எலும்புகளை பலமாக்கும் பிரண்டை!
நன்றி குங்குமம் டாக்டர்
பிரண்டை, இயற்கை நமக்கு அளித்த பல வரங்களில் ஒன்றாகும். பிரண்டையின் முக்கிய பயன்கள், எலும்புகளுக்கு பலம் சேர்ப்பது, ஈறுகளில் ரத்தக் கசிவை நிறுத்துவது, வாயுத் தொல்லை மற்றும் பிடிப்புகளைப் போக்குவது மற்றும் கொழுப்பைக் கரைப்பது போன்றவை ஆகும். மேலும், இது ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், மூளை நரம்புகளை பலப்படுத்தவும் உதவுகிறது.
பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை என பல வகைப்படும். இதற்கு, `வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு. `Cissus quadrangularis’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட இது, கொடி வகையைச் சேர்ந்தது.
எலும்புகுள்ளே இருக்கும் மஜ்ஜை என்ற பொருளில் எலும்பு செல்களை வளர்க்கும் ரசாயனம் உள்ளதாக கூறுகின்றனர். அதனால் எலும்பு வளர்ச்சியடையவும், உடலை தாங்கி இருக்கும் எலும்பு உறுதியாக இருக்கவும் உதவுகின்றது. எலும்பு முறிவு, உடைந்த நிலையில் பிரண்டை உதவுகின்றது. எலும்புக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து பிரண்டையில் அதிகமுள்ளது.
எலும்பைச் செப்பனிட சுண்ணாம்பைத் தருகிறது பிரண்டை. மேலும் பிரண்டையில் பாஸ்பரஸ், கந்தகம் உள்ளதாகக் கூறுகின்றனர். எலும்பு வளர இந்த மூன்றும் தேவைப்படுகின்றது. சாதாரணமாக வீடுகளில் பிரண்டைத் துவையல் செய்வார்கள். அது எலும்பு பலத்துடன் சீரணத்தையும் உண்டாக்குகிறது. வயிற்றில் புண் இருந்தாலும், வயிற்றுப் புண் காரணமாக வாயில் புண் ஏற்பட்டாலும் பிரண்டையைச் சாப்பிட்டால் உடனே குணமாகும். மூலம், வலி, வீக்கம், எரிச்சல் ரத்தப்போக்கு ஆகியவை குணமாகும்.
பிரண்டை பயன்படுத்தும் முறை:
பிரண்டையை துவையலாகவும், சட்னியாகவும் சமைத்து உட்கொள்ளலாம்.பிரண்டைப் பொடியை பனங்கற்கண்டு மற்றும் பால் சேர்த்து உட்கொள்வதும் ஒரு முறையாகும்.
தசைவலி, வீக்கம், மூட்டுகளில் வலி, சுளுக்கு ஆகிய கோளாறுகளுக்குப் பிரண்டையை மிக்ஸியிலிட்டு அரைத்து சாறு எடுத்து அதனுடன் புளிச்சாறு கலந்து நன்கு காய்ச்சி அது கெட்டியான சாந்தாக மாறிவரும்போது, வெதுவெதுப்பான சூட்டோடு பாதிப்படைந்த பகுதிகளில் பூசினால் குணமாகும்.
குறிப்பு: பிரண்டையில் நமைச்சல் தன்மை அதிகமாக இருக்கும். அதனால், கையில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு பிறகு ஆய்ந்து சுத்தம் செய்ய வேண்டும்.
தொகுப்பு: தவநிதி