நாவல் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர்
அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை நாம் அவசியம் சாப்பிட வேண்டும். நாவல் பழமும் இந்த வகையைச் சேர்ந்ததே. சர்க்கரை நோயை விரட்டுவது முதல் பல் ஈறுகள் பிரச்னைகளை போக்குவது வரை பெரும் பலனை தரக்கூடியது நாவல் பழம். நாவல் பழத்தின் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம். புரோட்டீன், மெக்னீசியம், வைட்டமின்C, B, குளுக்கோஸ், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து இப்படி பல சத்துக்களை அடக்கியதுதான் நாவல்பழம்.. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கும் நாவல் பழம் பெரிதும் கை கொடுக்கிறது..
இதய பாதுகாப்பு: இதய நோய்கள் வராமல் தடுப்பதில் இந்த பழத்துக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.. காரணம், நாவல் பழத்தில் பொட்டாசியம் ஏராளமாக அடங்கியிருக்கிறது. அதாவது, 100 கிராம் நாவல் பழத்தில் 55 மில்லிகிராம் பொட்டாசியம் இருக்கிறதாம். எனவே, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்து நோய்களை நெருங்க விடாமல், தமனிகளை சீராக செயல்படவைக்க இந்த பழம் தூண்டுகோலாகிறது.
சர்க்கரை நோயாளிகள்: லோ கிளைசெமிக் இன்டெக்ஸ் நிறைந்த இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க முடியும். இனிப்பின் அளவும் இந்த பழத்தில் மிகவும் குறைவு. நீரிழிவு நோயாளிகள், இந்த பழத்தின் விதைகளை நன்றாக இடித்து துாளாக்கி, தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தாலே நீரிழிவு நோய் குணமாகும்.
அதிகமாக சிறுநீர் கழிப்பது மற்றும் தாகம் உள்ளிட்ட நீரிழிவு நோயின் அறிகுறியை இந்த பழம் குணப்படுத்துகிறது.நாவல் பழத்தில் உள்ள நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் இந்த பழம் உதவுகிறது.
நாவல் பழம் பாக்டீரியா எதிர்ப்பு, தொற்று எதிர்ப்பு, மலேரியா எதிர்ப்புப் பண்புகள் அடங்கியிருக்கின்றன. அதனால், நாவல் பழத்தை சாப்பிட்டு வரும்போது, தொற்றுகள் எளிதில் நம்மை அண்டாது. ஞாபக சக்தியையும் அதிகரிக்கின்றது. ஈறுகள், பற்கள், பிரச்னைக்கு நாவல் பழம் சாப்பிட்டாலே போதும்.அதே சமயம் நாவல் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அதுபோன்று பழம் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி அல்லது அதன்பிறகுதான் வேறு எதுவும் சாப்பிட வேண்டும்.
தொகுப்பு: தவநிதி