தூங்கும் முறையால் வரக்கூடிய பிரச்னைகளும் தீர்வுகளும்!
நன்றி குங்குமம் தோழி
சமீபத்தில் கழுத்து வலி காரணமாக நாற்பது வயது பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவரை பரிசோதித்ததில் அவர் ஒரு பக்கமாக தூங்குவதுதான் காரணம் எனக் கண்டறிய முடிந்தது. அதுவும் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அவர் ஒரு பக்கமாகவே தூங்கிப் பழகிவிட்டார். இதனால் ஒரு பக்க கழுத்து தசைகள் இறுக்கமாகவும், மறுபக்கம் பலவீனமாகவும் இருந்தது. கூடவே,
அவருக்கு தோள்பட்டை வலியும் இருந்தது. அவரின் கழுத்து வலிக்குக் காரணம் அவர் உறங்கும் முறைதான் என்று சொன்னது கேட்டு ஆச்சரியம் அடைந்தார். அவருக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் தெரியாது, நாம் உறங்கும் முறையால் நம் கழுத்து தசைகள் பாதிக்கலாம் அல்லது முதுகு தசைகளை பாதித்து கழுத்து வலியோ முதுகு வலியோ வரலாம் என்பது.
இந்நிலையில் ஒருவர் உறங்கும் முறையால் எப்படி பாதிப்பு உண்டாகிறது?
அதிலும் குறிப்பாக ஏன் கழுத்து வலி வருகிறது? பாதிக்காமல் தடுக்க என்ன வழி? போன்றவற்றை இங்கே தெரிந்துகொள்வோம், வாருங்கள்.
தசைகள்...
நம் உடலை இயக்க உதவுவதில் பெறும் பங்கு வகிப்பது தசைகளே. வலிமையுடனும் போதிய ஆரோக்கியத்துடனும் இல்லையெனில், இந்த தசைகள் பலவீனமாகவும் (Muscle Weakness) இருக்கலாம் அல்லது இறுக்கமாகவும் (Muscle Tightness) இருக்கலாம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இந்த தசைகளுக்கு பங்கு உள்ளது. அதனால் வரும் பாதிப்பும் உள்ளது.
உதாரணமாக, பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அவர்களது வயிறு பெரிதாகிக் கொண்டே வரும். இதில் முதுகின் பின்பகுதியில் உள்ள தசைகள் இறுக்கமாகவும், வயிற்று தசைகள்
பலவீனமாகவும் மாறும். இதனால் அவருக்கு முதுகு வலி வருகிறது. இது போலதான் உடலில் எந்த இடத்தில் தசைகள் இருந்தாலும் அதனைத் தொடர்ந்து ஒரு செயலில் ஈடுபடுத்தும் போது அதற்கேற்ற பாதிப்பு வருகிறது.
தசைகளுக்கு வரும் பாதிப்புகள்
* நாம் ஒரு பக்கமாக படுத்துத் தூங்கும் போது அந்தப் பக்கம் இருக்கும் தசைகள் இறுக்கமாகவும், மறுபக்க தசைகள் பலவீனமாகவும் மாறுகிறது. தொடர்ந்து இதேபோல நாம் இரவு முழுவதும் பல வருடங்களாகத் தூங்குவதால் தசைகளும், எலும்புகளும் பாதிக்கப்படுகிறது.
* காலையில் எழுந்ததும் உடல் வலி இருப்பது.
* கழுத்து வலி வருவது.
* முதுகு வலி வருவது.
*சிலருக்கு காலையில் எழுந்ததும் சுளுக்கு போன்ற உணர்வு ஏற்படுவது.
* சிலருக்கு கழுத்தில் இருக்கும் முக்கியமான ட்ரபிசியஸ் (Trapezius) என்னும் தசை பாதிக்கப்படுவதால் தோள்பட்டையும், தலைவலியும் சேர்ந்தே வருகிறது.
தடுக்க வழிகள் உள்ளதா..?
நமக்கு இரவு முழுவதும் ஒரு பக்கமாகவே தூங்கும் பழக்கம் இருந்தால் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை சந்தித்து, அதற்குத் தேவையான உடற்பயிற்சிகளை முன்னரே கற்றுக்கொள்வது சிறந்தது. தினசரி தீர்வாக நாம் காலையில் எழுந்ததும் உடற்பயிற்சிகள் அதாவது, தசை தளர்வு (Stretching Exercises) பயிற்சிகளையும், தசை வலிமை (Strengthening Exercises) பயிற்சிகளையும் செய்து வர வேண்டும். இதனால் நம்மால் முற்றிலும் கழுத்து வலி, முதுகு வலி, உடல் வலியை தவிர்த்திட முடியும். அதோடு, நம் விருப்பம் போலும் படுத்து உறங்க முடியும். எல்லா வகை பிரச்னைகளுக்கும் நிச்சயம் ஒரு தீர்வு இருக்கும். அதுபோலத்தான் நாம் தூங்கும் முறை நமக்கு பழக்கமாகிவிட்டதால், அதனை மாற்றிக்கொள்ள முடியாது. இருந்தும் அதற்கும் ஒரு தீர்வு இருக்கிறது. அதுதான் உடற்பயிற்சிகள். எனவே, தினசரி உடற்பயிற்சிகள் செய்து ஆரோக்கியமாக வாழ்வோம்.
கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்