மன நோயின் மொழி!
நன்றி குங்குமம் தோழி
மனம் பேசும் நூல் 3
உண்மையில் மன நோய் இருக்கிறதா? மன நோய் என்பது என்ன? மன நோயாளி இங்கு யார்? இந்த மூன்று கேள்விகளுக்கும் உளவியல் துறை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல், சமூகத்தில் பலரும் எளிதான பதிலை சொல்லக்கூடியவர்களாகவும், உளவியல் நிபுணர்களாகவும் மாறியிருக்கிறார்கள்.
இன்றும் நம் சமூகத்தில் எளிதான விவாதமாய் இருப்பது உளவியல் தொடர்பான கருத்துகளும், தத்துவங்களும்தான். மனநோயின் மொழியை முதலில் சரியான வார்த்தையில், சரியான அர்த்தத்தில் தெரிந்து பேசுவது அடிப்படை தேவையாக அனைவருக்கும் இருக்கிறது. உளப்பிணி எதிர் மருத்துவம் (Antipsychiatry) என்றால் என்ன என்பதை, சரியான வார்த்தைக்குள் அடக்கி, ஒரு சிறந்த புத்தகமாக ‘மன நோயின் மொழி’ என்று டேவிட் கூப்பர் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, லதா ராமகிருஷ்ணன் தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார்.
உளவியல் (Psychiatry) துறைக்கு உளப்பிணி எதிர் மருத்துவம் (Antipsychiatry) என்ற இயக்கத்தை உருவாக்கியவர் டேவிட் கூப்பர். உளப்பிணி எதிர் மருத்துவம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியவரும் இவரே. உளவியல் சிகிச்சையின் நலன்களை பற்றிய விழிப்புணர்வை மருத்துவத்துறை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்பில் செயல்படும் போதே, உளப்பிணி எதிர் மருத்துவம் பற்றிய கோட்பாடுகளையும் விவரிக்கிறார் டேவிட் கூப்பர்.
டேவிட் கூப்பர் மனநல மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்தவர். அங்கிருந்த மன நோயாளிகளின் நோய்க்கு அடிப்படை காரணமாக இருந்தவைகளில் சமூகப் பிரச்னைகளும், சமூக அழுத்தங்களுமே இன்றியமையாததாக இருந்தது என்கிறார். எனவே தீர்க்கமாக அவர் எடுத்துரைத்தது என்னவென்றால், உளவியல் ரீதியாக, எவ்வளவு பெரிய சிகிச்சைகளை அளித்திருந்தாலும், அடிப்படை சமூக கலாச்சாரங்களை மாற்றாமல் எந்தவொரு மனிதனின் மனநோயையும் தீர்க்க முடியாது என்கிறார் அழுத்தமாக. மேலும், சமூக அரசியலால் ஏற்படும் தனி மனித மன பாதிப்பிற்கு, ஏட்டுக்கல்வி உளவியலாளர்களால் சம்பிரதாயமான பதிலை மட்டுமே தர முடியும் என்கிறார்.
“மூளை என்பது வெறுமனே அந்தரத்தில் சுழன்று கொண்டிருப்பதில்லை. அது, பூமியின் வரலாறு, சமூக, அரசியல் போக்குகளுடன் தொடர்பு கொண்டது...’’ இதற்கு உதாரணமாய் ஒரு சம்பவத்தை சொல்லலாம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தீவிர மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து குளிக்காமல், உணவு எடுக்காமல் அவர் இருந்தார். எனக்கு அவரின் பாதிப்பு குறித்து புரிந்ததால், மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினேன். அவரது குடும்ப உறுப்பினர்களும் அவரின் செயல்பாடுகளால் பயந்து, உடனே மனநல மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்த பொழுது, சரியான நேரத்திற்கு நண்பர் உணவை எடுப்பதைப் பார்த்த அவரின் குடும்ப உறவுகள், அவரது மனச்சிதைவு குறித்து யோசிக்காமல், சரியாகவே சாப்பிடுகிறார் என்பதை மட்டுமே கணக்கில் கொண்டு, மருத்துவமனையில் வைத்து வீண் செலவு செய்ய வேண்டாம் என யோசித்து, மருத்துவர் அறிவுறுத்தலைத் தாண்டி, வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
வீட்டிற்கு வந்ததும் நண்பர் மறுபடியும் சாப்பிடவில்லை. அவரது மனைவியோ, மருத்துவமனையில் வேலை செய்யும் பெண்கள் உணவு கொடுத்தால் சாப்பிடுகிறார், வீட்டில் நான் செய்து கொடுத்தால் சாப்பிட மறுக்கிறார் எனக் கத்த ஆரம்பித்துவிட்டார். இதைத்தான் டேவிட் கூப்பர், வீட்டில் உள்ள பிரச்னையை சரி செய்யாமல், மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது ஓட்டைப் பானையில் தண்ணீரை ஊற்றும் கதை என்கிறார்.
மன நோயில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்ப்பை வழங்கும் மனப்பாங்கு தவிர்க்கப்பட வேண்டும். ஏதாவது ஒன்றை அவர்களுக்கு செய்ய வேண்டும் என்றில்லாமல், நடுநிலையோடு இயங்க வேண்டும் என்பதுதான் மனநல சிகிச்சையின் அடிப்படை விதியாய் இருத்தல் வேண்டுமென எர்விங் காப்மேன் என்ற சமூகவியலாளர் கூறுகிறார்.
அரசியலுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பேசுபவர்களையும், மதத்துக்கு எதி ராகவும், ஆதரவாகவும் பேசுபவர்களையும், ஜாதிக்கு எதிராகவும், ஆதரவாகவும் பேசுபவர்களையும், முதலாளித்துவத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் பேசுபவர்களையும் மன நோயாளிகள் என்று தொடர்ந்து பொது சமூகத்தில் பரப்பப்படுகிறது. இதையே கூப்பர், உளவியலும், சட்டமும் அதிகாரத்துக்கு எதிரான எத்தகைய கிளர்ச்சியையும் அடக்கிட அரசுக்குத் துணை புரியும் கருவிகள் என்கிறார்.
சமூகவியல் கோட்பாடுகளில் கீழ்ப்படிதல் என்பது எந்தவொரு நபரும் கூறக்கூடாத வார்த்தையாக பாடத்திட்டத்தில் இன்றும் இருக்கிறது. சமூகமும், கலாச்சாரமும் சேர்ந்து எல்லாவித கட்டுப்பாடுகளையும் எடுத்துக்கூறி, யாரோ வகுத்த விதிமுறைகளை இம்மி பிசகாமல் செயல்படுபவரை சாதாரண நபர்(normal) என்றும், விதிமுறைகளைக் கேள்வி கேட்டு, முரணாய் நடப்பவரை அசாதாரணமான நபர்(ubnormal) என்றும் கூறுவதை, இந்த சமூகம் தொடர்ந்து செய்கிறது எனச் சொல்லும் கூப்பர், விடுதலை உணர்வுடன் கருத்தியல் சார்ந்து இயங்கும் மனநல மருத்துவர்கள், நீதிபதிகள், உளவியலாளர்கள், படைப்பாளிகள் என அனைவரும் ஒரு இயக்கமாக மாறவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்.
குடும்பத்தில், அரசியலில், சமூகத்தில் ஒரு மனிதனுக்கு முக்கிய பண்பாக, இயக்கமற்ற பணிதல் நிலை என்றும் இருக்க வேண்டும் என்கிறார்கள். அதற்கு எதிராக இருக்கும் நபர்களை வன்முறையாளர்கள் எனப் பிரகடனப்படுத்துகிறார்கள். இதில் மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? கேள்வி கேட்பவர்கள் யார்? என்பதே மறைக்கப்படுகிறது.
மனித நாகரீக வளர்ச்சியில் குடும்பம் மிக முக்கியமான சிறப்பம்சம் என்று அனைவராலும் கருதப்படுகிறது. குடும்பத்திற்கு எதிராய் பேசுபவர்களையும், செயல்படுபவர்களையும் சமூகம் அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. இதில் குடும்பம் என்கிற அமைப்புக்கு எதிராகக் கூப்பர் பேசவில்லை. ஆனால், ஒரு குடும்பம் அமைவதற்கு மனதளவில் எல்லோரும் தெளிவான கண்ணோட்டத்துடன் இருக்க வேண்டும் என்கிறார். குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் ஆசைக்கும், கனவுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அந்த எண்ணத்திற்கு மதிப்பு குறையும் போது, அக்குடும்பத்தைப் பற்றிய முரணான எண்ணங்கள் ஏற்படத்தான் செய்யும். அப்படி தன்னுடைய குடும்பம் பற்றி முரணாகப் பேசும் நபர்களை இயல்பாகக் கடக்க வேண்டும் என்று கூப்பர் அழுத்தம் திருத்தமாக அக்குடும்ப நபர்களுக்கு எடுத்துச் சொல்கிறார்.
இன்றைய தலைமுறையில் நமக்குத் தெரிந்த பல முகங்கள் திருமணம் ஆகாமல் அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கு அடிப்படைக் காரணம் திருமண உறவில் உள்ள நெருக்கடி, பெற்றோரின் கட்டுப்பாடுகள், உறவினர்களின் அடுக்கடுக்கான சம்பிரதாயச் சடங்குகள். கூடுதலாக இவை எல்லாவற்றுக்கும் பதில் சொல்லத் தெரியாத இயலாமையின் வெளிப்பாடுதான் திருமணத்தை விட்டு ஒதுங்கி இருக்கிறார்கள். தான் படித்த கல்வி, தான் வாசித்தபுத்தகங்கள், தான் கலந்து கொண்ட அமைப்புகள் சொல்லிக் கொடுத்த எதையும், தன்னால் தன் வீட்டில் செய்ய முடியாத சமூகச் சிக்கலில் இருக்கிறார்கள். அதை எதிர்கொள்ளும் பக்குவமும், திறனும் அவர்களை கேள்விக்கு உள்ளாக்குகிறது.
குடும்ப அமைப்பை நம்பக்கூடிய சமூகத்தில் பெற்றோர், கணவன்-மனைவி உறவு, குழந்தைகள், காதல் என்று பாரபட்சம் இல்லாமல் கேலி, கிண்டலுடன் வாழ்வியலை எளிதாக விவாதம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது. என்றாலும், சாதாரண மனிதன் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு கூட முறையான பதிலை கொடுக்கத் தெரியாத குடும்ப அமைப்பாய் இன்றும் நமது குடும்ப அமைப்புகள், கலாச்சாரம் மற்றும் இதிகாசங்களின் தாக்கங்களால் ஊறிப் போயிருக்கிறது.
எனவே, மனச்சிதைவு என்பதை கூப்பர் நோயாகப் பார்க்காமல், நோய்சார் விஷயமாகக் கருதாமல், மனிதர்களுக்கிடையே நடக்கும் செயல்பாடுகளாகப் பார்க்கிறார். ஒரு மருத்துவர் நோயாளியை கேள்வி கேட்கும் முன், நோயாளியை பற்றிய ஒரு முன் முடிவுக்கு வருகிறார். அதேபோல் மருத்துவரைப் பற்றியும், நோயாளி ஒரு முன் முடிவுக்கு வருகிறார். இப்படியாக குடும்பத்தை சரி செய்யாமல், சமூகத்தை சரி செய்யாமல், அரசியலை சரி செய்யாமல், மனநல சிகிச்சையால் மட்டுமே முழு வெற்றியையும் யாராலும் கொடுத்துவிட முடியாது என்பதை இப்புத்தகம், விரிவான ஒரு பார்வையாக நமக்குக் கொடுக்கிறது.
மன நோயாளி என்பவர் யார்? என்பதை விட, அதற்கு சிகிச்சை அளிக்கும் உளவியல் மருத்துவர்கள், உளவியல் ஆலோசகர்கள், திறந்த மனப்பாங்குடன் அவர்களை அணுக வேண்டும் என்பதே இதில் மிக முக்கிய பங்காக இருக்கிறது.
பிரச்னைகளை நோயாளியின் பார்வையில் மட்டும் பார்க்காமல், சுற்றியுள்ள சூழ்நிலையையும் புரிந்து, உள்வாங்கி அதற்கான தெளிவை கொடுக்க வேண்டிய கடமை, உளவியல் ஆலோசகர்களுக்கு மட்டுமல்லாமல், சமூக மாற்றத்தில் பங்கெடுக்கும் அனைவருக்குமே இருக்க வேண்டும்.
மனம் சார்ந்த வேறொரு நூலோடு அடுத்த இதழில்...
காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்