விளையாட்டே விபரீதமானது!
நன்றி குங்குமம் தோழி
மனிதர்கள் மீண்டும் மீண்டும் மயங்குவது வெற்றிக்கும், அங்கீகாரத்துக்கும்தான் என்பதை நாம் மறுக்க இயலாது. அதுவும் குழந்தைகளுக்கு, அவர்கள் செய்யும் சிறு சிறு விஷயங்களுக்கு பெரியவர்கள் வெரி குட் என்று சொல்லி விட்டாலே போதும் குதூகலமாகி விடுவார்கள். அந்தளவிற்கு வயது வித்தியாசமில்லாமல் தனக்கான சரியான அங்கீகாரம் கிடைப்பதை அனைவரும் தன்னடக்கத்துடனும், கர்வத்துடனும் ரசித்து ஏற்றுக் கொள்வார்கள். பிறப்பிலே திறமை இருந்தாலும், பல வருடங்கள் தொடர் பயிற்சிக்குப்பின் தானே வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம். அதைத்தான் நம் வரலாறும், தத்துவங்களும், நிபுணர்களும் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், ஆன்லைன் கேம் இதை பொய்யாக்கி கொண்டிருக்கிறது.எந்தவித பயிற்சியும் இல்லாமல், எந்தவித திறமையும் இல்லாமல் பணம் செலவழித்தால் போதும், வெற்றியை வாங்கி விட முடியும் என்று நம் டிஜிட்டல் உலகம் குழந்தைகளை தொடர்ந்து நம்ப வைத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு இருக்கிற குழந்தைகளுக்கு திறம்பட பயிற்சி வேண்டுமென்ற எண்ணமில்லாமல், பணத்தை வைத்து வெற்றியை வாங்கி விட முடியும் என்ற எண்ணத்தை அமைதியாகவும், ஆபத்தாகவும் கைகளுக்குள் இருக்கும் மொபைல் மூலம் மிகப்பெரிய தவறான விளைவை சமூகத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
வீடியோ கேம் தானே, அது இன்றைக்கு பல குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்று நினைக்க வேண்டாம். இந்த வீடியோ கேமில் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை நாம் இந்தக் கட்டுரையின் வழியாகத் தெரிந்து கொள்வோம்.வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளுக்கு தோல்வியே தெரியாத அளவிற்கு வெற்றியை மட்டுமே தொடர்ந்து அனுபவிக்க வைக்கும் பழக்கத்தை இந்த டிஜிட்டல் உலகம் மிகத் திறமையாக செய்கிறது. அதிலும் வளரிளம் பருவ வயதில் இருப்பவர்களின் மூளை என்றைக்குமே அவர்களின் கற்பனைகளுக்கு ஏற்றவாறு திரில்லிங்கையும் அனுபவிக்க ஆசைப்படுவார்கள். அந்த உணர்வை மையப்படுத்தி, இன்றைய ஆன்லைன் கேம் மிகப்பெரிய மார்க்கெட்டை தனக்கென உருவாக்கி நிலைநிறுத்திவிட்டது.
குழந்தைகளும் அவர்களின் அத்தியாவசியத் தேவையாக ஆன்லைன் விளையாட்டை நம்ப ஆரம்பித்து விட்டார்கள். அதனால் பெற்றோர்களுக்கு இதனால் பொருளாதார பாதிப்பு ஏதுமில்லை என்றும், அதோடு தனது தேவை மட்டுமே மிகமுக்கியமென்றும் கூறப் பழகுகிறார்கள். அதற்கு உதாரணமாக இந்த சம்பவம் உள்ளது. குடும்பத்தினரும், பெற்றோர்களும் குழந்தைகளின் நலன் விஷயத்தில் தங்களுடைய சக்திக்கு மீறிதான், செயல்படுவார்கள். அதுவும் கொரோனா காலக்கட்டத்தில் பிள்ளைகளின் படிப்பிற்காக, வட்டிக்கு கடன் வாங்கிக் கூட, சிறந்த மொபைலை வாங்கிய பெற்றோர்களைத் தெரியும். தங்களுடைய குழந்தைகளின் படிப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் பெற்றோர்கள் கவனமாக இருந்தனர். ஆனால், அந்த மொபைல் தங்களுடைய குழந்தைகளின் வாழ்க்கையை புரட்டிப்போடும் என்று யாரும் நினைக்கவில்லை.
பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவி, சிறந்த முறையில் அனைவருடனும் அன்பாகவும், நிதானமாகவும் பழகும் மாணவியாக தன்னை நிரூபித்திருந்தாள். அந்த மாணவியை அவரது அம்மா மருத்துவமனைக்கு பார்க்க அழைத்து வந்திருந்தார். மிகவும் இறுகிய முகத்துடன், எதுவும் பேசாமல் இருந்தார். மனநல மருத்துவர் கேள்வி கேட்கும் போதுதான் தெரிந்தது. அந்த மாணவி மொபைல் கேமின் அடிக்ஸன் ஆனது மட்டுமில்லாமல், அனைவரிடமும் எறிந்து விழுவது, படிக்காமல் இருப்பது, பள்ளிக் கூடத்திற்கு போகாமல் இருப்பது எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாமல், விளையாடுவதற்கு பணம் தரவில்லை என்ற கோபமும், அதனால் ஏற்பட்ட இறுக்கமும்தான் அவளிடம் தெரிந்தது.
ஏன் இந்த தலைமுறை மாணவ, மாணவிகள் வீடியோ கேமிற்கு அடிக்சன் ஆகியிருக்கிறார்கள் என்றால், ஒரு இருபது வருடத்திற்கு முன் எல்லாம், அதாவது 2000 களில் கம்ப்யூட்டர் மற்றும் வீடியோ கேமில் விளையாடும் போது, நாம் உயிருள்ள ஒரு மனிதனாகவும், எதிரில் இருப்பது ஒரு பொருளாகவும் மட்டுமே இருந்தது. அதனால் ஒரு பொருளுடன் விளையாடுகிறோம் என்ற சிந்தனையுடன் விளையாண்டோம்.
ஆனால், இன்றைய கேமில் நாம் உயிருள்ள நபராகவும், எதிரில் இருப்பவரும் உயிரில்லாத, ஆனால் நம்மை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட நபருடன் எதிர்த்து விளையாடுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால், வேட்டையாடும் பழக்கம் நம் மரபில் கலந்திருப்பதால், இம்மாதிரியான பிரீ பையர் கேமில் இன்னும் தீவிரமாக அடிப்பது, கொல்லுவது, சூட் செய்வது என்று அவர்களின் வேட்டையாடும் எண்ணத்திற்கு தகுந்தாற் போல் இந்த விளையாட்டுகள் இளம் தலைமுறையினருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் போல் இருக்கிறது.
இம்மாதிரி விளையாடுவதற்கு ஒரு திறமை தேவைப்படுகிறது. அதனால் ஒரு சில குழந்தைகள் விளையாடினாலும், ஒரு சிலர் விளையாடாமல் இருப்பார்கள். இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு, இம்மாதிரியான நிறுவனங்கள் இதற்கும் ஒரு வழி வகை செய்துள்ளார்கள். அதாவது மொபைல் மூலம் விளையாடும் விளையாட்டு இலவசமாக தரப்படுகிறது. அதை விளையாடுவதற்கு எந்தவித திறமையும் தேவையில்லை. அந்த கேம் விளையாட தேவையான பொம்மைகள், அதற்கு தேவையான துப்பாக்கி, கன் இம்மாதிரி இருக்கும் பொருட்களை விலை கொடுத்து வாங்கி விட வேண்டும். இந்த மாணவி, இந்த பொருளை வாங்குவதற்கு மாதம் 25000 ருபாய் வரை செலவழித்து இருக்கிறாள்.
அதன் பின், அந்த குழந்தைகள் கையில் இருந்து மொபைலை அசைத்தால் மட்டுமே போதுமானது. அந்த கேமில் இருக்கும் பொம்மையும், துப்பாக்கிகளும் சேர்ந்து விளையாட்டை வெற்றிகரமாக விளையாண்டு விடுவார்கள். அதில் கிடைக்கும் வெற்றியானது, மொபைலை கையில் வைத்திருக்கும் குழந்தைக்கு கிடைத்தது போல் ஒரு பிரமையை உருவாக்கி வைத்து விட்டார்கள். அதனால் இதில் எது நிஜம், எது கற்பனை என்று தெரியாத அளவிற்கு அவர்களை சிந்திக்க விடாமல் செய்திருக்கிறது இந்த மொபைல் கேம். இதன் தாக்கம் என்னவென்று பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் புரிவதற்குள், குழந்தைகள் நம் கைமீறி போயிருக்கிறார்கள். அதனால் ஆன்லைன் விளையாட்டுக்கு செலவு செய்த பெற்றோர்கள், அடுத்தபடியாக மனநல மருத்துவமனை நோக்கியும் வர ஆரம்பித்திருக்கிறார்கள்.
நமது தத்துவங்கள் கூறுவது, அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, அதிலும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்றார்கள். அப்படி ஒவ்வொரு தம்பதியினரும் ஆசைப்பட்டு ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கிக் கொண்டு வரும்போது, ஒரு விளையாட்டால் குழந்தைகளை மொத்தமாக சீர்குலைத்து விடுவது என்பது அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத மிகப்பெரிய வெறுமையை குடும்ப வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஏற்படுத்தி விடுகிறது. உடலும், மனதும் ஆரோக்கியமாக பிறக்கும் குழந்தைகள் வளர்ந்தபின், இம்மாதிரியான ஆன்லைன் மோகத்தில் சிக்காமல் பார்த்துக் கொள்வதும் பெற்றோர்களின் கடமையாக மாறி வருகிறது. இனி ஆன்லைன் விளையாட்டிலிருந்தும் குழந்தைகளை பாதுகாப்போம்.
தொகுப்பு :காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்