வேண்டாமே சுய வைத்தியம்!
நன்றி குங்குமம் டாக்டர்
நோய் நாடி நோய் முதல் நாடி
பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு
நோய் நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளின் வரிக்கேற்ப, மக்களின் பொதுநலப் பிரச்சனைகளை வரிசைப்படுத்திக்கொண்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தொடர் ஒரு நல்ல துணையாக எனக்கு இருந்தது. ஏனென்றால், மனிதனுக்கு ஏற்படும் நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோயைத் தீர்க்கும் வழி என்ன? இந்த மூன்றையும் வைத்துதான், ஒரு மருத்துவர் நோயைப் பற்றியும், நோயின் வீரியத்தை பற்றியும் புரிந்து, அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்க வேண்டுமென்று திருவள்ளுவர் கூறுகிறார்.
அவர் எழுதிய கூற்றின்படி, கடந்த சில மாதங்களாக பல்வேறு விதமான தலைப்பில், மருத்துவரின் பார்வையில் சரியான விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன். அதில், டிபி, முதியோர்களின் பிரச்சனைகள், சுகர், பிரஷர், அனீமியா என்று பெரும்பாலும் மக்கள் அவதிப்படும் விஷயங்களை பற்றி முறையான தகவல்களைத் தெரிந்துகொண்டோம். தற்போது, இந்த தொடரின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறோம்.
மக்களிடம் மருத்துவ ரீதியான விழிப்புணர்வை எழுதிக் கொடுத்தாலும், இன்னும் மருத்துவரின் ஆலோசனையின்றி, சுயமாக சென்று, மெடிக்கல் ஷாப்பில் மருந்து மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலும் மூன்று வகையான மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனையின்றி அதிகமாக விற்பனையாகிறது எனலாம். ஓடிசி (OTC) முறையின்படி, நம் மக்கள் பெரும்பாலும் வாங்கும் மாத்திரைகளின் தன்மை எதுவென்றால், வலி மாத்திரைகள், ஸ்டிராய்டுகள், ஆன்டிபயாடிக் மாத்திரைகள் இவை மூன்றும்தான் பரவலாக வாங்கப்படுகிறது. வேறுவித உடல் உபாதைகளுக்கும் மாத்திரைகள் வாங்கினாலும், இவை மூன்றிலிருந்துதான் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்கிறேன் என்ற பெயரில், இன்னும் தங்களை வதைத்துக்கொள்கிறார்கள்.
வலி மாத்திரைகள்
உதாரணத்திற்கு, ஒருவர் தலை வலிக்கிறது என தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால், அது தலைவலிக்கானது என்று மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், ஒருவருக்கு தொடர்ந்து தலைவலி ஏற்படுகிறது எனும்போது, அவருக்கு பிபி இருக்கலாம் அல்லது கண் சார்ந்த பிரச்னைகள் இருக்கலாம் அல்லது மூளையில் ஏற்படும் பிரச்னைகளும் இருக்கலாம். உதாரணத்திற்கு, கண் பார்வை சார்ந்து தலைவலி ஏற்படும் போது, கண்ணுக்கு சிகிச்சை எடுக்காமல் தலைவலி மாத்திரை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டால், அதனால் ஏற்படும் உடல் உபாதைகள் இன்னும் அதிகரிக்கும்.
இரண்டாவதாக, காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் என்றாலே வைரஸால்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறோம். சில வகையான காய்ச்சல் சாதாரண வைரஸால் வருகிறது என்றால், பெரும்பாலும் அதற்கான சிகிச்சை என்று கேட்டாலே, மருத்துவர்கள் வீட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்பார்கள். நமக்கான ஓய்வு மற்றும் நமக்கான ஆரோக்கிய உணவை அந்த நேரத்தில் சரியாக எடுத்துக் கொண்டால், சாதாரண வைரஸின் பாதிப்பால் ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் தானாகவே சரியாகிவிடும்.
காய்ச்சலா, உடனே பாராசிட்டாமல் வாங்கி சாப்பிடுவது என்று பலரும் ஒரேமாதிரியாகத் தான் செயல்படுகிறார்கள். பாராசிட்டமால் மாத்திரையை மருத்துவர்கள் ஒரு நோயாளிக்கு எழுதும் முன், செவிலியர் முதலில் நோயாளியின் உடலின் எடை மற்றும் பிபி சார்ந்து எடுக்கும் தகவலை வைத்து தான், மருத்துவர்கள் பாராசிட்டமால் மாத்திரையின் அளவைக் குறிப்பிட்டு எடுத்துக்கொள்ள கூறுவார்கள். பொதுவாக, வைரஸால் ஏற்படும் காய்ச்சலை பாராசிட்டமால் கட்டுப்படுத்துமே தவிர, குணப்படுத்தாது. அதற்கு மருத்துவர் பரிந்துரைக்கும் வேறு சில ஊசி மருந்துகள் மற்றும் மாத்திரைகளின் பங்கும் இருக்கிறது என்ற புரிதலும் மக்களுக்கு இருக்க வேண்டும்.
ஸ்டிராய்டுகள்
மேலும், வலி நிவாரணியாகவும், சில நேரங்களில் காய்ச்சலுக்கும் ஸ்டிராய்டு மாத்திரைகளையும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஸ்டிராயிட் மாத்திரைகளைப் பற்றி மருத்துவர்களாகிய நாங்கள் கூறுவது என்னவென்றால், மக்கள் சுயமாக வாங்கும் ஸ்டிராய்டு மாத்திரைகளைப் பொறுத்தவரை நோயாளிகளுக்கு வலி கேட்பது போலவும், உடலில் ஏற்பட்ட பாதிப்பு முழுமையாக குணமாகி விட்டது போலவும் தான் நம்பவைக்கப்படும். இதனால் ஸ்டிராய்டு மாத்திரை எடுப்பவரின் உடலில் உண்டாகும் உண்மையான வலி மற்றும் நோய் ஏற்பட்டதற்கான காரணங்கள் புலப்படாமல் போய் விடுகிறது.
உடலில் ஏற்படும் நோய்களுக்கு ஸ்டிராய்டு மருந்தினை ஒரு மருத்துவர் பரிந்துரைக்கிறார் என்றால், அதனோடு சேர்ந்து, அவருடைய உடலின் தன்மைக்கு ஏற்றவாறும், வயதுக்கு ஏற்றவாறும், நோயின் வீரியத்தைப் பொறுத்தும் தான் ஸ்டிராய்டு மருந்துடன் இணைந்து மற்றும் வேறு சில மாத்திரைகளும் பரிந்துரைப்பார்.
ஆன்டிபயாடிக்
மூன்றாவதாக, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், ஆன்டிபயாடிக் மாத்திரைகளின் விற்பனையும் குறைந்தபாடில்லை எனும்போது, ஒரு பக்கம், சில மருந்தகங்களில் இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆன்டிபயாட்டிக் மருந்துகள், மருந்தகங்களில் மருத்துவர் சீட்டு இல்லாமல், விற்பனை செய்வதில்லை என்பது ஆறுதலான விஷயமாக இருக்கிறது. இந்தியாவில் மருத்துவரின் ஆலோசனையின்றி வாங்கும் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் பெரும்பாலும், தரமற்றதாக இருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து இந்த மாத்திரைகளை மக்கள் உட்கொள்ளும் போது, ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு மக்களிடையே ஏற்படுகிறது. அதாவது, மருத்துவர்கள் ஒரு சில ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை பரிந்துரை செய்யும் போது, அது உடலுக்குள் சென்று மனிதர்களை குணமாக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். நம் சமூக மக்கள் இதற்கு நேரெதிராக, மருத்துவரின் ஆலோசனையின்றி இம்மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடும்போது, ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு அதாவது, குணமாக்கும் தன்மையினை இந்த மாத்திரைகள் இழந்து விடுகிறது என்போம்.
மக்கள் சுயமாக மருந்து எடுக்கும் தன்மையால், தற்கொலைக்கும், கொலைக்கும் வித்தியாசம் தெரியாமல், தங்களைத் தாங்களே வதைக்கும் முறையில் செயல்படுகிறார்கள். இதில் படித்தவர், படிக்காதவர் என்ற பாரபட்சமில்லாமல், மருந்துகள் சுயமாக வாங்கிச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. இதற்கான விழிப்புணர்வை மருத்துவத்துறை சார்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர்ந்து கூறினாலும், இன்னும் பலர் சேர்ந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது.
இவை எல்லாவற்றையும் கடந்து, சில நேரங்களில் கை வைத்தியம் செய்வதைப் பார்க்கும் போது, இன்னும் மக்களின் அறியாமையின் மீது கோபம் வருவதைத் தடுக்க முடியாது என்று கூறலாம். முதலில் கை வைத்தியமுறை என்றாலே, மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி சாப்பிடுவது தான் என்று அனைவரும் ஒரு சேரக் கூறுவார்கள். கீழாநெல்லி நல்லது தான். ஆனால், எதனால் மஞ்சள் காமாலை வருகிறது என்றும், எந்த வைரசால், எந்தளவிற்கு உடல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் மருத்துவரின் உதவியோடு தெரிந்து கொள்ள வேண்டும்.
சில ஆண்களுக்கு ஆல்கஹால் எடுப்பதால் மஞ்சள் காமாலை ஏற்படும். அவர்களுக்கு மருத்துவர் பெரும்பாலும் கூறுவது, ஆல்கஹால் எடுக்காமல் இருந்தாலே மஞ்சள் காமாலை சரியாகி விடும். சில வைரசால் ஏற்படும் மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி மற்றும் ஓய்வும் இருந்தாலே போதுமானது, மஞ்சள் காமாலை சரியாகி விடும். ஆனால், இந்த முறை, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ஏற்றுக் கொள்ளுமா என்றால், கண்டிப்பாக இல்லை என்றே கூறுவேன். மேலும், சில வைரஸ்கள் மற்றும் வேறு காரணங்களால் ஏற்படும் மஞ்சள் காமாலையின் பாதிப்பை மருத்துவரின் உதவியுடன் கண்டறிந்து, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளால் மட்டுமே மஞ்சள்காமாலையை குணமாக்க முடியும். இல்லையென்றால், சில நேரங்களில் கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு உயிருக்கே பாதிப்பு ஏற்படும்.
அடுத்தபடியாக, நம் மக்கள் செய்யும் கைவைத்திய முறைகளைப் பார்த்தால், வயிறுக்கு வாய் இருந்தால், கதறி அழுது விடும்.சிலருக்கு பல தடவை டயரியா போனாலும், மருத்துவரைப் பார்க்காமல் பன் சாப்பிடுவது அல்லது பரோட்டா சாப்பிடுவது என்றிருப்பார்கள். அதாவது மலம் வராமல் தடுத்து விடும் என்பது அவர்களின் நம்பிக்கை. மேலும், நீர் அதிகமாக குடித்தால், அடிக்கடி டயரியா போக வேண்டும் என்று, தண்ணீர் குடிப்பதையும் குறைத்து விடுவார்கள். ஆனால், வயிற்றுப் போக்கு அதிகமாகும் போது, உடலில் நீர்ச்சத்து குறைந்து விடும்.
செரிமானப் பிரச்சனையும் இருக்கும். அதனால் உங்களுக்குப் பழக்கப்படாத உணவுகளை, கை வைத்தியம் என்ற ஒரே காரணத்துக்காக சாப்பிடும் போது, அது இன்னும் வயிற்றுப் போக்கினை அதிகரித்து விடும் அல்லது வயிறு புண்ணாகி விடும். அதனால் தான், நாம் தொடர்ந்து சாப்பிட்டுப் பழக்கப்பட்டிருக்கும் கஞ்சி, இட்லி என்று மிதமாக இருக்கும் உணவினை மருத்துவர்கள் சாப்பிடச் சொல்லுவார்கள்.
ஒரு சிலருக்கு ஓரிருதடவை வயிற்றுப்போக்கு ஏற்பட்டதும், நீர்ச்சத்தை உடலில் அதிகரிக்க எலக்ட்ரால் பவுடரை தண்ணீரில் கலந்து குடிக்கவும். அதுமட்டுமில்லாமல், எளிதில் செரிக்கக்கூடிய, உணவுகளை எடுத்துக் கொண்டு ஓய்வு எடுத்தாலே போதுமானது வயிற்றுப்போக்கு சரியாகி விடும். ஆனால் பலமுறை வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, அதோடு காய்ச்சல் மற்றும் வயிற்றுவலி இருந்தால் உடனே மருத்துவரைப் பார்த்து, சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
இப்படியாக, மருத்துவ ரீதியான சிகிச்சை முறைகளுக்கு கை வைத்தியமோ அல்லது சுயமாக மருந்துகள் சாப்பிடுவதோ எல்லா நேரத்திலும் சரியாக இருக்காது. நமது நாட்டில், அதிலும் தமிழ்நாட்டில் மருத்துவர்களைச் சந்திப்பது மிகவும் எளிது. இருபத்து நான்கு மணி நேரமும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை என்று எல்லா மருத்துவமனைகளிலும் நோயாளிகள் எளிதாக மருத்துவரைப் பார்க்க முடியும். அந்த வசதியை சரியாக மக்கள் பயன்படுத்தினாலே, பல நோய்களிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். அனைவருக்கும் இந்த தொடரின் மூலம் எனது நன்றியினையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.