மன அழுத்தம் குறைய எளிய வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர்
நாம் அவசர கால உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் ஸ்ட்ரெஸ் ஏற்படலாம் என்றாலும் அதை கையாள்வது மிகவும் அவசியம். கவனிக்கப்படாமல் இருக்கும் ஸ்ட்ரெஸினால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உணவுமுறை, உடற்பயிற்சியின்மை, உணவில் போதுமான ஊட்டச்சத்து இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் மனசோர்வு, மன அழுத்தம் ஏற்படலாம். தொடர்ந்து மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அது உடல்நிலையையும் சேர்ந்து பாதிக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குடலுக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. குடல் சரியாக வேலைசெய்யவில்லை என்றால் நரம்பு மண்டலம், ஹார்மோன் செயல்பாடுகள் எல்லாம் பாதிக்கப்படும்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், கார்டிசால் ஹார்மோன் நிலை அதிகரிக்கும். இது குடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் செரிமான மண்டலம் சீரற்ற செயல்படும். நல்ல பாக்டீரியாக்கள் வளர்ச்சி குறையும். மாறாக, கெட்ட பாக்டீரியா வளர்ச்சி அதிகரிக்கும். உடலின் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளில் சீராக நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும். செரிமான பிரச்னை, இன்ஃப்ளமேசன் உள்ளிட்டவை ஏற்படலாம்.
மனசோர்வை நிர்வகிக்க உணவில் சிலவற்றை பின்பற்ற வேண்டும். போதுமான அளவு தூக்கம், 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி, ஊட்டச்சத்து மிக்க உணவுகள் ஆகியவை உதவும். புரோபயாடிக் உணவுகள் - புரோபயாடிக் உணவுகள் குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை அதிகரிக்கும். புரோபயாடிக் உணவுகள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தயிர், பழையசோறு புரோபயாடிக் உணவுகளை சாப்பிடலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் - நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்துக்கு அவசியம். ஏனெனில் இது நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இது செரிமானத்திறனை அதிகரிக்க உதவும்.
தண்ணீர் - போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமானது. ஏனெனில், இது செரிமானத்துக்கு உதவும். தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க மறந்துவிட வேண்டாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும் - பதப்படுத்தப்பட்ட உணவுகள் குடல் பாக்டீரியாவின் சமநிலையை சீர்குலைத்து செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். குறிப்பாக பருவகால மாற்றங்களின்போது உடல் அதிக சென்சிடிவாக இருக்கும். அதிக சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகள் பாக்கெட்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளை தவிர்க்கவும்.
ஒமேகா 3 - ஒமேகா 3 அதிகமுள்ள உணவுகளை சாப்பிடவும். ஏனெனில் இது இன்ஃப்ளமேஷனை குறைக்கும்.அதிகமாக காபி, டீ குடிப்பதை தவிர்க்கவும். ஒரு நாளைக்கு ஒரு காபி, டீ குடிப்பது நல்லது.
தொகுப்பு: பொ. பாலாஜிகணேஷ்