கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த…
நன்றி குங்குமம் டாக்டர்
கொலஸ்ட்ரால் என்பது பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான எண்ணெய் சார்ந்த கொழுப்புப் பொருளாகும். இவை உடலில் அளவுக்கு அதிகமாகும்போது, அது தமனிகளில் அடைப்பு ஏற்படுத்தி மாரடைப்புக்கு வழிவகுப்பதோடு, இதயநோய், பக்கவாதம், சர்க்கரை நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளின் அபாயத்தை அதிகரிக்கும். கொலஸ்ட்ரால் பிரச்னைக்கு பழங்களும் நல்ல தீர்வை தருகிறது. எனவே, ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் சில பழங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பப்பாளி : பப்பாளியில் நார்ச்சத்து மட்டுமின்றி பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. இது ரத்தக் குழாய்களில் தேங்கியுள்ள கொலஸ்ட்ராலை நீக்குவதோடு மாரடைப்பை தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.
திராட்சை : திராட்சை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அற்புதமான பழம். திராட்சையில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகமாக உள்ளன. அவை இதய நோய்களைத் தடுப்பதோடு, புற்றுநோய்களின் அபாயத்தையும் தடுக்கின்றன. மேலும் இது ரத்தம் உறைவதைத் தடுத்து, கொலஸ்ட்ராலால் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளையும் தடுக்கிறது.
வாழைப்பழம் : வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் இருப்பதால் இதை உட்கொள்ளும்போது மாரடைப்பின் அபாயம் குறைகிறது. இது மன அழுத்த அளவுகளைக் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
அவகோடா : அவகோடா கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு அவற்றில் உள்ள பொட்டாசியம், மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், டயட்டரி நார்ச்சத்து போன்றவைதான் காரணம்.
சிட்ரஸ் பழங்கள் : சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதோடு, இதய நோயின் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது. ஒருவர் தினமும் சிட்ரஸ் பழங்களை உணவில் சேர்த்து வந்தால், அது ரத்த குழாய்களில் தேங்கியுள்ள கொலஸ்ட்ராலை கரைத்து, இதயத்தின் செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
ஆப்பிள்: ஆப்பிளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளதால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் தினமும் ஆப்பிளை உட்கொண்டு வந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
நெல்லிக்காய் : நெல்லிக்காய் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கணிசமாக குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி ஆக்ஸிடன்டுகள் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இதயம் மற்றும் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, சோடியத்தைக் குறைக்க உதவுகிறது.
தொகுப்பு: கவிதா பாலாஜிகணேஷ்