கர்ப்ப காலமும் இடுப்பு - முதுகு வலியும்!
நன்றி குங்குமம் டாக்டர்
வலியை வெல்வோம்
இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி
ஒருமுறை கால் டாக்சியில் பயணிக்கும் போது , “அண்ணா, எனக்கு முதுகு வலி உள்ளது. அதனால், மேடுபள்ளங்கள், ஸ்பீட் ப்ரேக்கர்லாம் வரும் போது கொஞ்சம் பார்த்து மெதுவாக ஓட்டுங்க” என உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஓட்டுநரிடம் முன்னெச்சரிக்கை நல்கினேன்.
அப்போது ஓட்டுநர், ’என் மனைவிக்கும் இப்படித்தான்மா வலி இருந்துகிட்டே இருக்கு. பொம்பிளையா பொறந்து புள்ளை பெத்துகிட்டாளே இப்படித்தான்னு காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கா, அது ஒன்னும் சரி பண்ண முடியாதுன்னு அப்பப்போ மாத்திரைய போட்டு பேசாமல் இருந்துக்குவா” என்று கூறினார்.
இவர் மட்டுமல்ல நம்மில் பலருக்குமே உடல் உபாதைகள் குறித்து சில நம்பிக்கைகள் உண்டு, “பிரசவம் ஆகிவிட்டால் காலம் முழுவதும் இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும்”, “சிசேரியன் செய்யும் போது போட்ட மயக்க ஊசியால் தான் எனக்கு விடாமல் முதுவலி இருந்துகொண்டே உள்ளது”, “பேமிலி ப்ளானிங் செய்த பிறகு தான் எனக்கு முதுகு வலி அதிகமாகி உள்ளது” இதுபோல் , நம்மில் பலரும் உண்மையான காரணத்தை அறிந்துகொள்ளாமல், பல காரணகாரியங்களை நாமே கற்பித்துக்கொள்கிறோம்.
இவையெல்லாம் எந்த அளவிற்கு உண்மை? குணப்படுத்துவது சாத்தியமா? என்பதைப் பற்றி விலாவாரியாக அறிந்துகொள்வோம்.சிறுவயதில் பள்ளியில் இயற்பியல் பாடத்தில் புவிஈர்ப்பு விசை, புவிஈர்ப்பு மையத்தைப் பற்றிப் படித்திருப்போம். அதாவது புவிஈர்ப்பு விசைக்கு எதிராக சமநிலையை அடைய ஒரு பொருளின் மொத்த எடையும் குறிப்பிட்ட புள்ளியில் குவிந்திருக்கும் இதைத்தான் புவியீர்ப்பு மையம் என்போம் ஆங்கிலத்தில் Center of Gravity (COG).
உருளை, கோளம் மற்றும் கனசதுர வடிவங்களின் புவிஈர்ப்பு மையத்தை எவ்வாறு கண்டறிவது என்பதைப் பற்றியும் படித்திருப்போம். புவிஈர்ப்பு விசையும் அதன் நிறையை பொருத்து மாறுபடும். அதாவது மேலிருந்து கீழே ஒரு பொருள் விழுகிறது என்றால் புவிஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்படுவதால் தான் கீழே விழுகிறது என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால், புவிஈர்ப்பு மையம் அந்தப் பொருளின் இயக்கத்தைத் தீர்மானிக்கிறது என்பதைப் பற்றி கருத்தில்கொள்ள மாட்டோம்.
இயக்கத்தோடும், இயக்கமற்றும் இருக்கும்போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக ஒரு பொருள் சமநிலையை அடைய வேண்டுமெனில், தரையோடு பொருந்தியிருக்கும் அதன் அடித்தளத்தின் பரப்பளவே அந்தச் சமநிலையை தீர்மானிக்கும் இதை ‘Base of Support ‘ என்போம்.உதாரணமாக, ஒரு நான்கு கால் நாற்காலியை எடுத்துக்கொள்வோம். அதன் கால்கள் தரையில் உருவாக்கும் சதுரப் பரப்பே அதன் ஆதார அடிப்படையாகும் (Base of support).
நாம் நாற்காலியில் உட்காரும்போது, நம்முடைய எடை கூட நாற்காலியின் புவியீர்ப்பு மையத்தைப் பாதிக்கும். அதாவது, நமது எடையானது நாற்காலியின் ஆதார அடிப்படைக்கு மேலே சமநிலையில் இருக்கும்போது, நாற்காலி ஸ்திரமாக இருக்கும்.நாம் நாற்காலியில் சரியாக உட்கார்ந்தால், புவியீர்ப்பு மையம் இந்த சதுரத்தின் உள்ளேயே இருக்கும், எனவே நாற்காலி கவிழாது. ஆனால், நாற்காலியைப் பின்னால் அதிகமாக சாய்த்தால், புவியீர்ப்பு மையம் (COG) , ஆதார அடிப்படையின் (Base of support) எல்லைக்கு வெளியே செல்லலாம், இதனால் நாற்காலி கவிழ வாய்ப்பு உள்ளது.
மூன்று கால் முக்காலிக்கும் இந்த அடிப்படை விதிதான். அதேபோல் இரண்டு கால் மனிதனின் உடலுக்கும் இதே இயற்பியல் விதி தான் பொருந்தும்.பதினொன்றாம் வகுப்பில் என் இயற்பியல் ஆசிரியர் கற்றுக்கொடுத்த பிறிதொரு உதாரணத்தை கூறுகிறேன். நாம் நேராக நிமிர்ந்து நின்று வீடு துடைக்கும் போது நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதைக் கவனியுங்கள். அதே நேரம் குனிந்து வீடு பெருக்கும் போது ஒரு கையை நம்மை அறியாமலே பின் முதுகில் சப்போர்ட்டிற்காக வைத்துக் கொள்வோம். இது நமது உடலை சமநிலையை அடையச் செய்ய அனிச்சை செயலாக நடைபெறும் ஒரு இயக்கம்.
இந்த அடிப்படையில்தான் நமது உடலின் உயிர் இயங்குவியலானது (body biomechanics) செயல்படுகிறது. இது நாம் நடக்கும்போது, இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, ஓடும்போது என அனைத்து உடலியக்கத்திற்கும் பொருந்தும்.இரு சக்கர வாகனத்தில் செல்லும் சிலரை பார்த்து உள்ளேன். இடுப்பை வளைத்து ஒரு புறமாக சாய்ந்து ஓட்டிக்கொண்டு செல்வர். இப்படி அவர்கள் செல்லும் போது உடல் தன் புவீர்யீர்ப்பு மையத்தை இடமாற்றி இவர்களின் உட்காரும் தோரணைக்கு தகுந்தாற்போல் உடல் தசைகளை செயல்படுத்தும்.
தொடர்ந்து இவ்வாறே செயல்பட்டால் அவர்களுக்கு இடுப்பு வலி, மூட்டு வலி, முதுகுவலி என அனைத்தும் ஒரு சேர வர வாய்ப்புகள் அதிகம்.மனித உடலின் நிறைக்கு ஏற்ப புவிஈர்ப்பு மையமானது இரண்டு இடுப்பெலும்புகளுக்கு இடையே அமைந்துள்ள சேக்ரம் (sacrum ) எனப்படும் ஒருங்கிணைந்த கடைசி முதுகெலும்பின் இரண்டாவது (S2) எலும்பில் குவிந்து உள்ளது. அதே போல் Base of support இரண்டு கால்களின் பாதங்களுக்கு இடையே உள்ள பரப்பில் அமையும்.
நிற்கும் போதும், உட்காரும் போதும், நடக்கும் போதும் என Base of supportன் பரப்பளவு மாறிக்கொண்டே இருக்கும். அதற்குத் தகுந்தாற்போல் COG இந்த எலும்பிற்கு முன்னும் பின்னுமாக மாறி மாறி அமையும்.இது சாதாரண சராசரியான ஒரு மனிதனின் இயங்குநிலை. ஆனால் கர்ப்ப காலத்தில், வளரும் கரு, மார்பக அளவு அதிகரிப்பு மற்றும் உடல் எடை அதிகரிப்பு (வழக்கமாக 15-25%) ஆகியவை புவியீர்ப்பு மையத்தை முன்னோக்கி மற்றும் சற்று மேல்நோக்கி நகர்த்துகின்றன. இந்த மாற்றம் சமநிலை, நிலைப்பாடு மற்றும் இயக்கத்தை பாதிக்கிறது, குறிப்பாக மூன்றாவது trimesterல் இரண்டாவது trimester லிருந்து ‘ரிலாக்சின்’ என்னும் ஹார்மோன் சுரக்கும், இது இடுப்பு எலும்பு மூட்டுகள் அதைச்சுற்றியுள்ள தசை மற்றும் தசை நார்களை தளர்ச்சியடையச் செய்யும், கரு மேலும் வளர்வதற்கு எளிதாக இடமளிக்க உடலை தயார்படுத்த உதவுகிறது.
வயிறு முன்னோக்கி நகர்வதாலும் , உடல் எடை அதிகரிக்கும் காரணங்களால் உடலின் புவியீர்ப்பு மையத்தில் மாற்றம் ஏற்படும், நடக்கும் தோரணையும் (gait) அதற்கு தகுந்தாற்போல் மாறுதல் அடையும். இதனை “waddling gait” அல்லது ‘pregnant waddle’ என்போம்.அதாவது இடுப்பு மற்றும் இடுப்புத் தசைகள் விரிவடைவதற்கு தகுந்தாற்போல் கால் பாதங்களுக்கிடையே base of support யை அதிகப்படுத்தும் பொருட்டு பாதங்களை அகலமாக வைத்து நடந்து செல்வர் , இடுப்புவலி உள்ள சிலருக்கும் இது போல் நடை மாறும்.கர்ப்ப காலத்தில், பெண்களின் உடலில் ஏற்படும் இது போன்ற மாற்றங்கள் தசைகளின் செயல்பாட்டை பாதிக்கின்றன.
அவற்றில், சில முக்கிய தசைகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளைக் காண்போம் ..
1.வயிற்றுத் தசைகள் (Abdominal Muscles):
*கர்ப்ப காலத்தில், வயிற்று தசைகள் (rectus abdominis, transverse abdominis) கருப்பையின் வளர்ச்சியை அதிகரிக்க விரிவடைகிறது .இந்த தசைகள் கருவின் எடையை தாங்குவதற்கும், முதுகு வலியை குறைப்பதற்கும் உதவுகின்றன.
*செயல்பாடு: வயிற்று தசைகள் விரிவடைந்து , பிரசவத்திற்கு உதவுவதற்கு தயாராகின்றன, ஆனால் அவை
பலவீனமடையலாம் (diastasis recti).
2.இடுப்பு தள தசைகள் (Pelvic Floor Muscles):
*இடுப்பு தள தசைகள் கரு, கருப்பை மற்றும் கூடுதல் எடையை தாங்குகின்றன.
*செயல்பாடு: இந்த தசைகள் சிறுநீர் கழிப்பதை அல்லது கசிவை கட்டுப்படுத்துவது, கருப்பையை தாங்குவதோடு மட்டுமல்லாமல் பிரசவத்தின் போது முக்கிய பங்கு வகிக்கின்றன. கர்ப்ப காலத்தில் இவை பலவீனமடையலாம்.
3.முதுகு தசைகள் (Back Muscles):
*முதுகு தசைகள் (erector spinae) கர்ப்ப காலத்தில் உடல் எடை மற்றும் மையப் பகுதியின் மாற்றத்தால் அதிக அழுத்தத்தை எதிர்கொள்கின்றன.
*செயல்பாடு: இவை உடலை நிமிர்ந்து வைத்திருக்க உதவுகின்றன, ஆனால் கர்ப்ப காலத்தில் இதில் ஏற்படும் மாற்றத்தால் முதுகு வலி ஏற்படலாம்.
4.கால் தசைகள் (Leg Muscles):
*கால் தசைகள் (quadriceps, hamstrings, calf muscles) உடல் எடை அதிகரிப்பால் கூடுதல் சுமையை தாங்குகின்றன.
*செயல்பாடு: நடைபயிற்சி மற்றும் நிலைத்தன்மைக்கு உதவுகின்றன, ஆனால் கால் வலி அல்லது தசைப்பிடிப்பு (cramps)ஏற்படலாம்.
5.இடுப்பு மற்றும் இடுப்பு மூட்டு தசைகள் (Hip and Gluteal Muscles):
*இடுப்பு தசைகள் (gluteus maximus, medius) மற்றும் இடுப்பு மூட்டு தசைகள் உடல் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன.
*செயல்பாடு: கர்ப்ப காலத்தில் இடுப்பு மூட்டு தளர்வு (relaxin ஹார்மோன் காரணமாக) ஏற்படுவதால், இந்த தசைகள் கூடுதல் பணியாற்றுகின்றன.கர்ப்ப காலத்தில் தசைகளை வலுவாக வைத்திருக்க, மருத்துவரின் ஆலோசனையுடன் மிதமான உடற்பயிற்சிகள் யோகா, நீச்சல், பெல்விக் ஃப்ளோர் உடற்பயிற்சிகள் செய்யலாம்.
இதன் தொடர்ச்சியாக அடுத்த இதழில் கர்ப்பகாலத்தில் எலும்பு மூட்டுகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சிசேரியனின் போது முதுகில் போடப்படும் மயக்க ஊசியால் நீண்ட கால முதுகுவலி உண்டாகுமா? அது எந்தளவிற்கு உண்மை என்பதைப்பற்றியும் அறிந்து கொள்ளலாம்.