இருந்த காலத்தில், அவர் மாணவிகளுக்கு அறிவை மட்டும் அல்ல, ஆற்றலையும், தன்னம்பிக்கையையும், சமூகப் பொறுப்பையும் விதைத்தவர். கல்வி மட்டுமின்றி, வாழ்க்கை நெறி, சமூகப் பொறுப்பு ஆகியவற்றையும் மாணவிகளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.1980களின் இறுதியில் உசிலம்பட்டி பெண் சிசுக் கொலைகளை, களத்துக்கே சென்று தரவுகளோடு ஆவணப்படுத்தினார். 1987ல் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற தமிழக ஆசிரியர் போராட்டத்தில், அச்சமின்றி பங்கேற்று, கல்வி நம் உரிமை, அது செல்வந்தர்களின் வசதியல்ல என்கிற தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
1988-1990களில் கும்பகோணம் மகளிர் கல்லூரி முதல்வராகவும் பின்னர் 1992-1998ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராகவும் பணியாற்றி, பல்வேறு கல்வி மாற்றங்களை மேற்கொண்டதுடன், நூற்றுக்கணக்கான மாணவிகளின் வாழ்க்கையில் நம்பிக்கையின் விதையை விதைத்தவர்.
சமூகப்பணி மற்றும் அரசியல் பங்கேற்பு...
2002-2005ல் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவராக பணியாற்றிய வசந்திதேவி, பாலின அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிராகப் பல்வேறு நட
வடிக்கைகளை எடுத்திருக்கிறார். பல பெண்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்தவர். ‘சக்தி பிறக்கும் கல்வி’, ‘கல்வி ஓர் அரசியல்’, ‘மக்கள் மயமாகும் கல்வி’ போன்ற அவர் எழுதிய நூல்கள் அவர் பேசிய சிந்தனைகளின் உயிருள்ள சான்றுகளாய் இருக்கிறது.
அரசியலிலும் தனது குரலை வெளிப்படுத்த அவர் தவறவில்லை. 2016ல் ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக நின்று போட்டியிட்டது, அவரின் கொள்கை நிலைப்பாட்டுக்கான தைரியத்தின் அடையாளமே. ‘அரசியல் எனக்குப் புதிதல்ல, நான் எப்போதுமே ஏதோ ஒரு வகையான அரசியலில் இருக்கிறேன். தேர்தல் அரசியல்தான் எனக்குப் புதிது’ என்ற தனது கருத்தை ஊடகங்களில் அழுத்தமாகப் பதிவு செய்தார்.
கல்விக்கான அன்பு...
கல்வியை வணிகமயமாக்கக் கூடாது என்று எப்போதும் வலியுறுத்தினார். அரசுப் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மக்களின் நம்பிக்கையின் இடமாக மாற வேண்டும் என்பதே அவரது கனவாகவும் இருந்து வந்தது.
பணி ஓய்வுக்கு பின்னர் கற்றல் நலனுக்கான பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கி தொடர்ந்து சேவையாற்றி வந்தார். தமிழக அரசு உருவாக்கி உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவிலும் பங்களித்திருக்கிறார்.
நினைவில் என்றும்…
சமத்துவத்தின் பாதையில் கல்வியை கொண்டு சென்ற போராளி வசந்திதேவி அவர்களின் வாழ்நாள் பணி, பெண்களுக்கும், புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கும், கல்வி சமத்துவம் கிடைக்க வேண்டும் என்ற உறுதியின் சான்றாகும். அவர் போன்று, கல்வியை சமூக நீதி நோக்கி வழிநடத்தும் தலைவர்கள் காலமெல்லாம் தேவை. அவரது மறைவு, கல்வி உலகில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
இறுதி வணக்கம்!
வசந்திதேவி போல் வாழ்நாள் முழுவதும் சமூகத்துக்காக எரிந்தவர்கள் அரிது. அவரின் வாழ்வும் பணியும், பெண்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்டோரின் கல்வி உரிமைக்கான ஒவ்வொரு போராட்டத்திலும் நம்மை வழிநடத்தும் விளக்காய் நிச்சயம் இருக்கும். அவரின் கனவுகளை நிறைவேற்றுவதே, மறைந்த கல்வியாளர் வசந்திதேவிக்கு நாம் செலுத்தும் மிகச் சிறந்த அஞ்சலி.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்