தயிர் - மோர் எது பெஸ்ட் !
நன்றி குங்குமம் டாக்டர்
நம்முடைய உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. எனவே, உணவுகளில் மாற்றங்கள் ஏற்படும்போது உடல் ஆரோக்கியத்திலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. அதனால் உணவை தேர்வு செய்யும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், தயிர், மோர் இரண்டுமே ஆரோக்கியமானது தான்.
தயிரில் உள்ள புரோ-பயோடிக் பண்புகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்கிறது. அதேபோல மோர் உடல்சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் பேலன்ஸ்டு டயட்டில் இருப்பவர்களுக்கு தயிர் எடுத்துக் கொள்வது நல்லதா, மோர் சாப்பிடுவது நல்லதா என்ற குழப்பங்கள் நிறைய பேருக்கு உண்டு.
எனவே, டயட்டில் இருப்பவர்கள் குறிப்பாக எடை குறைக்க, நீரிழிவு, கல்லீரல், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் தயிரை விட மோர் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. காரணம், தயிர் ஜீரணமாவதற்கு நீ்ண்ட நேரம் எடுக்கும். அதனால் தான் இரவு நேரங்களில் தயிர் சாப்பிடக்கூடாது என்று முன்னோர்கள் சொல்வார்கள். ஆனால் மோரில் மிகவும் அடர்த்தி குறைவு. நீர்த்தன்மை கொண்டது என்பதால் எளிதில் ஜீரணமாகும்.
அதோடு சரியான நேரத்துக்கு பசியைத் தூண்டும் தன்மையுடையது. அதனால் அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத் தொல்லையால் அவதிப்படுகிறவர்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு மோரை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. அதேசமயம், உடல் எடையை கூட்ட நினைப்பவர்கள், அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை, வயிறு மந்தம் போன்ற பிரச்சினைகள் இல்லாதவர்கள் தயிரை எடுத்துக் கொள்ளலாம்.
அதே சமயம் தயிர் சாப்பிட சரியான நேரம் மதிய வேளைதான். மதிய நேரத்தில் நம்முடைய ஜீரண மண்டலம் அதி வேகத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும். அதனால் அந்த நேரத்தில் தயிர் எடுத்துக் கொள்வது சிறந்தது. ஆகவே, தயிர் , மோர் இரண்டுமே சிறந்ததுதான். ஆனால் அது அவரவர் உடல் நிலையை பொருத்து அவரவர் விரும்பியதை எடுத்துக்கொள்ளலாம்.