நொறுக்குத்தீனி பிரியர்களே அலெர்ட் ப்ளீஸ்
நன்றி குங்குமம் டாக்டர்
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் நொறுக்குத்தீனி பிரியர்களாக உள்ளனர். அந்த அளவு நொறுக்குத்தீனி தனது சுவையால் அவர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. ஆனால் நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால், நாளடைவில் அது ஆரோக்கியத்தையே உருக்குலைத்துவிடும். எனவே, பெரியவர்கள் நொறுக்குத்தீனி சாப்பிடாமல் தவிர்ப்பது குழந்தைகளுக்கும் அப்பழக்கத்தை ஊக்குவிக்காமல் இருப்பது நல்லது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பற்றி எடுத்துக் கூறி அதை பழக்கப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பு.
சரிவிகித உணவுகள்: நொறுக்குத்தீனிகள் சத்துகள் இல்லாமல் வெறும் சர்க்கரையையும் உப்பையும் கொண்ட வெற்று கலோரிகளை உடலுக்கு அளிக்கின்றன. மாறாக சரிவிகித உணவுகள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை சரியான அளவில் அளிக்கும். நொறுக்குதீனிகளில் அதிக சர்க்கரை இருப்பதால், தொடர்ந்து அவற்றை உட்கொண்டு வரும் குழந்தைகள் சோர்வாகவும், தெம்பின்றியும் காணப்படலாம். இதனால், அவர்கள் படிப்பிலும், பிற தினசரி செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். நொறுக்குத் தீனியில் உள்ள அதிக கொழுப்பால் உடலில் கொலஸ்டிராலும் டிரைகிளிசரைடும் அதிகரித்து, குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படலாம்.
கவர்ச்சி: நொறுக்குத்தீனிகள் குழந்தைகளைக் கவர ஒரு முக்கிய காரணம், அவை கவர்ச்சிகரமான தோற்றத்தில், பளபளக்கும் பேக்கிங்கில் வருவதுதான். பெற்றோர் ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளை ஈர்க்கும்படி சமைத்துக் கொடுக்கலாம். அவை வண்ணமயமாகவும் புதுமைத் தோற்றத்துடனும் இருக்க வேண்டும். உதாரணமாக காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு அலங்காரமான சாலட் தயாரிக்கலாம். குழந்தைகளுக்கான உணவில், மாவுச்சத்து, கொழுப்பு, புரதம், கால்சியம் போன்ற எல்லா சத்துகளும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது ரொம்ப அவசியம்.
துரித உணவுகள்: ஜங்க் ஃபுட் எனப்படும் துரித உணவுகள், நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அவற்றின் தீமைகளைப் பற்றி குழந்தைகளுக்கு தெளிவாக விளக்கிக் கூற வேண்டும். பெற்றோர்களே குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக மாறி, நொறுக்குத் தீனிகள் உட்கொள்வதை பார்க்கிறோம். அதை தவிர்க்க வேண்டும்.
ஆசைக்காக எப்போதாவது கொஞ்சம் நொறுக்குத் தீனியைக் கொறிப்பதில் தவறில்லை. ஆனால் அதையே அன்றாட வழக்கமாக்கிக் கொண்டால், குறிப்பாக தொலைக்காட்சி, சினிமா பார்க்கும்போது நம்மையும் அறியாமல் அதிக நொறுக்குத் தீனி சாப்பிட்டால், துன்பத்தை நாமே விலை கொடுத்து வாங்குவது போலத்தான்.தொடர்ச்சியான அதிக அளவிலான நொறுக்குத் தீனி பழக்கம், நாளடைவில் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைத்துவிடும் என்பதை நாம் உணர்ந்து குழந்தைகளுக்கும் உணர்த்தி வழிநடத்திட வேண்டும்.
தொகுப்பு: பாலசர்மா