மருந்தாகும் மசாலாப் பொருட்கள்!
நன்றி குங்குமம் டாக்டர்
உணவுகளில் சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மஞ்சள் ஒரு சிறந்த ஆண்டிசெப்டிக் ஆகும், அதேபோல சுக்கு செரிமானத்திற்கு உதவுகிறது. இந்த மசாலாப் பொருட்கள் பொதுவாக காய்ந்த வேர்கள், மரப்பட்டைகள், விதைகளாக பயன்படுத்தப்படுகிறது.
மசாலாப் பொருட்களின் மருத்துவ குணங்கள்
இந்த நறுமணமான மசாலாப் பொருட்களை உணவில் சேர்ப்பதால் செரிமான நொதிகள், உமிழ்நீர் மற்றும் அமில சுரப்பை தூண்டுகிறது. இவற்றில் பாக்டீரியல் எதிரி, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளன. இவைகள் கொழுப்பின் அளவை குறைத்து இதய நோயை தடுக்கிறது. இதனால்தான் நறுமண பொருட்கள் அன்றிலிருந்து இன்றுவரை ஒரே அளவு மதிப்பை கொண்டுள்ளது.
சோம்பு: பெருஞ்சீரகம் வயிற்றுப்புசத்திற்கு எதிராக செயல்படுகிறது. இது வயிற்று வலி, இரைப்பை குடல் வலி நீக்க பயன்படுகிறது.
பெருங்காயம்: பெருங்காயம் நுண்ணுயிர் கொல்லியாக செயல்படுகிறது. இது கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் கக்கவான் இருமல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இது குடல் வாய்விற்கு எதிராக செயல்படுகிறது. இது உடலில் நச்சு நீக்கும் நொதிகளின் அளவுகளை அதிகரிக்க உதவுகிறது.
கிராம்பு: கிராம்பில் யூஜினால் என்ற எதிர் விளைவு வேதி பொருள் உள்ளது. இது பல் வலி நீங்க பயன்படுத்தப்படுகிறது.
கொத்தமல்லி: கொத்தமல்லி விதை வாய்வு, வாந்தி மற்றும் வயிற்று கோளாறுகள் நீங்க பயன்படுத்தப்படுகிறது. புற்று நோய்க்கு எதிரான தாளிடேஸ் என்ற பாதுகாப்பு நொதியின் அளவை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.
சீரகம்: சீரகம் இரைப்பை குடல் வலி நீங்க பயன்படுத்தப்படுகிறது. உடலில் புற்று நோய்க்கெதிரான தாளிடேஸ் என்ற நொதியின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
வெந்தயம்: சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அல்லாத ரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த வெந்தயம் உதவுகிறது. இதில் நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றுக்கடுப்பிற்கு மோருடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.
மிளகு: மிளகு தொண்டை நோய் தாக்கத்திற்கு சூடான பாலுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.
பூண்டு: பூண்டு பல்வேறு செரிமான கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. பூண்டு சாறு கொழுப்பு அளவை குறைக்க மற்றும் இதய நோயை தடுக்க பயன்படுகிறது. இத பூஞ்சைக்கு எதிராகவும் இரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
இஞ்சி: இஞ்சி மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலி குறைக்கவும் பயன்படுகிறது. இது தலைவலியை நீக்கவும் பயன்படுகிறது. இது குமட்டலை தடுப்பதற்கும் பயன்படுகிறது.
கடுகு: கடுகில் பூசண நச்சு விளைவுகளுக்கு எதிரான டைதையோல் தியோன்ஸ் என்ற கந்தக வேதிபொருள் உள்ளது. இதில் டைதையோன் என்ற வேதிபொருள் மந்ததன்மையை போக்கும் மருந்தாக பயன்படுகிறது.
தொகுப்பு: தவநிதி