ஏன் வேண்டும் எக்சர்சைஸ்!
நன்றி குங்குமம் டாக்டர்
இன்றைய நவீன உலகில், அன்றாட வாழ்வில், நம் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான பல விஷயங்களைத் தவற விடுவது என்பது சகஜமாகிவிட்டது. உடல் உழைப்பு இல்லாத வேலையைத்தான் பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகின்றனர். அனைத்து வேலைகளையும் செய்வதற்கு, இயந்திரங்கள் வந்து விட்டதால், குடும்ப தலைவலிகளுக்கும் உடல் உழைப்பு குறைந்து விட்டது.உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம் காலமாக நாம் பேசி வந்தாலும், அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. நேரத்துக்குச் சாப்பிடாமல், தூங்காமல் வேலை வேலை என எப்போதும் வேலையில் மூழ்கிக் கிடப்பவர்கள், தவறவிடும் முக்கியமான விஷயம்… காலை உடற்பயிற்சி.
உடற்பயிற்சி மேற்கொண்டால், நோயற்ற வாழ்வு வாழலாம். இன்றைய அவசர யுகத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும்வரை பலரும் உடற்பயிற்சியை அலட்சியப்படுத்தி, உடல் நலம் கெட்ட பின்தான் அதன் தேவையை உணர்கிறார்கள். பலரும் ஒருமுறை இதய நோய் அல்லது நீரிழிவு தாக்கிய பின்தான், உடற்பயிற்சியை தொடங்குகிறார்கள். இத்தகைய நோய்கள் ஒருமுறை தாக்கினால், அதன் பாதிப்பு ஆயுள்வரை கூடவே இருக்கும். உடற்பயிற்சிக்கெல்லாம் நேரமே இல்லை என்பவர்கள், பின்னால் தங்கள் பெரும்பாலான நேரத்தை மருத்துவமனைகளில் தங்கி, அவர்கள் சொல்லித்தரும் உடற்பயிற்சியினை கடைசி வரை செய்ய வேண்டியிருக்கிறது.
உடற்பயிற்சி எதற்கு?
உடற்பயிற்சி என்பது உடல்நிலையையும், நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். உடற்பயிற்சி ஒரு நபரின் உடல் நலத்தைப் பாதுகாப்பதுடன், அவருடைய உடல்நிலையை சீராக்குகிறது. உடற்பயிற்சி இயன்முறை மருத்துவத்தில் பெரும் பங்கை வகிக்கிறது. நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச்சறுக்கல், மிதிவண்டி ஓட்டுதல், விளையாடுதல், நடனம் ஆடுதல், யோகாசனம் செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற்பயிற்சிகளே.
இதயநோய், சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும். மேலும் உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும். மேலும் உடற்பயிற்சியானது மனவளத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைத்து, தன்னம்பிக்கையை ஊட்டி, உடல் தோற்றத்தை மேம்படுத்துகின்றது. குழந்தைகளுக்கிடையே பெருகி வரும் உடல்பருமனை குறைக்க உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சி மூலம் அசைவற்றிருக்கும் உறுப்புகளை அல்லது போதிய அசைவின்றிருக்கும் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சரிவரச் செய்யும்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு...
ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியமா? என்பது சிலரது கேள்வியாக இருக்கிறது. ஆம், ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியம் என்றே மருத்துவர்கள் பரிந்துரைகின்றனர். நீண்ட நேரம் அமர்ந்தே வேலை பார்ப்பதால், உடல் உழைப்பு பெருமளவு, நோய், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துவிட்டது. இதைத் தவிர்க்க, நலமான வாழ்க்கையை விரும்புபவர்கள் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க முடியாது.
முன்னோர்கள் உடற்பயிற்சி
நம் முன்னோர்கள் தங்களது உடலை கட்டுப்பாடாக கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள, திருவிழாக்களின் போது உடற்பயிற்சி போட்டிகளை நடத்தி ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவைகள் முறையே கர்லா கட்டை சுற்றுவது, மல்யுத்த போட்டி, தண்டால் எடுப்பது முதலியனவாகும். மேலும் தொடர் ஓட்டம், ஆற்றில் குளத்தில் கடலில் நீந்துவது கப்பலைச் செலுத்துவது முதலியனவாகும். இன்னும் சில கிராமங்களில் இளவட்டக்கல் தூக்குவது, வழுக்குமரம் ஏறுவது போன்ற அருமையான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இவை அனைத்துமே நமது உடல் உழைப்பு சார்ந்த உடல் இயக்கத்துக்கு தேவையான வலுப்படுத்தும் பயிற்சிகளாகவே அமைகிறது.
உடற்பயிற்சி வகைகள்
உடற்பயிற்சியில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஸ்டென்த்தனிங் டிரைனிங். இரண்டு கார்டியோ உடற்பயிற்சி, தசைகளை வலுப்படுத்துவதற்கானது முதல் வகை. உடலில் இருக்கும் கொழுப்பை அகற்றுவதற்காக செய்யும் பயிற்சிகள் இரண்டாவது வகை, (ட்ரெட்மில், சைக்கிளிங், ஓடுதல், நடனமாடுதல், ஏரோபிக்ஸ் செய்தல் போன்றவை கார்டியோ பயிற்சியாகும்) இவைகளை தினமும் முறையாகச் செய்தால், உடலில் இருக்கும் கொழுப்பு குறையும். தசையும் பலமாகும். இந்த இரண்டு வகை உடற்பயிற்சிகளையும் அவரவருக்குத் தேவையான அளவில் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
தேவையான நேரம்
எதற்கும் நேரம், கால அளவு உண்டு அல்லவா. அது போல எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம். கால வரையறை உண்டா, இதுவரை உடற்பயிற்சி ஏதும் செய்யாதவராக இருந்தால் முதல் நாள் ஐந்து நிமிடங்கள் செய்தால் போதும். அடுத்து வரும் நாட்கள் சிறிது சிறிதாக பயிற்சி நேரத்தை அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை அதிகரிக்கவும். இப்படி வாரம் ஐந்து நாட்கள் செய்தால் போதும். ஆனால் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தல் வேண்டும். அதுவே நல்ல பலனை கொடுக்கும்.
ஏற்ற நேரம்
அதிகாலையில், வெறும் வயிற்றில் எளிய பயிற்சிகளை செய்யலாம். ஏனெனில் காலையில்தான் கொழுப்பு விரைவில் கரையும்.
உடற்பயிற்சிக்கு பதிலாக...
உடற்பயிற்சிக்கு பதிலாக மாற்று வழிகள் ஏதேனும் உண்டா? உண்டே. அன்றாடம் செய்யும் வேலைகளையே ஒரு உடற்பயிற்சி போல செய்யலாம். வீட்டு வேலைகள், தோட்டத்தை பராமரித்தல் உடலுக்கு நன்மை தருவது என்ற எண்ணத்தோடு, ஒரு பயிற்சிபோல செய்யலாம். லிஃப்ட் இருந்தாலும் அதைத் தவிர்த்து மாடிப்படி ஏறி செல்லலாம். வேலை இடைவேளையில் ஒரு பொடி நடையாக பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு சென்று வரலாம். கடைகளுக்குப் போக நடந்தே செல்லலாம். அல்லது சைக்கிளில் சென்று வரலாம். கூடியவரை இருசக்கர வாகனத்தை தவிர்க்கலாம். ஓய்வு நாட்களில் வீட்டை சுத்தப்படுத்துவது, காரை சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளை ஆர்வத்தோடு செய்யலாம்.
நன்மைகள்
உடற்பயிற்சி என்பது எல்லா மனிதனுக்கும் தேவையான ஒன்றாக இந்த காலகட்டத்தில் மாறி போய்விட்டது. நமது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதற்கு உடற்பயிற்சி பெரிதும் பயன்படுகிறது. இதற்குக் கடுமையான உடற்பயிற்சி செய்தால் மட்டுமே நமது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க முடியும் என்பது கிடையாது. குறைந்தபட்சம் 15 நமிடங்கள் செய்தாலே போதுமானது.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட, காலை உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள ஹார்மோன்களான செரோடோனின், நோர்பினேப்ரைன், எண்டார்ஃபின், டோபமைன் ஆகியவை அதிகரிக்கின்றன. இதனால் நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. முன்கோபம், படபடப்பு ஆகியவை
கட்டுப்படுத்தப்படுகின்றன.
முதன்முறையாக உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் கடினமான ஜிம் பயிற்சிகள் செய்யத் தேவையில்லை. 10 நிமிட சுலபமான பயிற்சி மூலமாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது. இதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகிறது.
தொகுப்பு: பாலசர்மா