நலம் யோகம்! உடலுக்கு ஒளி... மனதுக்கு அமைதி!
தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வதன் வழியே, மனதை ஒருநிலைப்படுத்துதல், கவனம் செலுத்துதல், தேவையான ஆற்றல் இவற்றைக் கொண்டுவர முடியும். வரும்முன் காத்தல், வந்த பிறகும் காத்தல் இதையெல்லாம் யோகா செய்யும் என்றாலும், அந்தந்த தனிப்பட்ட நபரின் மன உறுதி மற்றும் விடாமுயற்சியை பொறுத்தது இது. இதில் நமது உடல், மனம், மூச்சு, செயல் எல்லாம் ஒரு நிலையில் இருக்கும்.
இதைத்தான் living in the present என்கிறார்கள்,நமது ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் சீராக இல்லாத போது உடலில் சில குழப்பங்கள் நேரும். இதுவே வலியாகவும், நோயாகவும் மாறி, வேறொரு இயக்கத்திற்குள் நம் உடலைக் கொண்டு போகும். தொடர்ச்சியாக யோகாவை செய்ய ஆரம்பித்த ஓரிரு மாதங்களிலே பிரச்னைகளில் இருந்து மெல்ல விடுபடலாம்.
யோகாவில் பேஸிக், இன்டர்மீடியட், அட்வான்ஸ் என மூன்று நிலைகள் உண்டு. நமது உடல் எந்த அளவு அனுமதிக்கிறதோ, அதை மட்டும் செய்தாலே போதுமானது. நமது வாழ்க்கை முறைக்கு இன்டர்மீடியட் நிலைவரை போதும். யோகா ஆசிரியர் ஒருவரை அணுகி, முறையான மூச்சுப் பயிற்சியோடு சேர்ந்து ஆசனங்களை செய்யும் போது, யோகாசனங்களுக்கான பலன்களை அபரிதமாக அனுபவிக்க முடியும்.இந்த இதழில் இருந்து தோழி வாசகர்களுக்கு ஒவ்வொரு யோகாசனத்தையும் எப்படி செய்ய வேண்டும், அதில் கிடைக்கும் நன்மைகள் போன்றவற்றை படங்களுடன் விரிவாகவும், விளக்கமாகவும் கற்றுத்தர இருக்கிறேன்.
சிரசாசனம்
இதை ஆசனங்களின் அரசன் என்பார்கள். நினைவாற்றல் பிரச்னை, மூளை தொடர்பான அல்சைமர், பார்கின்சன்ஸ் போன்ற வார்த்தைகள் இன்று சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. இந்தப் பிரச்னைகளை எல்லாம் சிரசாசனம் தவிர்க்கும். சிரசாசனம் மனதை அமைதிப்படுத்துவதுடன், மூளையின் செயல்பாட்டை அதிகரித்து. நினைவாற்றலையும் அதிகரிக்கிறது.
சிரசாசனம் செய்து தலைகீழாக நிற்கும் போது, கிராவிட்டி ரிவர்ஸ் ஆகிறது. உதாரணத்திற்கு, உடலில் ஒரு டிஸ்க் பல்ஜ் இருக்கு எனில், புவிஈர்ப்பு விசை இழுப்பினால், இடைவெளி அதிகமாகலாம். தலை கீழாக நிற்பதன் வழியாக, வலி மீதான கிராவிட்டியின் தாக்கம் இடைவெளியை குறைக்கும். இரண்டாவது ரத்த ஓட்டத்தை, மேலிருந்து கீழாக மாற்றுவதால் மூளையில் உள்ள செல்களுக்கும் அதிகமான ரத்த ஓட்டம் பாய்கிறது.
மற்ற நாளமில்லா சுரப்பிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய முதன்மை நாளமில்லா சுரப்பியான(master endocrine gland) பிட்யூட்டரி (pituitary) மற்றும் பீனியல் (penial) சுரப்பிகள், மூளை செல்களுக்கு மையத்தில் இருப்பதால், இவை நல்லவிதமாய் வேலை செய்து, ஹார்மோன் இன்பேலன்ஸ் மற்றும் அதனால் தோன்றக்கூடிய நோய்களைத் தடுக்கின்றது. நமது தினசரி யோகாசனப் பயிற்சியில் சிரசாசனத்தை இணைத்துவிட்டால், கழுத்தில் தொடங்கி டெய்ல்போன் வரை, முதுகுத் தண்டுவடத்தில் எந்த இடத்தில் பிரச்னை இருந்தாலும், அது அதிகமாகாமல் தடுக்கவும், வலியை நிவர்த்தியாக்கவும் முடியும்.
சிரசானம் செய்வதற்கு பெரிய பயிற்சியோ, பெரிய வலிமையோ, எனக்கு இதை செய்ய பலமில்லை என்கிற சிந்தைனையோ தேவையில்லை. கைகளும், தோள்பட்டையும் கொஞ்சம் வலிமையாக இருந்தாலே போதுமானது. இதைச் செய்யும் முன், முறையான மூச்சுப் பயிற்சி, பிறகு மூட்டுகளைத் தளவுப்படுத்தும் பயிற்சி இவற்றை செய்தல் வேண்டும். தொடங்கும் போது உடல் சமநிலையின்மை(imbalance) நிலை ஏற்பட்டால், துணைக்கு ஒருவரை வைத்துக் கொண்டு செய்வதே நல்லது. செரிமானப் பிரச்னை, அசிடிட்டி, ஹை பீபி உள்ளவர்கள்
சிரசாசனப் பயிற்சியில் ஈடுபடக்கூடாது.
அர்த்த சிரசாசனம்
சுலபமான முறை என இதற்கு அர்த்தம். வயது முதிர்வு அல்லது பிற காரணங்களால் சிரசாசனம் செய்ய வரவில்லை எனில், கால்களை மேலே தூக்காமல் கால்களை கீழ் வைத்த நிலையிலே செய்வதே அர்த்த சிரசாசனம். பாதி சிரசாசனம் செய்யும் போதே சிரசாசனத்தில் கிடைக்கிற பலன்கள் இதிலும் கிடைத்துவிடும்.
இதைச் செய்ய சுவர்(wall) ஒன்றை சப்போர்ட்டாக வைத்து தொடங்குவது நல்லது. தலைப் பகுதி அடிபடாமல் இருக்க யோகா மேட் 10 எம்.எம் திக்னஸ் இருந்தால் நல்லது. இல்லையெனில் ஒரு விரிப்பை நான்காக மடித்து தலையணைபோல் தயார் செய்து கொள்ளவும். இரண்டு கைகளுக்கு இடையே ஒரு முழம் இடைவெளி இருக்க வேண்டும். பிறகு இரண்டு கை விரல்களையும் கெட்டியாக கோர்த்துப் பிடிப்பது மிகமிக அவசியம்.
அப்போது உச்சந் தலையில் ஒரு காயின் அளவுக்கு உணர்வு தெரியும். பார்க்க இது ஒரு ஐசோலஸ் டிரைஆங்கிள் முறையில் வரும். விரல்கள் கோர்த்து பிடித்த இடத்தில், உச்சந் தலையை வைத்து, இடுப்பை மேலே தூக்கிக்கொள்ள வேண்டும். பாதங்கள் நடந்து மெல்ல மெல்ல முன்னால் போய்க்கொண்டே இருக்க வேண்டும். முதுகுத் தண்டுவடம் சாய்வு நிலையில் இருந்து(slanting order) நேர்கோட்டிற்கு வரவேண்டும்.
சிரசாசனம் செய்முறை
முதுகுத் தண்டுவடம் நேர்கோடாக வந்துவிட்டால், வயிற்றின் மையப் பகுதியை இறுக்கிப் பிடிக்க, கால்களை மேலே தூக்குவதற்கான உணர்வு தானாக வரும். அப்போது இரண்டு கால்களையும் சேர்த்து அல்லது ஒவ்வொரு கால்களாக குதிகாலை மேலே தூக்கி சுவற்றில் படுமளவுக்கு வைக்க வேண்டும்.இந்த நிலையில் கைகளை மிகமிக கெட்டியாகக் கோர்த்துப் பிடித்திருப்பது முக்கியம். சுவற்றின் சாய்மானம் கிடைப்பதால் எவ்வளவு நேரத்திற்கு நிற்க முடிகிறதோ நிற்கலாம். அப்படி நிற்பதன் வழியாகவே, சிரசாசனத்தில் நிற்கும் நேரம் அதிகரிக்கும். இந்த நிலையில் வயிற்றை இறுக்கிப் பிடித்து விடவேண்டும்.
பிறகு பொறுமையாக இரண்டு கால்களையும் கீழே இறக்கி, பாத விரல்கள் கீழே படும்படி வைத்து பொறுமையாக படத்தில் உள்ள படி சசாங்காசனா நிலைக்கு வர வேண்டும். இது சிரசாசனத்திற்கான மாற்று ஆசனம். கழுத்தில் இருக்கக்கூடிய அழுத்தம் தளர்வாகும் வரை சசாங்காசனத்தில் இருப்பதே நல்லது.
சசாங்காசனம்
பாலாசனம் எனவும் இதைச் சொல்லலாம். எல்லா ஆசனங்களையும் செய்த பிறகு, மாற்று ஆசனமாக இதை செய்ய வேண்டும். நரம்பு மண்டலத்திற்கான ஓய்வு நிலையாக இது இருப்பதுடன், மன அமைதியை தரவல்லது. முதுகுத் தண்டுவட அழுத்தம் எதுவாக இருந்தாலும் சசாங்காசனத்தைச் செய்யும் போது குறைய ஆரம்பிக்கும்.பெண்களின் கர்ப்ப காலத்தில், குழந்தை எடை அதிகரிக்கும் போது, பெண் உடலின் மையப்புள்ளி மாறும். அப்போது பெண்கள் பின்பக்கம் சாய்ந்த நிலையில், வயிற்றை முன்பக்கம் தள்ளியபடி நடப்பார்கள். இதில் அவர்களுக்கு முதுகுவலி ஏற்படும்.
குழந்தை வயிற்றில் இருக்கும் நிலையில், வயிற்றுப் பகுதிக்கு சிறிய தலையணையும், தரையில் தலை படாத நிலையில், ஒரு தலையணையும் வைத்து, சசாங்காசன நிலையில் பெண்கள் இருக்கும் போது, முதுகுவலியில் இருந்து விடுதலை கிடைக்கும். இதில் உடல் ரீதியான அழுத்தம் குறைந்து, மன ரீதியான அழுத்தமும் சரியாகும்.
தாடாசனம்
‘தாடா’ என்றால் ‘பனை மரம்.’ அதாவது, பனை மரம் போல உயரமாக நிற்பது. கால்கள் இரண்டையும் சேர்த்து வைக்கலாம். அல்லது குதிகால் இரண்டும் தொட்டுக்கொள்வது மாதிரி ‘வி’ சேப்பில் நிற்கலாம். பார்வையை ஒரு புள்ளியில் மையப்படுத்திக்கொண்டே, கைகளை மேல்நோக்கி உயர்த்தி, விரல்களை கோர்த்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் குதிகால்களை மேலே தூக்கி, விரல் நுனியில் பேலன்ஸ் செய்து சிறிது நேரம் நிற்க வேண்டும்.பாடி மைன்ட் பேலன்ஸ் என்று இதனைச் சொல்லலாம். அதாவது, ஆடாமல் அசையாமல் விரல்நுனியில் நிற்பது. நமது உடல் ஒரு நேர்கோட்டில் சமநிலை அடையும் போது நமது மனமும் சமநிலை அடையும்.
தாடாசனம் செய்வதால் முதுகெலும்பு திருத்தம் அடைவதுடன், கால்களிலும் உறுதி கூடுகிறது. கீழ் முதுகு வலி பிரச்னைகளுக்கு இதுவொரு சிறந்த தீர்வு. செரிமானப் பிரச்னை சரியாகும். ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தி, தட்டை கால் பிரச்னை உள்ளவர்களுக்கு நடுப்பாதத்தில் வளைவை உருவாக்கி, அந்த இடத்தில் உள்ள தசைகளை பலமாக்குகிறது. நிதானமாக பக்குவப்பட்ட மனநிலையாக பிரச்னைகளை கையாளும் மனநிலையை இது கொடுக்க ஆரம்பிக்கும். வளரிளம் பருவக் குழந்தைகள் தாடாசனம் செய்யும் போது உயரம் அதிகரிக்கும். கல்வியில் அவர்களின் கவனம் அதிகரிக்கிறது.
(நலம் யோகம் தொடரும்..!)
சிரசாசனத்தின் பயன்கள்
ரத்தசோகை, குடல் அழற்சி (appendicitis), ஆஸ்துமா, நீரிழிவு, லோ பிபி, சுவாசக் கோளாறு, மூச்சு வாங்குதல், நிமோனியா, மலச்சிக்கல், வலிப்பு, பேதி, கர்ப்பப்பை இறங்குதல், கண் தொடர்பான பிரச்னைகள், சோம்பல், வாயுத்தொல்லை, ஹெரனியா, கால்களில் வரக்கூடிய வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னைகளுக்கு சிரசாசனம் அருமையான தீர்வாக அமைகிறது.