தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நேர மேலாண்மையும் இலக்கு நோக்கிய பயணமும்!

நன்றி குங்குமம் டாக்டர்

அகமெனும் அட்சயப் பாத்திரம்

மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

வீட்டைப் பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது ஒருமுறைதான், தொலைக்காட்சி ஒரு மணிநேரம் மட்டுமே பார்ப்பது, சோசியல் மீடியாவிற்கு இரண்டு மணி நேரம் இப்படி நம் மனக்கட்டுப்பாடுகளுக்கான வரையறைகளையும் எண்களாக வகுத்துக் கொள்வது கண்கூடான பலன்களைத் தரும். மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் 500, 1000 என துறைவாரியாக எண்ணற்றவர் வேலை செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். இதுவே ‘Delegation of Authority’ என்று நிர்வாகவியலில் குறிப்பிடப்படுகிறது.

எல்லா நேரத்திலும் எல்லா வேலைகளையும் ஒருவரே இழுத்து தலையில் போட்டுக் கொண்டு செய்வது என்பது சமயோசிதமான வழிமுறை அல்ல. குடும்பத்திலோ, அலுவலகத்திலோ ஆகட்டும் குறிப்பிட்ட காலஅளவு வரைதான் நீங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வேலையை சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருக்க முடியும். அதற்குப் பிறகு அவர்களாக செய்ய சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொடுத்து, ‘‘இனி இது உன் பொறுப்பு” என்று நம்பிக்கையோடு ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு வெவ்வேறு வயது, தனித்திறன் கொண்டவர்களிடம் வேலைகளைப் பிரித்துக் கொடுக்கும்பொழுது புதிய திறமைகளின் பயனும் கிடைக்கும். நேரமும் மிச்சப்படும். ஆனால் அப்படியான பொறுப்பு பங்கிடுதலின்போது ‘‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் ” என்ற வள்ளுவரின் குறளை மறந்துவிடக்கூடாது. சரியான நபருக்குப் பொருத்தமான பணியை இடுவதே வெற்றிக்கு உதவும் மனிதவளக் கலை. இதுதான் Human Resource management என்ற விரிவான துறையாக உலகெங்கும் கிளைகளைப் பரப்பி தேசங்கள் தாண்டி வேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

மேலும், நாம் ஏற்கனவே விவாதித்துள்ள OCD, Paranoid, Dependancy போன்ற உளவியல் சிக்கல்கள் காரணமாக செய்த வேலைகளையே மீண்டும் மீண்டும் செய்வது, சந்தேகப்பட்டு பரிசோதித்துக் கொண்டே இருப்பது, பிறரை செய்ய எதிர்ப்பார்ப்பது போன்றவை நம் நேரத்தை சிறிது சிறிதாக விழுங்கும். எனவே தயங்காமல் அவற்றை உடனடியாக உளவியல் ஆலோசகரிடம் பயிற்சி பெற்று சரி செய்து கொள்வது நமக்கும், குடும்பத்திற்கு நல்லது.

எதிர்பாராத துரோகம், தோல்வி, நெருங்கியவரின் பிரிவு அல்லது இறப்பு போன்றவையும் உடல் மன நலத்தைப் பாதித்து செயல்பட விடாமல் நிற்க வைக்கும். இதை மனித வாழ்வில் தவிர்க்க முடியாது. எல்லோருக்கும் இப்படியான துக்கமயமான சூழ்நிலைகள் உண்டு என புரிந்துகொள்வது அவசியம். இல்லை எனில், எனக்கு மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது? எனக்குப் போய் துரோகம் இழைத்து விட்டார்களே என்று மனஉளைச்சலாகி நம்பிக்கை இழப்பு உருவாகும். அது தொடர்ந்து பிறரை சபித்தல், பழி வாங்குதல் என்று உங்கள் வாழ்விற்கு ஒரு பயனையும் தராத எதிர்மறைச் செயல்களில் சிக்க வைக்கும். இப்படியான சூழலில் தன்னம்பிக்கையோடு நமக்கு வாழ்வில் என்ன தேவை, என் வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசித்து செயலில் இறங்க வேண்டும். தேவைப்படுமாயின் மனநல சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

நீங்கள் விழ வேண்டும் என சிலர் காத்திருக்கிறார்கள் என்று உணர ஆரம்பித்து விட்டால், அவர்களுக்கு அந்தக் காத்திருப்பின் சுகத்தை நீங்கள் எப்போதும் இருக்கும்படி செய்து விடுங்கள். நீங்கள் விழுவீர்கள் என்று அவர்கள் ஏங்கி காத்துக் கொண்டே இருக்கட்டும். நீங்கள் ஒருபோதும் விழாமல் பிரச்சனைகளை சாதுர்யமாக எதிர்கொண்டு வளர்ச்சி அடைந்துகொண்டே இருங்கள். அதுவே, அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் நல்ல பதிலடியாகும். இது காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் அறிவுரையே என்றாலும் இதுவே பிரபஞ்ச உண்மை. எதிர்மறையான சம்பவங்களை நேர்மறையான மன உந்து சக்தியாக மாற்றிக் கொள்வதே எல்லா காலத்திலும் நன்மைக்கான வழி.

உங்களுடைய நேரத்தை நீங்கள் முடிவு செய்யுங்கள். மற்றவர்களோ, சமூக வலைத் தளங்களோ உங்களை வம்புக்கு இழுத்து உங்கள் நேரத்தை வீணாக்க அனுமதி கொடுக்காதீர்கள். என் நேரம் என் செயல் என உங்கள் நேரக் கட்டுப்பாட்டை உங்கள் கையில் வைத்திருக்க வேண்டும். இன்றைய பரபரப்பான உலகில், நீங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று யாரும் தேடி வந்து ஊக்கம் கொடுத்துத் தள்ளப்போவதில்லை. உங்கள் பசிக்கு நீங்கள்தான் சாப்பிட முடியும் என்பதைப் போலவே உங்கள் இலட்சியத்திற்கு நீங்கள்தான் உழைக்கத் தொடங்க வேண்டும். எனவே, நேரடியாகவோ மறைமுகமாகவே தேவையற்ற குறுக்கீடுகள் உங்கள் மனத்தை திசை திருப்பும்போது தெளிவாக விலகி உங்கள் மன அமைதியையும், இலட்சியத்தையும் காப்பாற்றிக் கொள்வது அவசியம்.

புரிதலின்மை, அலைவரிசை மாறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக ஒரே சண்டையை பலர் போட்டுக் கொண்டே இருப்பதை நிறைய பார்க்கிறோம். ஏதோ ஒரு கட்டத்தில் இது மாறப்போவதில்லை என்று தெரிந்து நிறுத்தி தனித்தனி வழிகளில் பயணிப்பதே இலக்குகளுக்கு அருகே உங்களைச் சேர்க்கும்.அதேபோல் சிலர் முன்னேற்றம் எதற்கு? புகழ் வெறியா? காசு எல்லாம் தேவையில்லை? என்று போலி வேதாந்தம் பேசுவார்கள். ஆனால் உள்ளூற அவர்களுக்கு அவை கிடைக்கவில்லையே என்ற வெறுப்பும் பொறாமையும் இருக்கக்கூடும். இத்தகு எதிர்மறைவாதிகளை இனம் கண்டு ஒதுங்குவது மிகவும் அவசியம்.

அடிப்படையிலே முற்றிலும் மாறுபட்ட ஆளுமைகள் ஒன்றாக இருக்கும்போது எவ்வளவு சிரத்தை எடுத்தாலும் எல்லா வேலைகளும் தடைப்படும் என்பதைப் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். கணவன் மனைவி அல்லது பார்ட்னர்களில் ஒருவர் மிகவும் வேகமாக எல்லாவற்றையும் செய்வார். இன்னொருவர் பொறுமையாக இருப்பார். அவரவர் வாழ்க்கைச் சூழல், திறன், செயல் கொள்கைகள் வேறுபட்டு இருக்கும்போது இரண்டு எதிரெதிர் துருவங்களில் இழுக்கப்படும் வண்டி நகராமலேதான் இருக்கும் இல்லையா?

எனவே, சுற்றியுள்ள மனிதர்களைப் புரிந்து கொள்வதோடு, தன் வாழ்க்கை நோக்கம், திறமைகள், சூழல்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வோம். நேர மேலாண்மையை வசப்படுத்திக் கொண்டால் கடினமான இலக்குகளும் நிச்சயம் எளிதாக மாறும். நம்பிக்கையோடு உழைக்கத் தயாராகுவோம். அடுத்த இதழில் வெற்றிப் பாதையில் முடிவெடுக்கும் திறன்கள் குறித்துப் பார்ப்போம்.