முப்பது வயது பெண்மையின் சந்தேகங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர்
செவ்விது செவ்விது பெண்மை!
மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி
வாழ்க்கையின் 20களுக்கு மெல்ல பிரிய விடை கொடுத்து இப்போது தொடங்குகிறது 30களின் பயணம். பெண்கள் என்றால் 20 வயதாக இருந்தால் என்ன 30 வயதாக இருந்தால் என்ன அவர்களுக்கான மனக்குழப்பங்களும் கேள்விகளும் என்றும் தொடர்கதையே…
இது போன்ற பல குழப்பங்களோடு இருந்த என் தோழிக்கும் எனக்கு நடைபெற்ற ஒரு உரையாடலே இந்த பாகம்.‘என்னால நம்பவே முடிலயே… எனக்கு 31 வயது ஆகிவிட்டது. ஆனா நா எப்படி 20 வயதுல மனக்குழப்பத்தில் இருந்தேனோ அதே போலத்தான் இருக்கேன்’ என்றாள் என் தோழி சாவித்ரி. சாவித்ரி சொன்ன அந்த வார்த்தை என்னை நிறைய யோசிக்க வைத்தது. அதனால் நான் அந்த உரையாடலை அவளுடன் தொடர்ந்தேன். ‘எதனால் அவ்வாறு சொல்கிறாய். என்ன விஷயம்?’ என்று கேட்டேன். அதற்கு அவள், ‘வயது 31 ஆனாலும் மனதில் இப்போதும் பல கேள்விகள் உள்ளன’ என்றாள்.
சரி சொல் உன் கேள்விகளுக்கு நான் விடை சொல்கிறேன். ஆமாம் முதலில் உடலில்தான் பல மாற்றங்கள் உருவாகின. நான் முன்பு மாதிரி இல்லை. கொஞ்சம் வேலை அதிகமாகச் செய்தாலும் சோர்வு ஏற்படுகிறது. மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. Overthinking அதிகமா செய்கிறேன். ஆமாம், இது எல்லாமே 30க்கு பிறகு பொதுவா வரும் மாற்றங்களே. உடல் கொஞ்சம் சீக்கிரம் சோர்வாக ஆகும். மனம் எப்போதும் ஆக்டிக்வாக இருக்கும். அதுவே சில சமயம் ஓவர் திங்கிங் (overthinking) மாதிரி தோன்றும். ஆனா உண்மையில், இது நம் மூளை இன்னமும் விழிப்புணர்வோடு வாழ்க்கையில் நிறைய விஷயங்களை ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டியிருப்பதால்தான் அப்படி நடக்கிறது. கொஞ்சம் பொறுமையாக இருந்து யோசித்து மனதுக்கும் ஓய்வு கொடுத்தால், அந்த தொடர்ச்சியான எண்ணங்கள் குறையும்.
அதுவும் சரிதான். நாதான் மனசுக்கு ஓய்வே கொடுக்குறது இல்லையே அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என நினைத்தால் நமக்குத்தான் பல பிரச்னைகள் இருக்கிறதே. நான் முன்பு இருந்ததற்கு இப்போது மிக குண்டாக இருக்கிறேன். அதனால், என்னால் எனக்குப் பிடித்தது போல சாப்பிட முடியலை. எனக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது. நாம் குண்டாக இருப்பதால்தான் எல்லோரும் ஏளனமாகப் பார்க்கிறார்கள். என்னால் உடல் எடையும் குறைக்க முடியவில்லை.
பாரு சாவித்ரி, இதுல இரண்டு விஷயம் புரிஞ்சுக்கணும்
1.உடல் எடை குறைப்பது மட்டும் தான் மகிழ்ச்சி (Happiness) -க்கு வழி இல்லை.
2.உடல் குறித்த தாழ்வு (Body Image) மனப்பான்மையைவிட மனநலம்தான் முக்கியம்.
உன்னை நீயே குற்றம் சொல்வதை நிறுத்து. உனக்கு நீ முதலில் மதிப்பக்கொடு. அப்பறம்தான் உனக்கு உன் மேல் உள்ள தாழ்வு மனப்பான்மை குறையும்.
அதுவும் சரிதான் உடல், நிறம் மட்டும் ஒருத்தருக்கு மதிப்பை வாங்கி தராது என்று இப்போதான் புரியுது. ஆனால், என்னால் என் வேலையும் குடும்பத்தையும் சமமாக சமாளிக்க முடியலை அதற்கு நான் என்ன பண்றது. பாரு சாவித்ரி, இது ரொம்ப பொதுவான எண்ணம். 30க்கு பிறகு பல பெண்கள் இதைச் சந்திக்கிறாங்க. நம்ம மூளை ஒரே நேரத்தில் அலுவலக வேலைக்கான இலக்குகளையும், வீட்டுக் காரியங்களையும், தனிப்பட்ட தேவைகளையும் சமாளிக்க முயற்சி செய்யும். இதனால் அழுத்தம்(stress) தான் அதிகம் வரும். நீ எது உனக்கு மிகவும் முக்கியமோ அதற்கு முன்னுரிமை கொடு. எல்லாவற்றையும் ஒரே நாளில் முடிக்க வேண்டிய அவசியமில்லை.
எல்லாவற்றுக்கும் உடனடியாக ஆம் சொல்ல வேண்டியதில்லை. உன் ஆரோக்கியம் & மன அமைதிக்கு பாதிப்பு வராதபடி இருக்கணும். இல்லையென்றல் அதுக்கு முடியாது (NO) அப்படி சொல்லி பழகு. வீட்டில் இருக்கும் காரியங்களை குடும்பத்தினர் அல்லது உதவியாளரிடம் பகிர்ந்து கொள். எல்லாத்தையும் நீயே செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஆமாம். நான் என்னால் முடியவில்லை என்றால்கூட சரி செய்கிறேன் என்று எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு செய்வேன். அதுவே என் பிரச்சனைகளுக்கு காரணம் போல. எனக்கு இப்போ 1 பொண்ணு இருக்கா. ஆனா என் வீட்ல இன்னொரு குழந்தை பெத்துக்க சொல்றாங்க. அந்த குழந்தையை என்னால சமாளிக்க முடியுமா! குழந்தை பிறப்பு என்பது சாதாரணம் இல்லை. அதை வளர்க்குறதை நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு.
உன் உணர்வு ரொம்பவே சரி. ஒரு குழந்தையை வளர்ப்பது உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரிய பொறுப்பு. ஒரு குழந்தையைப் பெறுவது என்பது சமூகம் அல்லது குடும்பம் சொல்லும் அழுத்தத்துக்கு மட்டும் செய்யக்கூடிய விஷயம் இல்லை. அது உனக்கும் உன் கணவரும் மட்டும் சேர்ந்த முடிவு. குழந்தையின் எதிர்காலம், உன் தனிப்பட்ட இலக்குகள், தற்போதைய வாழ்க்கை முறை எல்லாம் சமாளித்த பிறகு அந்த முடிவை எடுப்பது பாதுகாப்பானது.
இதுவும் சரிதான். நான் இதைப் பற்றி யோசிக்குறேன். ஆனால், எனக்கு இப்போது உடல் உறவுல முன்பு போல் விருப்பம் இல்லை. அது நான் வேலை குடும்பம், குழந்தை என எல்லாவற்றையும் சமாளிக்க முடியாததாலா. இல்லை எனக்கு எதுவும் பிரச்சனை இருக்கிறதா என்றுகூட யோசிச்சு இருக்கிறேன். இதை நான் பல யோசனைக்கு அப்பறம்தான் உன்கிட்டயே சொல்றேன். இதைப் பற்றி பேசவும் கொஞ்சம் சங்கோஜமா இருக்கு. இதுவும் எனக்கு மனக்குழப்பமா இருக்கு.
தற்போதைய காலகட்டத்தில் நீ சொல்றது ரொம்ப சாதாரணமான பிரச்னைதான். சில சமயம் வேலை அழுத்தம், குடும்பப் பொறுப்புகள், சோர்வு எல்லாம் சேர்ந்து மனதுக்கும் உடலுக்கும் ஓய்வு கொடுக்காத அளவுக்கு போயிடும். அதனால் விருப்பம் இயற்கையாவே குறையலாம். இதை உன் பார்ட்னரிடம் வெளிப்படையா பேசறது முக்கியம். உன்னோட உணர்வுகள் பற்றி பேசறதுதான் இது போன்ற பிரச்சனைகளுக்கு முதல் வழி.
அப்பாடா... இத்தனை நாட்களா நான் இந்தக் கேள்வியை என் மனசுக்குள்ளேயே வச்சிட்டு கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தேன். இப்போதான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்து இருக்கு.
என்ன சாவித்ரி இவளோதானா… இல்லை இன்னும் இருக்கா?
பெருசா ஒண்ணும் இல்லை. ஆனா இன்னு ஒண்ணு மட்டும் இருக்கு. அதானே பார்த்தேன்... இது மாறி இவ்ளோ விசயங்களை உள்ளே வைச்சிட்டு இருந்தா overthing தான் நடக்கும். மேலும் உடம்புக்கும் மனசுக்கும் சோர்வுதான் ஆகும். சொல்லு அந்த ஒரு கேள்வி என்ன?
நான் எவ்ளோ சம்பாதித்தாலும் சுத்தமாகப் போதுவதில்லை. நான் என் கணவர் இரண்டு பேருமே வேலைக்குப் போறோம். ஆனால், என் மாமனார் மாமியார் மருத்துவச் செலவு, என் அப்பா அப்பா செலவு எங்க குடும்பச் செலவு இது இல்லாம ஒரு EMI, என் குழந்தையோட படிப்புச் செலவு இப்படி எல்லா செலவும் போக ஒன்றுமே மிச்சம் இருப்பதில்லை. உன் நிலைமை இங்க பலருக்கும் இருக்கு, ஆனால் இதைச் சமாளிப்பது எளிது இல்லை.
முதல்ல நீங்க இருவரும் குடும்பச் செலவுத் திட்டம் (family budget) தெளிவா திட்டமிடணும். மாதச் செலவுகளில் முக்கியமானதை தனியா எடுத்து வைக்கணும். அதாவது மருந்து, படிப்பு, மளிகை, போக மீதியை சேமிப்புக்கும் அவசர நிதிக்கும் எடுத்து வைக்கணும். சிறிய மாற்றங்களிலிருந்து தான் பெரிய நிம்மதி வரும்.
அப்பாடா என் மனசுல இருக்க எல்லா பாரமும் குறைந்த மாறி இருக்கு. நல்ல வேலை எனக்கு ஓர் உளவியல் படித்த தோழி இருப்பதால் நான் இன்று என் மனக்குழப்பங்களுக்கு தீர்வு கண்டுபிடிச்சுட்டேன். என்னைப் போல் இருக்கும் எல்லாருக்கும் நீ என்ன சொல்லுவா?
பெருசா ஒன்றும் இல்லை. இது போல உங்களுக்கு உள்ளே இருக்கற எல்லா பிரச்சனைகளுக்கும் நீங்களே விடை தேடி அலையாமல் ஒருவரின் ஆலோசனையை எடுத்துக்கொள்ளுங்கள். யாரிடமும் உதவி கேட்பது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை.
இதில் இருந்து நான் சாவித்ரிக்கு மட்டும் தோழி இல்லை, உங்களுக்கும்தான் சொல்கிறேன். 30 ல இருந்து 35 வயதுக்குள் இது மாதிரி நிறைய உடல், மனம், குடும்பம், சமூகம் சார்ந்த கேள்விகள் வரும். அதற்கு நீங்களும் முயற்சி செய்து விடை கண்டறியலாம். இல்லையெனில், என்னைப் போன்ற மனநலம் சார்ந்த நிபுணர்கள் - psychologist (உளவியலாளர்) அல்லது psychiatrist (மனநல மருத்துவர்) ஆகியோரிடம் பேசலாம்.