மண்ணில் வந்த நிலவே… மடியில் பூத்த மலரே!
நன்றி குங்குமம் டாக்டர்
குழல் இனிது… யாழ் இனிது
குழந்தையின் வளர்ச்சி மிகவும் அபரிமிதமாக இருப்பது கர்ப்ப காலம் தொடங்கி ‘முதல் 1000‘நாட்கள். இந்த காலகட்டத்தில் குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோர் அதிக அக்கறையுடனும் பொறுப்புடனும் செயல்பட்டு குழந்தையின் உடல் மற்றும் அறிவு வளர்ச்சியை மேம்படுத்துவது அவசியம் ஆகும். இந்த கட்டுரையில் முதல் 6 மாதங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் குழந்தை வளர்ப்பில் கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி பார்ப்போம்.
தூக்கம்: 1 முதல் 6 மாதம் வரை குழந்தைகள் 14 முதல் 15 மணி நேரம் வரை தூங்குவார்கள். 3 மாதம் முதல் இரவு தூக்கம் 6 முதல் 8 மணி நேரம் வரை துவங்குவார்கள். இந்த வயதில் குழந்தையின் உடல் மற்றும் மூளையின் வளர்ச்சி மிகவும் வேகமாக இருக்கும். தூக்கம் குழந்தையின் இந்த அதீத வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாகும். வளர்ச்சிக்குரிய ஹார்மோன்கள் சுரப்பதற்கும், நரம்பு மண்டலம் செவ்வனே செயல்படுவதற்கும் தூக்கம் உறுதுணையாக இருக்கிறது. நன்றாக தூங்கும் குழந்தைகள், விழித்திருக்கும் நேரத்தில் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
அவர்களுக்கான வளர்ச்சி மைல்கற்களை (Developmental milestone) சரியான நேரத்தில் அடைவார்கள். மொழியை கற்கும் திறனும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். தூக்க குறைபாடு ஏற்பட்டால் வளர்ச்சி மைல்கற்கள் மற்றும் மொழியை கற்பது இவற்றில் தாமதம் ஆகும். 14 முதல் 17 மணி நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு பசி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும்.
உணவு முறை:
6 மாதங்கள் முடியும் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். பெற்றோருக்கு குழந்தைக்கு சரியான அளவு தாய்ப்பால் கிடைக்கிறதா குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளதா என்று சந்தேகம் எழுவது இயல்பு. குழந்தையின் எடை, நீளம், தலை சுற்றளவு ஆகியவற்றை பரிசோதித்து, வயதுகேற்ற உடல் வளர்ச்சி இருந்தால் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது
என்பதை அறிந்து கொள்ளலாம்.
வளர்ச்சி மைல்கற்கள் : 2 மாதங்களில் குழந்தைகள் பார்ப்பவர்களின் முகங்களை உற்று நோக்கும். அழும்போது குழந்தையை அரவணைத்தால் அழுகையை நிறுத்தும். முகம் பார்த்து சிரிக்கும். குப்புற படுக்க வைத்தால் லேசாக தலையை தூக்கும்.
4 மாதங்களில் தலை ஆடாமல் நிற்கும். உங்களை பார்த்ததும் உங்கள் கவனத்தை ஈர்க்க குழந்தை சிரிக்கும். கை, கால்களை அசைக்கும், ஒலி எழுப்பும். ‘உ’, ‘அ’ போன்ற ஒலிகளை எழுப்பும். நீங்கள் குழந்தையுடன் பேசினால், திரும்ப பதில் அளிப்பது போல ‘உ’, ‘அ’ என்ற ஒலி எழுப்பும். சத்தம் வரும் திசையை நோக்கி தலையை திருப்பி பார்க்கும். 6வது மாதத்தில் குழந்தை குப்புற படுத்திருக்கும் நிலையில் இருந்து திரும்பி படுக்கும். ஒரு கையில் இருந்து பொருளை மற்றொரு கைக்கு மாற்றும். ‘மா’ ‘பா’ போன்ற ஒற்றைச் சொற்களைச் சொல்லும்.
வளர்ச்சிக்கான செயல்பாடுகள்:
0-2 மாதம்
குழந்தையுடன் பேசும் போது குழந்தையின் கண்களை பார்த்து பேசுங்கள். குழந்தைக்கு பால் ஊட்டும்போது, குளிக்கும்போது, தூங்க வைக்கும் போதும் குழந்தையிடம் பேசுவது, பாடுவது போன்ற செயல்களை பின்பற்றுங்கள். வெவ்வேறு ஒலிகளை எழுப்பும் விளையாட்டு பொம்மைகளை அறிமுகப்படுத்துங்கள். பிரகாசமான நிறமுள்ள பொம்மைகளை தொட்டிலுக்கு மேலே தொங்கவிடுங்கள். குழந்தையை தரையில் படுக்க வைத்து விளையாடுங்கள்.
2 லிருந்து 4 மாத செயல்பாடுகள்
குழந்தையின் தொட்டிலுக்கு மேல் அடர் வண்ணங்களில் பொம்மைகளை தொங்கவிடுங்கள்.குழந்தையிடம் பேசும் போது, குழந்தையின் கண்ணை பார்த்து பேசுங்கள்.குழந்தையுடன் அதிக நேரம் செலவிடுங்கள்.
தரையில் படுக்க வைத்து கை, கால்களை ஆட்டி விளையாட விடுங்கள்.
4 லிருந்து 6 மாத செயல்பாடுகள்
கை, கண் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் தரையில் குழந்தைக்கு பொம்மைகளை சற்று எட்டாதபடி வைத்து எட்டி எடுக்கும்படி செய்ய வேண்டும்.ஒலி எழுப்பும் பொம்மைகளை விளையாட கொடுங்கள். நீங்களும் குழந்தையின் அருகிலிருந்து விளையாட வேண்டும். பேட்டரி மற்றும் விளையாட்டு பொருளின் சிறிய பகுதியை குழந்தை வாயில் போட்டுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதனால் கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தைக்கு பாடல்கள் பாடுவது, கதைகள் சொல்வது, இனிமையான இசை கேட்க வைப்பது, புத்தகங்களில் உள்ள படங்களை காண்பிப்பது அவர்களின் மொழித்திறனை வளர்க்க உதவும்.
குப்புற படுக்க வைத்து சில நிமிடங்கள் விளையாட அனுமதிக்க வேண்டும். இதனால் குழந்தையின் கழுத்து, தோள்பட்டை, வயிற்றுப்பகுதி வலுவாகும்.
வளர்ச்சி குறைபாட்டின் அறிகுறிகள்:
4 மாதத்தில் தலை நிற்காமல் இருப்பது. 6 மாதம் வரை ‘ஆ’ ‘உ’ என்று சொல்லாமல் இருப்பது.
6 மாதம் வரை முகம் பார்த்து சிரிக்காமல் இருப்பது.
6 மாதம் வரை சத்தம் கேட்டு திரும்பாமல் இருப்பது.
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று குழந்தைக்கு முறையான பயிற்சிகள்(Early stimulation) கொடுத்தால் குழந்தையின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.
உடல் நல உபாதைகள்
வயிற்று வலி
வயிற்று வலி ஏற்பட்டால் குழந்தை காரணம் இல்லாமல் நீண்ட நேரம் அழும்.
நோய் தொற்றுகள்
சளி, மூச்சுத்திணறல், காதில் சீழ் வடிதல், வயிற்றுப்போக்கு போன்ற நோய் தொற்றுகள் ஏற்படலாம்.
டயாபர் அரிப்பு (Diaper Rash)
டயாபர் அணிவதால் தோல் சிவந்து காணப்படுதல், அரிப்பு ஏற்படுதல் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.
வயிறு சம்பந்தமானவை
பால் குடித்ததும் சிறிதளவு வாந்தி எடுப்பது(கக்குவது) மற்றும் பால் குடித்தவுடன் மலம் கழிப்பது இயல்பான ஒன்று. இவை குழந்தை வளர வளர சரியாகிவிடும். ஆனால், குழந்தைக்கு எடை கூடவில்லை என்றால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
நோய் தொற்று
*நோய் தொற்று ஏற்பட்டால் குழந்தைகளிடம் மாற்றங்கள் சில அறிகுறிகளை ஏற்படும்.
*பால் குடிக்க மறுத்தல்
*வயிறு வீக்கம்
*மூச்சுத்திணறல்
*சோர்வாக இருத்தல்
*உடல் வெப்பம் குறைதல்(காய்ச்சல் ஏற்படுவதில்லை)
*இயல்பைவிட அதிகமாக தூங்குதல்
*வலிப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்படும் தடுப்பூசிகள்
*குழந்தைக்கு(0-6 மாதங்கள் வரை) போட வேண்டிய தடுப்பூசிகள்.
*டிப்தீரியா(தொண்டை அழற்சி நோய்)
*டெட்டனல்(ரண ஜன்னி)
*பெர்டுசிஸ்(கக்குவான் இருமல்)
*போலியோ(இளம்பிள்ளை வாதம்)
*ரோட்டா வைரஸ்(வயிற்றுப்போக்கு தொற்று)
*இன்ஃப்ளுயென்சா
*(ஃபுளு எனப்படும் சளித்தொற்று)
குழந்தைக்கான தடுப்பூசிகளை சரியான வயதில் கொடுப்பதால் நோய் தொற்றுகளை தவிர்க்கலாம்.
தொகுப்பு: சுரேந்திரன்