ஆரோக்கியத்துக்கு அறுசுவையின் பங்கு
நன்றி குங்குமம் டாக்டர்
சுவையில் ஆறுவகை உள்ளது என்பதை அறிவோம். இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு என இவை நம் உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் இவை ஒன்றுசேர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. தாதுக்களை பெருக்கவும். அதன் சத்துகள் உடலில் சேரவும் இவை துணைபுரிகின்றன. இந்த அறுசுவைகளும் எந்தெந்த பொருட்களில் உள்ளது. அவற்றால் என்னென்ன நன்மை என தெரிந்துகொள்வோம்.
இனிப்பு: மனதுக்கும், உடலுக்கும் உற்சாகத்தை தரக்கூடியது. இது அதிகமானால் எடைகூடும். தூக்கம் உண்டாகும். பழங்கள், உருளை, கேரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்றவற்றில்
இனிப்புச் சுவை உள்ளது.
புளிப்பு: பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமாக உண்டால் பற்களை பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். எலுமிச்சை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர் இவற்றில் புளிப்பு உள்ளது.
உவர்ப்பு: உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளை சமன்செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய்
போன்றவற்றில் உவர்ப்புச் சுவை உள்ளது.
காரம்: பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடலை இளைக்க வைக்கும். உடலில் சேர்த்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு போன்றவற்றில் காரச்சுவை உள்ளது.
கசப்பு: பெரும்பாலும் இந்த சுவையை பலரும் விரும்புவதில்லை. ஆனால் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இது. நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகியவற்றை தணிக்கக் கூடியது. பாகற்காய், சுண்டைக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் கசப்புச்சுவை உள்ளது.
துவர்ப்பு: உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கை சரிசெய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்றவற்றில் துவர்ப்புச் சுவை உள்ளது.பண்டிகை நாட்களில் மட்டுமின்றி, எல்லா நாட்களிலும் இந்த அனைத்துச் சுவைகளையும் உண்ண, உடல் ஆரோக்கியம் அதிகரித்து நோய்கள் வராது நம்மைக் காக்கும்.
தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியம்