சூரி ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!
நன்றி குங்குமம் டாக்டர்
நடிகனாக வேண்டும் என்ற எண்ணத்தோடு தனது சொந்த ஊரைவிட்டு சென்னை வந்து, சிலபல போராட்டங்களுக்கு பிறகு, 1997ம் ஆண்டில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க, ஜூனியர் நடிகராக களம் இறங்கியவர் நடிகர் சூரி. பின்னர், 2009-இல் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வந்த பரோட்டா காமெடி மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஓர் அடையாளத்தை பெற்றார் இவர்.
அதனைத் தொடர்ந்து கிராமத்து வாசனையுடனும் வெள்ளந்தியான பேச்சுடனும் திரைப்படங்களில் தனது இயல்பான காமெடி நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் நடிகர் சூரி தற்போது தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் கருடன் திரைப்படம் வெளியான நிலையில், தற்போது கவிராஜா இயக்கத்தில் 8, சுசீந்திரன் இயக்கத்தில் ஏஞ்சலினா, கே.வி. நந்தா இயக்கத்தில் படவா, பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி, ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை என கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார். சூரியின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.
ஒர்க்கவுட்ஸ்: சமீபகாலமாக எனது ஃபிட்னெஸ் வீடியோக்களை எல்லாம் பார்த்துவிட்டு பலரும் என்னிடம் ஹீரோக்கள்தான் தங்களது ஃபிட்னெஸ் விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். காமெடி நடிகராக இருந்து கொண்டு ஃபிட்னெஸில் இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறுகின்றனர். ஆனால், உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஹீரோவாகதான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லையே. யார் வேண்டுமானாலும் தங்களது உடலை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாமே. அந்தவகையில், எனக்கும் ஃபிட்னெஸ் மீது ஆர்வம் உண்டு. தினசரி ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்து வருகிறேன். எனது ஃபிட்னெஸ் டிரைனர் சரவணன் எனது உடலை உறுதியாக்க உதவியாக இருக்கிறார்.
என்னுடைய ஒர்க்கவுட்டில் கார்டியோ பயிற்சி, எடை ப்பயிற்சி மற்றும் டிரெட்மில் ஸ்பிரிண்ட்ஸ் போன்றவை இருக்கும். மேலும், கால்களுக்கு வலு சேர்க்கும் உடற்பயிற்சி செய்வதையும் வாரத்தில் ஆறு நாட்களும் செய்கிறேன். மேலும், ஓட்டம், நடைப்பயிற்சிகளும் மேற்கொள்ளுவேன். இந்த பயிற்சிகள் எல்லாம் என்னை ஃபிட்டாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, தினசரி யோகாவும் உண்டு. இளையராஜா சார் இசைதான் எனக்கான யோகா. அப்படியே கண்ணை மூடிக்கிட்டு அமைதியாகக் கேட்பேன். இசையைக் கேட்டபடி, கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தேன்னா யோகா செஞ்ச மாதிரி மனசும் உடம்பும் லேசா இருக்கும்.
அதுபோன்று, மனசு சந்தோஷமா இருந்தா உடலும் இளமையா இருக்கும். எனவே, அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து ஏதாவது காமெடி சொல்லி சிரிச்சிட்டே இருப்பேன். சிரிப்பும் ஒருவித தெரபிதான். எனவேதான் சிரிப்புக்குகூட கிளப் வந்திருச்சு. அதனால் எதற்கும் டென்ஷன் வேண்டாம். முடிஞ்சவரைக்கும், உங்களைத் சுத்தி இருக்கிறவங்களையும் சந்தோசமா வெச்சுக்குங்க. நீங்களும் ஆரோக்கியமாக ஃபிட்டாகவும் இருக்க முடியும். இதுதவிர, வருஷத்துக்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வேன். இதன்மூலம் உடல் ஆரோக்கியத்தை அறிந்த கொள்ள முடியும் என்பதற்காக.
டயட்: சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த ஏழு வருஷத்துல, நினைச்சப்ப நினைச்சத சாப்பிடுவேன். நேரங்கெட்ட நேரத்துல தூங்குவேன். ஆனா, நடிகனான பிறகு நிறையவே மாறி இருக்கேன். மக்கள் முன்னாடி அழகாத் தெரிய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். அதற்காக உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறேன். ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுறேன். அரிசி சாதத்தை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன்.
அதற்கு பதில் தினசரி காலையில் பழைய சாதம், கம்மங்கூழ், கேப்பக்கூழ் என்று ஏதாவது குடிப்பேன். எப்பவாவது டிஃபன் சாப்பிடுவேன். மதிய நேரம் சப்பாத்தி மட்டும்தான். இடைவேளையில நிறையப் பழங்கள் எடுத்துப்பேன். முகத்தை மாசு மரு இல்லாம வைக்கிறது பழங்கள்தான். ராத்திரியில் கோதுமை தோசை, இட்லி என்று ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்வேன். படுக்கிறப்ப, ஒரு டம்ளர் பால். அசைவ உணவுகளையும் அளவோடுதான் எடுத்துக் கொள்வேன். அப்படி கொஞ்சம் அதிகமாகிட்டாலும், அதற்கேற்றவாறு உடற்பயிற்சிகள் செய்து சமன் செய்துவிடுவேன். இப்போதைக்கு எனது ஃபிட்னெஸ் ரகசியம் இதுதான்.