அகமெனும் அட்சயப் பாத்திரம்
நன்றி குங்குமம் டாக்டர்
காதல் போயின்…Break up Management
மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்
காலம் முழுவதும் நம்முடன் இருக்கக்கூடிய இணைக்கு ‘நீ முக்கியமானவள்/ முக்கியமானவன் என்ற உணர்வைக் கொடுப்பதில் எதற்குத் தயக்கம்? பரஸ்பரம் சிறுசிறு அக்கறையான சொற்கள் இல்லாமல் போகின்றபோது நிதானமாய் சிந்திக்க வேண்டும். அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் அதற்கான தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை கற்றல் நோக்கி நகர வேண்டும். காதலோ, வேறு இலக்கோ நம்மால் அடைய முடியவில்லை எனில் சுயமேம்பாடு (Self development) செய்து கொள்வதுதான் சரியான தீர்வு.
இவர் நல்லவரா கெட்டவரா, நம்பலாமா வேண்டாமா என்பதன் குழப்பங்கள்தான் காதல் பிரச்னைகளின் அடிப்படைச் சிக்கலாக இருக்கிறது. இவ்வாறான இருநிலைக் குழப்பங்களைத் தவிர்க்க வேண்டும். ஏதோவொன்றைத் தீர்மானித்து மனஅமைதி கொள்ள வேண்டும். இல்லையெனில், ‘Fight or Flight’ என்று தவிப்பின் நிலை மூளை நரம்புகளில் நீடித்து உடல்/ மன நலன் சீரற்றுப் போகும்.
காதல் பிரிவின் வெறுமையை (Break -up emptiness) இன்னொரு காதலைக் கொண்டு சிலர் உடனடியாக நிரப்பிக் கொள்கிறார்கள். அது அவரவர் மனப்பக்குவத்தைப் பொருத்து தனிப்பட்ட விழைவு என்றாலும் கவனம் வேண்டும். ஓர் உறவிலிருந்து முழுமையாக விலகி அவர் நமக்குச் சரியானவர் இல்லை அல்லது நாம் அவருக்குப் பொருத்தமானவர் இல்லை என்று முடிவெடுத்து விலக வேண்டும். இந்தக் காதலால் நன்மையா தீமையா நமக்கு முன்னேற்றமா தீமையா என்று உறுதியாக ஏதேனும் ஒரு பக்கம் சென்றுவிட வேண்டும். இங்கே உண்மை எது என்பதைவிட தெளிவாக ஒரு நிலையில் இருப்பதே முக்கியமானது. இனி திரும்பிப் பார்ப்பதேயில்லை என்ற எண்ணம் வேண்டும். அதன் பிறகு வரும் புதிய காதல் அமைதியை, முன்னேற்றத்தைத் தரும்.
அவசரமாக தற்காலிக மருந்துபோல புதிய காதல் ஒன்றைத் தேடிப் பிடித்தால், ஆழ்மனமோ (Sub-conscious mind) கடந்த காலத்தில் நின்று தவிக்கும். பழைய காதலையே உயர்வானதாக உள்ளே எண்ணிக் கொண்டு புதிய காதலைக் கொண்டாடவும் முடியாமல், விடவும் முடியாமல் போராடும். நிகழ்காலக் காதலின் மதிப்பு புரியாமல் சந்தேகங்கள் தோன்றும்.
காதலில் “இதைவிட இது சிறந்தது...’’ ‘‘அட இது இன்னும் நல்லாயிருக்கே” என்று ஜானி திரைப்படத்தில் வரும் தீபா கதாபாத்திரம் போல் இருந்தால் அதற்கு முடிவே இல்லை. ஒப்பீடு ஏற்பட்டாலே அங்கே காதல் குறைந்து விட்டது என்று உணர்ந்து கொள்ளவேண்டும். உங்கள் இணை என்றால் அவரின் தனித்துவமே உங்களுக்குச் சிறப்பானதாக தோன்ற வேண்டும்.
தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடினால், தலையில் ஏறி உட்கார்ந்து விடுவார்கள் என்ற தந்திரக்கணக்கு செய்து காதலைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டாமே.
சிறு குறைகளோடு மொட்டாக இருப்பவர் நீங்கள் தலைக்குமேல் வைத்தால் பூவாக மலர்ந்து உங்களுக்கு மணம் கொடுப்பார்கள் என்று கவித்துவமாகப் புரிந்து கொள்ள வேண்டும். உயர்த்தி வைக்கும்பூ ஒருநாள் உதிர்ந்து வீழ்ந்தால்கூட உங்கள் காலடியில்தான் விழும் இல்லையா? அது போலவே நீங்கள் இணையைக் கொண்டாடும்போது அவர்கள் இன்னும் ஒருபடி கீழே இறங்கி, அன்பில் நிலைத்து இருப்பார்கள். அதைவிட்டு “என்னுடையது, நான் பாதுகாக்கிறேன்” என்று உயிரற்ற பொருளாகக் காதல் தோன்றிவிட்டால், அங்கே கட்டுப்பாடும், உடைமைத்தன்மைக் கோளாறுகளும் Possesiveness issues) தோன்றும். அது பிரிவையே தரும்.
இன்று பலருக்கு தேவைக்கும் (Need), விருப்பத்திற்கும் (Want) வேறுபாடு தெரிவதில்லை. வைர நெக்லஸ் கேட்கிறார்களா. கெஞ்சட்டும்.கொஞ்சம் காத்திருக்கட்டும். எப்போது கிடைக்கும் என்று ஏங்க வைக்கலாம். தவறில்லை. கார் ஓட்டப் பழகிக் கொள்ளச் சொல்கிறாரா..பொறுத்திருக்கட்டும். உங்களுக்கு அது பெரிய விஷயம்தான்.அடுத்த மாதம் ஓட்டிப்பழகலாம். பிழையேயில்லை. தள்ளிப் போடுங்கள்.ஆனால், உப்பு, புளி, காய்கறி, வாடகை, உடம்பு சரியில்லை எனில் பாத்துக்கொள்ளும் அக்கறை போன்ற அடிப்படைத் தேவைகளுக்குக் கெஞ்ச வைக்காதீர்கள்.
காதல், நெருக்கம்,காமம் போன்ற இயல்பான எதிர்பார்ப்புகளுக்கு ஏங்க வைத்துக் காத்திருக்கும்படி இணையை வருத்தாதீர்கள். இங்கே யாரும் காதலன் / காதலி, கணவன் / மனைவியிடம் முழுமையாக நல்லவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதில்லை.நார்மலாக இருக்க வேண்டுமென்றுதான் பலரும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் விரும்புவதை நீங்கள் செய்வதெல்லாம் இரண்டாம்பட்சம். யோசித்துப் பாருங்கள்.அடிப்படைத் தேவைகளுக்கு வேறு யாரிடம் போய் கேட்பார்கள்? கேட்கத்தான் விட்டுவிடுவீர்களா? அதெப்படி உன் அண்ணனிடம் நீ பணம் கேட்கலாம்? அதெப்படி உங்க தோழியிடம் போய் இதைச் சொல்லலாம் என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பீர்களே.எதற்கு இவ்வளவு சிக்கல்? மிக எளிது நீங்களே தேவைகளில் குறை வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு, சந்தேகமாவது, சச்சரவாவது? எதுவும் உங்கள் காதலை அசைக்க முடியாது.
பலமுறை சொல்லி சொல்லிப் பார்ப்பார்கள். கடைசியில் நொந்துபோய் பலபேர் “எவ்ளோ சொல்லியும் புரிந்து கொள்ளவில்லையே என்று ஒருவர் முதலில் மனதால் விலக ஆரம்பிப்பது இங்கேதான் ஆரம்பிக்கும். எனவே, உங்கள் காதலின் வாழ்நாள் உங்கள் கைகளில்தான் இருக்கிறது என்று புரிந்துகொள்ளுங்கள்.பைபிள் “பிறர் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ அதை நீ பிறருக்குச் செய்” என்கிறது.எவ்வளவு அழகான வாழ்வியல் தத்துவம் இது? எத்தனைப் பேர் கடைபிடிக்கிறோம்? காதலின் ஆரம்பக் கட்டத்தில் பலரும், தான் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறாரோ அதேபோல இணையை நடத்துகிறார்கள். அக்கறையோடு கால் பிடித்து விடுதல், வீட்டு வேலைகளைச் செய்வது, முன்னேற்றத்திற்கு ஊக்கம் கொடுப்பது என்று காதலைக் கொட்டி வெளிப்படுத்துகிறார்கள்.
சிலகாலம் கழித்து, தான் செய்த எதற்கும் மதிப்பில்லை, இன்னொருவரால் உணரப்படவில்லை என்று தோன்றும்போது நிலைமை தலைகீழாகிறது.நீ என்னை எவ்வளவு தரக்குறைவாக நடத்தினாய், எனக்கு எவ்வளவு வேதனையாக இருந்தது தெரியுமா என்ற கோபம் பிறக்கிறது. சுயஇரக்கமும், ஏமாற்ற உணர்வும் பொங்குகிறது. அதுவே, வன்மமும் பழியுணர்வுமாக உருப்பெற்று நானும் உன்னைப்போல் நான் இருந்து காட்டுகிறேன் பார் என்ற போட்டி ஏற்படுகிறது.
உளவியலில் இதனை ‘Revenge Mirroring’ என்பார்கள். ஆனால், நாம் செய்ததை நமக்கு திருப்பிக் கொடுக்கும்போது, அது நாம் கொடுத்ததுதான் என்றே பலருக்கும் புரிவதில்லை. ஆகவே, காதலைக் காப்பாற்றிக் கொள்வது பெரிய சவாலாகவே இருக்கிறது. ஒருவரை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது, தூண்டிவிட்டு (Triggering) நிம்மதியைக் குலைப்பது போன்ற எதிர்வினைகள் நம் நிம்மதியையும் சேர்த்துத்தான் குலைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சரி பேசினால்தானே சண்டை வரும்? நாம் பேசாமல் இருந்து விடுவோம். அப்போது காதல் தங்கும் என்பதும் சரியல்ல. எப்போது ஒருவர் பேச்சை நிறுத்துகிறாரோ அப்போது இந்தக் காதலில் முழு நம்பிக்கையை அவர் இழந்து விட்டார் என்பதே உண்மை. சொல்லாமலே புரிந்து கொள்ளும் குறிப்பறிதல் எல்லாம் வள்ளுவர் காலத்தோடு போய்விட்டது. அது நடைமுறையில் சாத்தியமற்றது.காதலுக்கு உரையாடல் அடிப்படைக் காரணி என்பதை மறந்து விடக்கூடாது. உரிய நேரத்தில் பேசாமல் மனவிலகலை ஏற்படுத்தி, இடைவெளி கொடுத்தால் வேறு உறவை அன்புக்காகவோ, ஆறுதலுக்காகவோ நாடுவது இயற்கை.
அமரன் (2024) படத்தில் தொலைவில் இருக்கும் காதலின் (Long distance relationship) வலியைப் பார்த்திருப்போம். “தூக்கம் வரவில்லை’ என்று மனைவி சொல்லும்போது புரிந்துகொண்டு அலைபேசிவழி இணைப்பில் உடன் இருக்கும் பிணைப்பை உருவாக்குவதைக் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். அப்படி ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்து கொண்டு தாங்கும் இணக்கமிருந்தால் அந்தக் காதல் நிலைத்திருக்கும்.
காதலைத் தக்க வைத்துக் கொள்ள எல்லா விதமான முயற்சிகள், சமரசங்கள் செய்து பார்த்த பிறகும் காதல் கைகூடவில்லையா இருவரின் அலைவரிசை ஒத்துப்போகவில்லை என்று உணர்ந்து நட்பாகப் பிரிந்து விடுவது நல்லது. அவ்வாறு, ஒருவர் நிரந்தரப் பிரிவை (Break -up) தேர்ந்தெடுக்கும்போது கட்டுப்படுத்திய பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்யக் கூடாது. இதனை ‘Hoovering’ என்று குறிப்பிடுவார்கள்.
மிரட்டல் விடுப்பது, பொதுவெளியில் அவமானப்படுத்துவது, பிறரிடம் சொல்லி விடுவேன் என்று Blackmail செய்வது, தற்கொலை / கொலை செய்து விடுவேன் என்று பயத்தை ஏற்படுத்துவது இவையெல்லாம் Hoovering தந்திரங்கள். இப்படி நல்ல உணர்வுகளை எல்லாம் உறிஞ்சி எடுத்து, துரத்திப் பிடிக்கும் செயல்களை Normal என்று எண்ணிவிடக்கூடாது. எவ்வளவு சொல்லியும் பின்தொடருகிறார். எனவே இது உண்மைக் காதல் என்று மயங்கிவிடக்கூடாது. ‘Toxic relationship’ எனும் நச்சுத்தன்மை கொண்ட காதலை வேறுப்படுத்திப் பார்க்கும் அறிவுக்கூர்மை வேண்டும்.
உண்மைக்காதல் ஓர் உந்து சக்தி. மனதிற்கும், உடலுக்கும் இதமான உற்சாகம் வழங்கும். காதலே வாழ்வின் மீதான தீராப்பிடிப்பின் ஆணிவேர். எனவே, காதலைச் சிதைக்காமல் காதலோடு இறுகப் பற்றிக் கொள்வோம்.