வயிற்றுவலி காரணங்களும் தீர்வுகளும்!
நன்றி குங்குமம் டாக்டர்
இன்றைய வாழ்க்கை சூழலில் வயிற்றுவலி உண்டாக பல காரணங்கள் உள்ளது. உணவுப் பழக்கவழக்கம், வாழ்க்கைமுறை மற்றும் வயிற்றில் உள்ள உறுப்புகளின் கோளாறு போன்றவை முக்கிய காரணங்களாகும். அந்தவகையில், வயிற்றுவலிக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து பகிர்ந்து கொள்கிறார் இரைப்பை, குடல் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆர். கண்ணன்.
வயிற்றுவலி ஏன் வருகிறது? எல்லா வயிற்றுவலியும் ஆபத்தானதா?
வயிற்றுப்புண், பித்தப்பை கல், குடல்வால் அழற்சி, உறுப்புகளில் ஏற்படும் அழற்சி, குடல் நோய்கள், கட்டிகள் மற்றும் அடைப்பு காரணமாக வயிற்றுவலி உண்டாகிறது. இந்த வலியானது மிதமாகவோ, மிகவும் அதிகமாகவோ அல்லது இழுத்துப்பிடிப்பது போலவோ இருக்கலாம். இது வரும்போது அதன் தன்மையை பொறுத்து வரும் வலிவேறுபடும். வைரஸ், பாக்டீரியா (Abdominal Tuberculosis), (Amoebiasis Giardiasis) மற்றும் குடல்புழுக்களின் காரணமாக வயிறு மற்றும் குடலில் உண்டாகும் தொற்றின் காரணமாகவும் வயிற்றுவலி உண்டாகும்.
இதற்கு காரணம், அடிக்கடி ஓட்டலில் உணவு உண்பது, நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது, மசாலா மற்றும் எண்ணெய் அதிகம் கலந்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது, ஜங்க் ஃபுட் வகைகள் மற்றும் பேக்கரி உணவு வகைகள் அதிகமாக எடுத்துக் கொள்வதாலும் வயிற்றுவலி உண்டாகும். பொதுவாக குழந்தைகளுக்கு குடல் புழுக்கள், குடல்வால் அழற்சி, மலச்சிக்கல், குடலில் நெறிக்கட்டுதல் மற்றும் வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு காரணமாக வலி ஏற்படும்.
ஏற்கெனவே வயிற்றில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் வயிற்றில் உள்ள குடலோ அல்லது கொழுப்புப் படலமோ வயிற்றினுள் ஒட்டிக் (Adhesions) கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனாலும் வயிற்று வலி உண்டாகலாம்.
வயிற்றுவலியின் வகைகள் என்ன?
வயிற்றுவலி பல வகைப்படும். அது வரும் இடத்தைப் பொறுத்து வேறுபடும். Localised pain என்பது ஒரே இடத்தில் மிதமாகவோ அல்லது அதிகமாகவோ வலி இருப்பது. இது அந்த குறிப்பிட்ட இடத்தில் உள்ள உறுப்புகளில் உள்ள கோளாறுகளால் உண்டாகும். பெரும்பாலும் இதுபோன்ற வலி வயிற்றுப்புண், குடல்வால் அழற்சி, பித்தப்பை கல் மற்றும் அழற்சி, சிறுநீரகக் கற்களால் உண்டாகும்.
Crampy அல்லது இழுத்துப்பிடிப்பது போன்ற வலியானது பேதி, வயிற்று உப்புசம், மலச்சிக்கல் காரணமாகவும், பெண்களின் மாதவிலக்கு, கருச்சிதைவு மற்றும் கரு உறுப்புகளின்
கோளாறுகளாலும் உண்டாகும். Colicky pain என்பது பிரட்டுவது அல்லது பிழிவது போன்ற வலியானது பித்தப்பை கல் மற்றும் சிறுநீரகக் கல் மற்றும் குடல் அடைப்பினால் ஏற்படும்.
Generalised pain என்பது வயிறு முழுவதும் ஏற்படும் வலியாகும். இதுபோன்ற வலி குடல் அடைப்பு, குடல் ஓட்டை விழுதல், முற்றிய நிலையில் உள்ள கணைய அழற்சி, குடல்வால் அழற்சி மற்றும் பித்தப்பை அழற்சி, வயிற்றுப்போக்கு போன்ற காரணங்களால் ஏற்படும்.
எப்பொழுது மருத்துவரை நாட வேண்டும்?
*பெரும்பாலும் மிதமான வயிற்றுவலியானது மருந்துகள் இல்லாமல், உணவு மூலமாகவே சரியாகிவிடும். ஆனால், கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி தகுந்த பரிசோதனைகள் செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்வதே நல்லது.
*24 மணி நேரத்திற்கு மேல் வயிற்றுவலி தொடர்ந்தாலோ வாந்தி அல்லது குமட்டல் இருந்தாலோ, நாட்பட்ட மலச்சிக்கல் இருந்தாலோ கண், சிறுநீர் மஞ்சளாக இருந்தாலோ
காய்ச்சல், பசியின்மை இருந்தாலோ உடல் எடை அதிகமாக குறைந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
வயிற்று வலி வராமல் எப்படி தடுக்கலாம்?
*எல்லா வயிற்றுவலியையும் வராமல் தடுக்க முடியாது. ஆனால் நம் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தை கீழ்க்கண்டவாறு பின்பற்றினால் பெரும்பாலும் தடுக்க முடியும்.
*வயிற்றுவலியின் தன்மையினையும் அதனால் வரும் பின்விளைவுகளையும் தடுக்க முடியும்.
*சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.
*நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
*குறைவான உணவினை குறிப்பிட்ட கால இடைவெளியில் உண்ண வேண்டும்.
* உடற்பயிற்சி செய்தல் மிகவும் அவசியம்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து நோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது அதற்கு தகுந்த சிகிச்சையை எடுத்துக் கொள்வது மிகமிக சிறந்தது.
தொகுப்பு: ஸ்ரீதேவி