கண் பார்வையைக் காக்க!
நன்றி குங்குமம் டாக்டர்
வயது முதிர்ச்சியினால் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது என்பது தவிர்க்க முடியாதது என்று பலர் எண்ணுகின்றனர். பார்வைக் குறைபாடு ஏற்படுவதற்கு வயது முதிர்ச்சி மட்டுமல்ல உண்ணும் உணவும் வாழ்க்கை முறையும் கூட காரணமாக அமைகின்றன. எனினும் பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்ய நாம் சில சிறிய காரியங்களையாவது அன்றாடம் செய்வது அவசியமாகும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
தினமும் 3 நிமிடங்கள் கண்களுக்கான பயிற்சியைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் ஆபத்தான கண் கோளாறுகளான கிளக்கோமா, ரெட்டினா கோளாறுகள் ஏற்படாது. இந்த இரண்டு கோளாறுகளும் பார்வையை அழிக்கும் தன்மை கொண்டவை. ஆனால், நாம் நினைத்தால் சில எளிய கண் பயிற்சிகள் செய்வதன் மூலம் இக்கோளாறுகளை எளிதாக வென்று காட்டிட முடியும். பிரான்சிஸ்கோ மார்கெட்டி கூறுகிறார், வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் ஒமேகா 3 என்னும் சத்துக்கள் பார்வையைக் காத்துக் கொள்ளவும், பாதிப்புகளைப் போக்கிக் கொள்ளவும் அவசியமாகும். கண்களில் புரை, பார்வை இழப்பு போன்றவை ஏற்பட உணவுப் பழக்கமே காரணமாக அமைகின்றது.
எனவே உணவில் மீன், பருப்புகள், பழங்கள், காய்கறிகள் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பார்வைக் குறைபாடு வியக்கும்படி குணமாகும். ஆய்வு மேலும் குறிப்பிடுகிறது, எண்ணெய்ப் பசையுள்ள மீன்கள், காய்கறிகள் குறைவாகச் சாப்பிடுவதாலேயே பார்வைக் கோளாறுகள் உண்டாகின்றன. பார்வைக் கோளாறுகளை கீழே குறிப்பிட்டுள்ளபடி சாப்பிட்டு வந்தால் குணப்படுத்திக் கொள்ளலாம்.
கேரட்
நமது முன்னோர்கள் கூறும் ஒரு உபாயம் கேரட்டைச் சாப்பிட்டால் இருட்டில் கூட பார்க்கமுடியும் என்பதுதான். இது முற்றிலும் உண்மை என்பதை நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கேரட்டில் அதிக அளவில் வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன. மாலைக் கண் நோய்க்கு கேரட் மிகச்சிறந்த மருந்தாகும்.கேரட்டில் ஏ வைட்டமின் நிறைந்துள்ளது. ஏ வைட்டமின் குறைந்தால்தான் பார்வைக் குறைபாடு ஏற்படும். எனவே, கேரட், ஆரஞ்சுப்பழம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பூசணிக்காய் போன்றவற்றைச் சாப்பிடலாம். இவற்றை ஆலிவ் எண்ணெய் ஊற்றிச் செய்து சாப்பிடுவது மேலும் பலன் தரும்.
ஆரஞ்சுப்பழம்
வைட்டமின்கள் மிக அதிக அளவில் ஆரஞ்சில் உள்ளன. சி வைட்டமின் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 64 சதவீதம் காட்ராக்ட் பிரச்னை ஏற்படாது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தக்காளி, சிவப்பு நிற மிளகாயில் சி வைட்டமின் உள்ளது. பசலைக்கீரை பச்சைநிறக் காய்கறிகளுடன் கீரைகளைச் சாப்பிட்டால் வயது முதிர்ச்சியின் காரணமாக ஏற்படும் கண்புரை, பார்வை இழப்பு, நீல நிறக்கதிர்களால் ஏற்படும் புள்ளிகள் நீங்கிவிடுகின்றன. அன்றாடம் 100 கிராம் பச்சைக் காய்கறிகள் சாப்பிட வேண்டும்.
எண்ணெய்ப் பசையுள்ள மீன்கள்
மேலைநாடுகளில் டூனா, ஆன்கோவி, மக்ரல், சால்மன் போன்ற மீன்களைச் சாப்பிடுகின்றனர். இந்த மீன்களில் விழித்திரைக்கு சத்தூட்டும் ஓர் அமிலம் நிறைந்துள்ளது. அதனால் எண்ணெய்ப் பசையுள்ள ஒமேகா 3) நிறைந்துள்ள மீன்களைச் சாப்பிட்டு வர வேண்டும். நம் நாட்டில் மேலே குறிப்பிட்ட மீன்களுக்கு இணையான மீன்கள் என்று கெளுத்தி, விலாங்கு, மத்தி, வாளை போன்ற மீன்களைச் சொல்லலாம். இந்த மீன்களில் ஒமேகா 3 உள்ளது. இந்த மீன்களிலுள்ள ஓர் அமிலமானது கண்கள் உலர்ந்து போவதைத் தடுக்கின்றது. வயது முதிர்ச்சியினாலுண்டாகும் பார்வை இழப்பையும் குணமாக்கும் வாரத்திற்கு இரண்டு முறைகள் சாப்பிட வேண்டும்.
பாதாம் பருப்பு
வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது பார்வையைக் காக்கின்றன. அதனால் காட்ராக்ட் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. பாதாம் பருப்புகளை உடைத்துத்தூளாக்கி உணவில் கலந்து சாப்பிட வேண்டும்.
பலாப்பழம்
பலாப்பழத்தில் அதிக அளவில் புரதம், மாவுப் பொருள், சுண்ணாம்பு, வைட்டமின் ஏ,பி,சி, தாமிரம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட் ஆகியவை 80 சதவீதம் அடங்கியுள்ளது. அதிக அளவில் நார்ச்சத்துள்ளது. ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை 11 சதவீதம் மட்டுமே குறைக்கின்றது. அதிக அளவிலுள்ள நார்ச்சத்து உணவு சீரணிக்க உதவுகின்றது.
தைராய்டு சுரப்பியை நன்கு செயல்பட வைக்கின்றது. தோலையும் பார்வையையும் நன்கு பராமரிக்கின்றது. புற்றுநோயை எதிர்க்கும் குணம் நிறைந்துள்ளது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது.
மக்கானா
தாமரைப் பூவில் மணி போன்ற வித்துக்கள் உள்ளன. அவற்றில் புரதம் உள்ளது கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, மக்னீஷியம், பொட்டாஷியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்றவை உள்ளன. இந்த விதைகளில் கொழுப்பும், சோடியமும் குறைவாகவே உள்ளன. இருதய நோயில் வாடுவோருக்கு இதிலுள்ள மக்னீஷியம் பெரிதும் உதவுகின்றது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மேலும், கண் பிரச்னைகளுக்கும் மருந்தாகிறது.
தொகுப்பு: ஜி.லாவண்யா