கண்டங்கால் தசை என்னும் இரண்டாம் இதயம்!
நன்றி குங்குமம் தோழி
சமீபத்தில் ஆசிரியர் பணியில் வேலை செய்து ஓய்வு பெற்ற அறுபது வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் என்னிடம் கால் முட்டி வலி காரணமாக சிகிச்சைக்கு வந்திருந்தார். ஆசிரியர் பணியில் இருந்த பொழுது தொடர்ந்து ஆறு மணி நேரமாவது தினமும் நிற்க வேண்டிய சூழல் இருந்ததால் அவருக்கு கால் முழுவதும் நரம்பு சுற்றி இருந்தது. இதனால்தான் அவருக்கு கால் வலி ஏற்பட்டுள்ளதை எடுத்துக்கூறி தக்க சிகிச்சைகளை அளிக்கத் துவங்கினேன். அவர் மட்டுமல்ல... நம்மில் பலர் நீண்ட நேரம் நிற்கும் அல்லது உட்காரும் பணியில் இருப்போம். அப்படி இருப்பவர்களுக்கு எளிதில் இவ்வாறு நரம்புகள் சுற்றிக்கொள்ளும். இதனால் பிற்காலத்தில் கால் முட்டி வலி, கால் குடைதல் போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம்.இதிலிருந்து தற்காத்துக்கொள்ள நமது காலில் கண்டங்கால் சதை என்று சொல்லப்படும் தசையினைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக இதன் முக்கியத்துவம் யாது? இதற்கும் நரம்பு சுற்றுவதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது போன்ற பலவற்றையும் இங்கே தெரிந்துகொள்வோம், வாருங்கள்.
கண்டங்கால் தசைகள்...
நம் உடலின் மொத்த எடையும் நமது கணுக்கால் மூட்டுகளில்தான் கடைசியாக இறங்கும். இந்த மூட்டிற்கு உறுதுணையாக பெரிதும் இயங்கும் கண்டங்கால் தசைகள் என்பது மூன்று வெவ்வேறு தசைகளை உள்ளடக்கியவை. இவை மூன்றும் சேர்ந்து நம் பின்குதிகால் பகுதியில் சென்று முடியும். தசைகள் எலும்பில் சென்று முடியும்போது தசை நாராக மாறி இருக்கும். அப்படி இந்த இடத்தில் அடர்த்தியான பட்டையான தசைநார் சென்று முடியும். இதனை அக்கிலீஸ் டென்டன் (Achilles Tendon) என மருத்துவத்தில் அழைப்போம். இதுவே நம் உடலின் மிக உறுதியான தசை நார். நம் கால் விரல்களை ஊன்றி நிற்க இந்த தசைகள் உதவுகிறது. மேலும் நடப்பதற்கும், ஓடுவதற்கும், குதிப்பதற்கும் இந்த தசைகள்தான் உதவியாய் இருக்கிறது. இத்தசைகள் புவியீர்ப்பு சக்திக்கு எதிராக செயல்பட்டு நாம் நிற்பதற்கு உதவியாக இருக்கிறது.
இரண்டாம் இதயம்...
உடலில் பல முக்கியமான இடங்களில் தசைகள் இருந்தும் ஏன் இந்தக் கண்டங் கால் தசைகள் மட்டும் கூடுதல் முக்கியமானது என்றால், இதனை நம்மை காக்கும் இரண்டாம் இதயம் என்றே சொல்லலாம். ஏனெனில், நம் கால்கள் முழுவதிலும் இருக்கும் கார்பன் டையாக்சைடு (Carbon dioxide ) வாயு நிறைந்த ரத்தத்தினை மேலே இதயத்திற்கு எடுத்துச்செல்ல உறுதுணையாக இருக்கிறது.ஒவ்வொரு முறையும் நாம் கணுக்காலினை அசைக்கும் பொழுது இந்த தசைகள் வேலை செய்து அதாவது, சுருங்கி விரிந்து ரத்தத்தினை புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேலே இதயத்திற்கு செலுத்துகிறது. மேலும் இந்த இடத்தில் தசை நாரை வெட்டிவிட்டால் ஒருவரால் எப்பொழுதும் நடக்க முடியாமல் போகும். மேலும் ரத்த இழப்பு அதிகம் ஏற்பட்டு மரணிக்கவும் நேரிடும். அதனால்தான் திரைப்படங்களில்கூட கணுக்காலில் சுடுகின்றனர்.
*நோயினால் படுத்தப் படுக்கையாக கால்களை அசையாமல் வைத்திருந்தால் அதே இடத்தில் ரத்தம் தேங்கிவிடும். மேலே செல்லாமல் இதனால் ரத்தம் உறைந்து கட்டிவிடும். இதனை டீப் வெயின் தோரோம்போசிஸ் (Deep Vein Thrombosis) என ஆங்கிலத்தில் அழைப்பர். இந்த உறைந்த ரத்தக்கட்டி சில நேரம் நம் ரத்த ஓட்டத்தில் கலந்து இதயத்திற்கு அல்லது மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைக்கக்கூடும். இதனால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆகையால்தான் அறுவை சிகிச்சை செய்துள்ளவர்களை கால்களை அசைக்கச் சொல்கிறோம். கால்களை அசைக்கும் பொழுது கணுக்கால் தசை இயங்கும். அதனால் ரத்த ஓட்டம் சீராக இயங்கும்.
* மேலும் இந்த தசைகளை அசையாமல் வைத்திருந்தால் கால்களில் நீர் கோர்த்து வீக்கம் ஏற்படும்.
* இந்த தசைகள் கீழே இருந்து ரத்தத்தினை மேலே எடுத்துச்செல்ல உதவியாக இருப்பதினால் நம் இதயத்தின் வேலை பளுவினை குறைக்கிறது. இதன் மூலம் மறைமுகமாக இதயத்திற்கு நற்பலனை தருவதனால் இதனை இரண்டாம் இதயம் எனச் சொல்கிறோம்.
* நாம் நடக்கும்போது எந்த இடத்தில் கால் பதிக்கிறோம், அந்த இடம் வழுவழுப்பாக உள்ளதா என அனைத்தையும் தெரிந்துகொள்ளவும் அதற்கேற்ப நடப்பதற்கும் இந்த தசைகள் உறுதுணையாக இருப்பதால் இதனை நாம் வலுவாக
வைத்திருப்பது அவசியம்.
* படிகளில் ஏறி இறங்கவும் இந்த தசைகள் உறுதுணையாக இருக்கிறது.
* நீண்ட நேரம் நின்று சோர்வு இல்லாமல் வேலை செய்யவும் இந்த தசைகள் உதவியாக இருக்கிறது.
* மேலும் விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு தன் விளையாட்டில் எளிதாய் விளையாடுவதற்கு, முழு ஆற்றலுடன் விளையாடுவதற்கு இந்த தசைகள் உதவியாக இருக்கிறது.
வரும் விளைவுகள்...
கணுக்கால் தசைகளை நாம் முழுமையாக பராமரிக்கவில்லை என்றால் நாளடைவில் பல பாதிப்புகள் ஏற்படும்.
* காலில் நரம்பு சுற்றிக்கொள்வது, அதாவது, கார்பன்டை-ஆக்சைடு நிறைந்த ரத்த நாளங்களை வெயின்ஸ் (Veins) என மருத்துவத்தில் அழைப்போம். இதை சுற்றி ஒரு முடிச்சு போல உருவாகிவிடும். கீழே இருந்து ரத்தம் சரிவர மேலே செல்ல இயலாது. அதாவது, அந்த முடிச்சு ஒரு தடையாய் இருக்கும். இதனை ஆங்கிலத்தில் வெரிகோஸ் வெயின்ஸ்(Varicose Veins) என்போம். இதனால் கால் குடைதல் பிரச்னை ஏற்படும்.
* கண்டங்கால் தசைகள் வலுவாக இல்லை என்றால் முட்டி வலி வர வாய்ப்புள்ளது.
* வெரிகோஸ் வெயின்ஸ் நாளடைவில் அதிகமானால் அறுவை சிகிச்சை செய்துதான் அதனை சரி செய்ய முடியும்.
* காலில் உள்ள ரத்தம் சரிவர மேலே செல்லாமல் போதுமான அளவு பிராண வாயு இல்லாமல் நம் உடல் செல்கள் இருக்கும் என்பதால் நாம் எளிதில் சோர்ந்து விடுவோம்.
* வலிமையில்லா தசைகளால் நம்மால் அதிக தூரம் நடக்க இயலாது.
* மேலும், கண்டங்கால் தசை இறுக்கமாக இருக்கும் போது குதிகால் வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
* நாம் ஸ்திரமாக நிற்கவும் இந்த தசைகள் உதவியாக இருக்கிறது. இந்த தசைகள் நாம் வயதான பின் தளர்ந்து விழுந்து கீழே விழாமல் காக்கிறது.எளிதில் பாதிப்படைவோர்...
* யாருக்கெல்லாம் வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை வருமெனில், நீண்ட நேரம் நிற்பவர்கள், நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள். உதாரணமாக, ஆசிரியர் பணியில் இருப்பவர், ஐடி ஊழியர்கள், கடைகளில் நின்று வேலை செய்பவர்கள்.
* மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பொழுது தொடர்ந்து கால்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் நரம்பு சுற்றுவது இயல்பாய் இவர்களுக்கு ஏற்படுகிறது. எனவே பல முறை கர்ப்பமாக இருக்கும் பெண்மணிகளுக்கு எளிதாக இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.
* அதிக எடையுடன் இருப்பவர்கள். (அதிக எடை இருக்கும்பொழுது நம் கண்டங்காலில்தான் எல்லா எடையும் வந்து சேரும். இதனால் அழுத்தம் ஏற்படும்).
* கண்டங்கால் தசை வலுவாக இல்லை என்றால் ரத்தம் சரிவர மேலே சென்று வராது. இதனால் இப்பாதிப்பு ஏற்படலாம்.
* புகை பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு எளிதாக இந்த நரம்பு சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது.
வருமுன் தடுப்போம்...
மேலே சொன்ன பிரச்னைகளை எளிதில் வராமல் தடுப்பதற்கு நூறு சதவீதம் வாய்ப்புள்ளது. உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் கண்டங்கால் தசையினை வலுவாக வைத்திருக்க முடியும். மேலும் உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்து வருவதால் ரத்த ஓட்டம் சீராக இயங்கும். எனவே அருகிலுள்ள இயன்முறை மருத்துவரை நாடி அவரிடம் தக்க பயிற்சிகளை கற்றுக்கொண்டு, அதனைத் தொடர்ந்து செய்து வருவது அவசியம்.
இயன்முறை மருத்துவர் கண்டங்காலின் தசை வலிமை எவ்வளவு இருக்கிறது, இறுக்கமாக இருக்கிறதா என அனைத்தையும் சோதித்து தசை இறுக்கத்தை தளர்த்தும் ஸ்ட்ரெச்சிங் (Stretching) பயிற்சிகளையும், தசையினை வலுவாக மாற்ற தசை வலிமை (Strengthening) பயிற்சிகளையும் கற்றுத் தருவர்.மேலும் அவ்வப்பொழுது கண்டங்கால் தசைக்கு மசாஜ் செய்துகொள்வது, எண்ணெய் தேய்த்துக் கொள்வது போன்ற எளிய விஷயங்களை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் வேலை செய்பவர், நீண்ட நேரம் நின்றிருக்கும் வேலை செய்பவர் மட்டுமில்லாமல் இத்தசைகள் அனைவருக்குமே இரண்டாம் இதயம் என்பதால் அனைவரும் இத்தகைய உடற்பயிற்சிகளை செய்வதால் பல பாதிப்புகளை வருவதற்கு முன்பே தடுக்கலாம்.மொத்தத்தில் நம் கண்டங்கால் தசை என்பது நமது இரண்டாம் இதயம் என்பதை புரிந்துகொண்டு, அதனை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது அவசியம். இதனால் கால் வலி முதல் மாரடைப்பு வரை தடுக்கலாம். உடற்பயிற்சி செய்வோம், ஊக்கமுடன் பறப்போம்.
இயன்முறை மருத்துவர்: கோமதி இசைக்கர்