தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தோள்பட்டை மூட்டும்... கேள்வி-பதில்களும்!

Advertisement

நன்றி குங்குமம் தோழி

* தோள்பட்டையை தூக்க முடியாமல் இறுக்கமாக இருந்தது. மருத்துவர் மாத்திரைகள் பரிந்துரைத்தார். இந்தப் பிரச்னை ‘உறைந்த தோள்பட்டை’ (Frozen Shoulder) என்பதால், அதற்கான எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இந்தப் பிரச்னைக்கு அவசியமா?

‘ஃப்ரோசன் ஷோல்டர்’ என்று மருத்துவத்தில் சொல்லப்படும் உறைந்த தோள்பட்டை ஒருவருக்கு இருக்கிறது என்றால் அதனைக் கண்டறிய இயன்முறை மருத்துவர் சில தசை பயிற்சிகளை செய்யச் சொல்வார். அதனை செய்யும் போது வலி ஏற்பட்டால் உறுதி செய்து கொள்ளலாம். இதற்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அவசியம் இல்லை. அருகில் உள்ள இயன்முறை மருத்துவரிடம் சென்று இது உறைந்த தோள்பட்டை தானா என்று உறுதி செய்து கொள்ளலாம். பின் அவர் கூறும் பயிற்சிகளை தினமும் செய்து வர வேண்டும். உடற்பயிற்சிகள்தான் இதற்கு ஒரே தீர்வு. வலிக்கு தினமும் சுடுநீர் ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது இயன்முறை மருத்துவ உபகரணங்கள் கொண்டு வலியை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

* மூன்று மாதத்திற்கு முன்பு வண்டியில் செல்லும் போது கீழே விழுந்து தோள்பட்டை பகுதியில் அடிபட்டுவிட்டது. இரண்டு நாள் ஓய்வெடுத்த பின் சரியாகி விட்டது. ஆனால், இப்போதும் அதிக எடை தூக்கும் போதும், கைகளை வேகமாக அசைக்கும் போதும் வலி இருக்கிறது. எந்தவித வீக்கமும், ரத்தக்கட்டியும், வெளி காயமும் இல்லாமல் இன்னமும் தோள்பட்டை வலிக்கிறது என்றால் அது தசைகளில், தசை நாண்களில் அல்லது ஜவ்வினில் ஏற்பட்ட காயமாகும்.

இதனை உறுதி செய்வதற்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க வேண்டிய தேவை இருக்கலாம். அதில் உறுதி செய்த பின் அருகில் இருக்கும் இயன்முறை மருத்துவரை அணுகி போதிய உடற்பயிற்சிகளை கற்றுக் கொள்ளலாம். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, எவ்வளவு எடைகளை தூக்க வேண்டும், எத்தனை நாட்களுக்கு தோள்பட்டை பகுதிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் போன்ற அறிவுரைகளையும் அவர் வழங்குவார். இயற்கையாக உள் காயம் ஆறிவிடும். ஒரு சதவிகித நபர்களுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

* தோள்பட்டை இறுக்கமாக இருக்கிறது என மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில் ‘உறைந்த தோள்பட்டை’ என கண்டறிந்தார். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கட்டாயம் இந்தப் பிரச்னை வருமா?

பெரும்பாலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு தடவையாவது இந்த உறைந்த தோள்பட்டை பாதிப்பு வருகிறது. மேலும், இது எதனால் இப்படி வருகிறது என்பதை இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. சர்க்கரை நோய் இல்லை என்றாலும் இந்த பாதிப்பு 40 வயதை கடந்தவர்களில் பலருக்கு ஏற்படுகிறது. சர்க்கரை நோய் இருந்தால் அதனை கட்டுக்குள் வைக்க வேண்டும். இந்தப் பிரச்னை இருந்தால் இயன்முறை மருத்துவரை அணுகி பாதிப்பிலிருந்து வெளி வரலாம்.

* அமரும் போது கூன் விழுவது போல் இருப்பதால், கூகுளில் தேடிப் பார்த்ததில் கூன் இருப்பதை உறுதி செய்யும் விதமாக ‘ரவுண்டட் ஷோல்டர்’ (Rounded Shoulder) என வந்தது. அப்படி என்றால் என்ன? என்ன செய்ய வேண்டும்?

குறுகி உட்காருவதால் தோள்பட்டை இரண்டும் முன் நோக்கி வளைந்து ஆங்கில எழுத்து ‘C’ போன்று காட்சியளிக்கும். இதுவே ரவுண்டட் ஷொல்டர் என சொல்வார்கள். அதாவது, கூனுடன் உட்காரப் பழகியதால் தோள்பட்டையும், மார்பும் விரிந்த நிலையில் இல்லாமல் முன் வளைந்துள்ளது. தோள்பட்டை மாறுவதற்கு இயன்முறை மருத்துவரை அணுகி உரிய பயிற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பயப்படத் தேவையில்லை. பயிற்சிகளை செய்தால் தசைகள் பலம் பெற்று விரிந்த தோள்பட்டையாக மாறும். ஒரு பக்க தசைகள் வலுவிழந்தும் ஒரு பக்க தசைகள் இறுக்கமாகவும் இருக்கும். இதனை சரி செய்து இரு பக்கமும் தசைகளை வலிமையாக வைத்துக் கொண்டால் இந்தப் பிரச்னை வராது.

* கடந்த ஒரு மாதமாக உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்று பயிற்சிகளை செய்தாலும், தோள்பட்டைக்கு ஏற்ற எடை எவ்வளவு தூக்க வேண்டும்? எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் திடீரென செய்யத் துவங்கும் முன் எவ்வளவு எடை கொண்டு உடற்பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டும்?

பொதுவாக பெண்களாக இருந்தால் ஒரு கிலோவிலும், ஆண்களாக இருந்தால் இரண்டு கிலோவிலும் ஆரம்பிக்கலாம். ஆனால், இது மிகவும் பொதுவான எண்ணிக்கை. இதனை இன்னமும் வடிவமைத்து என்னென்ன உடற்பயிற்சிகளை இந்த ஒரு கிலோ எடையில் செய்ய வேண்டும், அதனை எப்படி செய்ய வேண்டும், எத்தனை எண்ணிக்கைகள் செய்ய வேண்டும் என்பதெல்லாம்

அவரவரின் தேவைகளுக்கு ஏற்ப, அவரவர் தசை திறனை பொறுத்து அமையும். இயன்முறை மருத்துவரை அணுகி போதுமான தெளிவினை பெறலாம். எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் அதிகபட்சம் இரண்டு கிலோவிற்கு மேல் தூக்கினால் கட்டாயம் தசைகளில் காயம் ஏற்படும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டும்.

* என் மகள் ‘அண்டர் 18’ பிரிவில் கிரிக்கெட் விளையாடுகிறாள். அதனால், முறையாக அனைத்து உடற்பயிற்சிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறோம். பந்துவீச்சாளராக விளையாடுவதால், என்ன செய்ய வேண்டும்? என்ன செய்தால் காயங்கள் வராமல் தடுக்கலாம்?

சிறந்த விளையாட்டு வீரராக வரவேண்டுமெனில் நான்கு விஷயங்கள் முக்கியம். விளையாட்டில் உள்ள நுணுக்கமான நுட்பங்கள், உடற்பயிற்சிகள், உணவுப் பழக்கம், தினசரி விளையாட்டினை பயிற்சி எடுப்பது. இதில் உடற்பயிற்சிகளில் தினமும் செய்ய வேண்டிய பயிற்சிகள், போட்டிக்கு முன்பு செய்ய வேண்டிய பயிற்சிகள், பின்பு செய்ய வேண்டிய பயிற்சிகள், தசை வலிமை பயிற்சி, தசை தளர்வு பயிற்சி, தசை தாங்கும் திறன் பயிற்சி என பல வகைகள் இருக்கிறது.

இது இல்லாமல் வேகமாக பந்து வீசுவது (Fast Bowler), சுழற்றி பந்து வீசுவது (Spin Bowler) என சில வகைகள் உள்ளது. அதில் உள்ள நுட்பங்களை எல்லாம் கண்டறிந்து, அதற்கேற்ப சில உடற்பயிற்சிகளை கடைபிடிக்க வேண்டும். பிரத்யேக உடற்பயிற்சிகளை தனிப்பட்ட முறையில் கற்று தொடர்ந்து இயன்முறை மருத்துவரின் ஆலோசனையுடன் உடற்பயிற்சிகளை செய்து வந்தால் 90% காயங்களை தடுக்கலாம். அதைத் தாண்டியும் காயங்கள் வருவது இயல்புதான். அப்படி வரும் காயங்களையும் மீண்டும் உடற்பயிற்சிகள் செய்து அதிலிருந்து மீண்டு வந்து விளையாட முடியும்.

* கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டு கட்டி சிகிச்சை எடுத்தோம். எலும்பு கூடி, கட்டு அவிழ்த்த பின், தோள்பட்டையும் இறுகியவாறு இருந்தது. தானாகவே சரியாகிவிடும் என நினைத்தேன். ஆனால், சரியாகவில்லை. கையில் அடிபட்டதற்கு தோள்பட்டை இறுக்கமாக உள்ளது?

சில வகை எலும்பு முறிவுகளுக்கு அருகிலுள்ள மூட்டுகளையும் அசையாமல் வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த எலும்பு முழுமையாகக் கூடும். கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு தோள்பட்டையை அசைக்காமல் வைத்து கட்டியிருப்பர். இப்படி ஒரு வாரத்திற்கு மேல் அசையாமல் வைத்திருக்கும் மூட்டு இறுக்கமாக (Tight) மாறிவிடும். இதனால்தான் தோள்பட்டை இறுகி இருக்கிறது. உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் மீண்டும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும். அப்படியே விட்டுவிட்டால் கையினை தூக்க முடியாமல் இருக்கும்.

* மூன்று வருடங்களாக நீச்சல் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக இருக்கிறேன். சென்ற வாரம் தோள்பட்டையில் காயம் (Injury) ஏற்பட்டது. மாத்திரைகளை

எடுத்தும் வலி குறையவில்லை. என்னதான் தீர்வு?

வலி என்பது ஒரு அறிகுறிதான். அதற்கு பின்னால் உள்ள மூலக் காரணத்தை அறிந்து மருத்துவம் வழங்க வேண்டும். தோள்பட்டையில் தசைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறதா? தசை நாண்கள் அல்லது ஜவ்வு பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். பின்பு அதற்கு தேவையான உடற்பயிற்சிகளை சரிவர செய்து வர வேண்டும். வலி மாத்திரைகள் தற்சமய வலியினை மட்டும்தான் தடுக்கும். முழு தீர்வும் கிடைக்காது. தசைகளில் உள்ள பிரச்னைகளை இயன்முறை மருத்துவரை அணுகி, போதுமான தசைப் பரிசோதனைகளை செய்து, உடற்பயிற்சிகள் செய்து வந்தால் இந்தப் பிரச்னையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

* தோள்பட்டை வலிக்கு ‘IFT’ பரிந்துரைக்கப்பட்டது. தோளில் வைத்ததும் விறு விறுவென மெல்லிய ஷாக் போல இருந்தது. அதனால் மறுத்துவிட்டேன். அப்படி ஷாக் கொடுத்து வலியை குணப்படுத்த முடியுமா? செய்தால் என்ன பயன் கிடைக்கும்? இதனால் வலி குறையுமா?

முதலில் அது ஷாக் சிகிச்சை இல்லை என்பதால், பயப்பட வேண்டாம். இயன்முறை மருத்துவத் துறையில் வலியினை குறைப்பதற்கு நிறைய உபகரணங்கள் இருக்கிறது. அது அனைத்தும் மின்சார அடிப்படையில் இயங்குகிறது. ஐ.எப்.டியில் மெல்லிய எறும்புக் கடி போன்ற ஒரு உணர்வு இருக்கும். ஆனால், அது ஷாக் இல்லை. தோள்பட்டை தசைகள் இறுக்கமாகவோ அல்லது அதில் காயம் ஏற்பட்டு இருக்கலாம். பயம் கொள்ளாமல் மருத்துவத்தை தொடர்ந்து பெற வேண்டும். தோள்பட்டையில் உள்ள வலி குறையும், ரத்த ஓட்டம் அதிகரித்து, தசைகள் இலகுவாக மாறும்.

* பூங்காவில் ஒருவர் தினமும் நூறு முறையாவது தன் தோள்பட்டையினை சுழற்றுவார். இப்படி செய்வதால் தனக்கு புத்துணர்வாக இருப்பதாகக் கூறுவார். இப்படி செய்வது நல்லது தானா? இது அவசியமா?

குறைந்தது பத்து முதல் முப்பது தடவை நம் உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளையும் அசைப்பதன் மூலம் புத்துணர்வாக உணரலாம். நூறு முறை செய்வது தேவையில்லாதது. அந்த நேரத்தில் புத்துணர்வாக இருக்கலாம். ஆனால், அதன்பின் அவரது தசைகள் சோர்வாக இருக்கும். புத்துணர்வுக்கு தேவையான உடற்பயிற்சிகளை இயன்முறை மருத்துவரிடம் கற்றுத் தெரிந்து கொள்வது அவசியம். இதனால் தசைகளிலோ, மூட்டுகளிலோ வரும் காயங்களை தடுக்கலாம்.

* இயன்முறை மருத்துவத்தின் பங்கு...தோள்பட்டையில் வலி ஏன் வருகிறது?

தோள்பட்டை தசைகள் (Muscles), மூட்டு (Joints), தோள்பட்டை தசை நாண்கள் (Tendons), ஜவ்வு (Ligaments) போன்ற அனைத்தையும் பரிசோதனை வழியாக கண்டறிந்து அதற்கான தீர்வையும் வழங்குவார்கள். பிரச்னைகளை கண்டறிய தோள்பட்டையை தூக்குவது, சுழற்றுவது என அசைவுகள் வழியாகவே கண்டறியலாம் என்பதால், பெரும்பாலும் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் தேவைப்படாது. பின் பிரச்னைக்கு ஏற்ப உடற்பயிற்சிகளை பரிந்துரைத்து கற்றுத் தருவர்.

உடற்பயிற்சிகளில் தசை வலிமை பயிற்சி(Strengthening Exercises), தசை தளர்வு பயிற்சி (Stretching Exercises) என பல வகைகள் உள்ளது. இதில் அவரவரின் பிரச்னைக்கான உடற்பயிற்சிகளை அவர்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்து, அவர்களுக்கு ஏற்ற எண்ணிக்கையில் பரிந்துரைப்பர்.

மேலும், வலி குறைய இயன்முறை மருத்துவ உபகரணங்கள் உள்ளன. தேவைப்பட்டால் தசைகளில் இருக்கும் இறுக்கத்தினை கைகள் மூலம் மசாஜ் போன்ற நுட்பங்கள் பயன்படுத்தி சீர் செய்வர். வந்த பிரச்னையை சரி செய்வது மட்டுமல்லாமல் மேலும் அந்தப் பிரச்னை வராமல் தடுக்க உடற்பயிற்சிகள் உள்ளன. தோள்பட்டையில் வலி இருந்தால் முதலில் இயன்முறை மருத்துவரை அணுகுவது நல்லது.

மொத்தத்தில் இந்தக் கேள்வி-பதில் தொகுப்பின் வாயிலாக நாம் இயன்முறை மருத்துவத்தின் பங்கு? தோள்பட்டை மூட்டில் வரும் பிரச்னைகள் என்னென்ன? அதனை எப்படி தடுப்பது? வந்தால் என்ன செய்வது என்பது போன்ற பல விவரங்களை தெரிந்து கொள்வது மூலம் இவ்வகை பிரச்னைகளில் இருந்து இயன்முறை மருத்துவம் துணை கொண்டு வெளிவர முடியும்.

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

 

Advertisement

Related News