கழுத்து வலியும் கை கொடுக்கும் இயன்முறை மருத்துவமும்!
நன்றி குங்குமம் தோழி
நமது உடலில் முதன்மையாக பாதிக்கப்படுவது முதுகுகளில் உள்ள மூட்டுகள்தான். எண்ணிப் பாருங்கள் நம் வீட்டில் ஒருவருக்காவது முதுகு வலி இருக்கும். அதற்கடுத்ததாக கழுத்து வலியை சொல்லலாம். அப்படி கழுத்து வலி காரணமாக என்னிடம் மருத்துவத்துக்கு வரும் பலர் கேட்கும் கேள்விகளில் சிலவற்றை இங்கே அதே கேள்வி பதில் வடிவில் தருகிறேன்.
* கழுத்து வலி என்று எலும்பு மூட்டு மருத்துவரிடம் சென்றபோது அவர் கழுத்துக்கு காலர் பெல்ட் அணிவது அவசியம் என்றார். இதனைக் கட்டாயம் அணிய வேண்டுமா? ஏன் இதனை அணிய வேண்டும்? இதனால் என்ன நடக்கும்?
கழுத்துக்கு காலர் பெல்ட் அணிவது அவசியம் இல்லாத ஒன்று. கழுத்து வலி இருப்பவர்கள் முதலில் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி போதுமான சிகிச்சை பெற்று உடற்பயிற்சிகள் செய்துகொள்வது அவசியம். உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தாலே கழுத்து வலி இல்லாமல் இருக்கும். இதனால் நாம் கழுத்துக்கு காலர் பெல்ட் போட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஒருவேளை அதிக தேய்மானம் இருந்தால், கழுத்து வலியும் தொடர்ந்து இருந்தால் வாகனங்களில் பயணிக்கும் போது மட்டும் கழுத்துக்கு காலர் பெல்ட் போட்டுக் கொள்ளலாம். தொடர்ந்து பெல்ட் அணிவதால் இருக்கும் சிக்கல் என்னவெனில் கழுத்தினை அசையாமல் நாம் வைத்திருப்போம். இதனால் தசைகள் மேலும் பலவீனம் ஆகுமே தவிர வேறு எந்த தீர்வும் இதில் இல்லை. அதனால்தான் கழுத்துக்கு காலர் பெல்ட்டை தவிர்க்க வேண்டும் என்கிறோம்.
*நான் ஆடை வடிவமைப்புத் துறையில் புதிதாக சேர்ந்துள்ளேன். எனக்கு குறைந்தது ஏழிலிருந்து எட்டு மணி நேரமாவது தையல் மிஷினில் உட்காரும்படி இருக்கிறது. கழுத்து வலி வராமல் இருப்பதற்கு நான் என்ன வழியில் தற்காத்துக்கொள்ள வேண்டும். இதற்கு இயன்முறை மருத்துவரின் ஆலோசனை என்ன?
வருமுன் தடுக்கலாம் என்பதை நீங்கள் உணர்ந்ததால் முதலில் உங்களுக்கு என் வாழ்த்துகள். தையல் தொழிலில் உள்ளவர்கள் நுணுக்கமாக துணிகளைப் பார்க்க வேண்டும். இதனால் நம்மை அறியாமல் நாம் கழுத்தினை முன்னோக்கிப் பார்ப்போம். இரு தோள்பட்டைகளையும் மேலே தூக்கி கவனமாக வேலை செய்வோம் என்பதால், இரு தோள்பட்டைகளும் இறுக்கமாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதனால்தான் தையல் தொழிலில் உள்ளவர்கள் கழுத்திற்கான முழு உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். எந்தெந்த தசைகள் இறுக்கம் பெறுமோ அதனை தளர்த்தவும், எந்தெந்த தசைகள் வலுவிழக்குமோ அதனை வலிமை செய்யவும் உடற்பயிற்சிகள் உதவும். இதனைத் தொடர்ந்து செய்து வரும்போது கழுத்து வலி வராமல் தடுக்கலாம்.
*எனக்கு சமீபத்தில் கழுத்து வலியுடன் கைகளிலும் வலி பரவி கை மரத்துப்போவது, கை குடைவது போன்றவையும் இருந்தது. ஏன் அப்படி நிகழ்ந்தது? கைக்கும் கழுத்துக்கும் என்ன தொடர்பு?
கைகளுக்கு மூளையில் இருந்து வரும் மொத்த சமிக்கைகளும் நரம்பின் வழியாகவே வருகிறது. இந்த நரம்புகள் கழுத்தின் வழியாகத்தான் கைகளுக்குச் சென்று சேர்கிறது. எனவே, கழுத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படும்போது அது நரம்புகளை பாதிக்கிறது. அதனால் கைகளும் பாதிக்கப்படுகிறது. இதனால்தான் கைகளில் மரத்துப்போவது, குடைவது போன்ற பிரச்னைகள் வருகிறது. வலி வரும் முன்னரே அதற்கான தீர்வுகளை அணுகுவது மிகச் சிறந்த வழி. உடற்பயிற்சிகள் செய்வதுதான் இதன் தீர்வும் கூட.
*எங்கள் குடும்பம் நிறைய நபர்களைக் கொண்ட குடும்பம். இதில் பெண்கள் மட்டுமே பதினைந்து பேர் இருக்கிறோம். கழுத்து வலியும் அதிகம் எங்களின் பெண்களுக்குதான் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்குதான் அதிகம் கழுத்து வலி வருமா?
ஆமாம். உடல் மூட்டுகளில் உள்ள பிரச்னைகளுக்கு ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் தொடர்ந்து சமைப்பதாலும், தொலைக்காட்சி அதிகம் பார்ப்பது, கீழே குனிந்து செய்யும் வேலைகளான காய்கறிகளை நறுக்குவது போன்ற பல வேலைகள் அவர்களின் தினசரி வாழ்வில் அதிகளவு கழுத்திற்கு சிரமம் கொடுப்பதால் எளிதாக அவர்களுக்கு கழுத்து வலி வருவதை நாங்கள் பார்க்கிறோம். எனவே, பெண்கள் கட்டாயமாக உடற்பயிற்சிகள் செய்துகொள்வது நல்லது.
*கழுத்து வலி வந்தவுடன் எந்தப் பரிசோதனை முதலில் செய்ய வேண்டும்? எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்வது அவசியமா?
முதலில் கழுத்து வலி வந்தால் எந்தவிதமான பரிசோதனைகளும் செய்ய வேண்டிய அவசியமில்லை. அருகில் உள்ள இயன்முறை மருத்துவரிடம் சென்று தசைகளை பரிசோதித்துக் கொள்ளலாம். எதனால் கழுத்து வலி வருகிறது என்று அவர் கண்டறிந்து, அதற்கான உரிய தீர்வும் தருவார். அதன் பின்பும் கழுத்து வலி நீடிக்கிறது அல்லது கழுத்து வலிக்கான காரணம் நரம்பிலோ இல்லை எலும்பிலோ இருக்கிறது என்று அவர் சொன்னால், அதற்குப் பிறகு நாம் எக்ஸ்ரே அல்லது ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை தேர்வு செய்யலாம்.
*கழுத்து வலி என்று மருத்துவரிடம் சென்றபோது அவர் சில மாத்திரைகளை பரிந்துரைத்தார். பின்பும் கழுத்து வலி சரியாகவில்லை என்பதால் அவர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தார். ஆனால், நண்பர்களோ இயன்முறை மருத்துவம் செய்துகொள்வது மட்டும் போதும் என தெரிவித்தனர். அறுவை சிகிச்சையா, இயன்முறை மருத்துவமா எதை நான் தேர்வு செய்ய வேண்டும்?
99 சதவிகிதம் அறுவை சிகிச்சை யாருக்கும் தேவைப்படாது. மிகவும் மோசமான நிலையில் தேய்மானமடைந்து நரம்பு முற்றிலும் அழுத்தப்பட்டு இருந்தால் அப்போது அறுவை சிகிச்சையை மருத்துவர் தேர்வு செய்யலாம். ஆனால், அறுவை சிகிச்சை செய்த பின்பும் உடற்பயிற்சிகள் செய்தாக வேண்டும். அதனால் இயன்முறை மருத்துவம் போதுமானது. இளம் வயதாக இருந்தாலும் சரி, வயதானவராக இருந்தாலும் சரி இயன்முறை மருத்துவ உடற்பயிற்சிகள் மட்டுமே முழு முதல் தீர்வு.
*எனக்கு இருபக்க தோள்பட்டை தசைகளிலும் வலி ஏற்படுகிறது. அழுத்திப் பார்த்தால் கல் போல இறுக்கமாக இருக்கிறது. இதன் காரணம் என்ன?
இரு பக்கத்திலும் உள்ள தசைகளை ட்ரப்சியஸ் (Trapezius) என சொல்வார்கள். இந்த தசைகள் தலையின் அடிப்பகுதியிலிருந்து தோள்பட்டை முதுகு வரை செல்லும். டைமண்ட் ஷேப்பில் இருக்கும். நாம் கழுத்திற்கு அதிக பளு கொடுத்து வேலை செய்யும் போது இத்தசைகள் எளிதாக இருக்கமாய் மாறிவிடும். இதனால் கழுத்து வலி, தலைவலி போன்ற பிரச்னைகள் வரும்.
*கழுத்து வலி என்றாலே உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என பலரும் தெரிவிக்கின்றனர். உடற்பயிற்சிகள் செய்வதால் என்னென்ன பலன்கள் இருக்கிறது? கட்டாயம் செய்ய வேண்டுமா?
உடலில் எந்த மூட்டுப் பிரச்னையாக இருந்தாலும் உடற்பயிற்சிகள் செய்வது மட்டுமே தீர்வு. இதனால் கழுத்தில் உள்ள தசைகள் வலுப்பெறுவதோடு, எலும்புக்கு செல்லும் எடையை தசைகளால் தாங்கிக் கொள்ள முடிகிறது. இதுவே நாம் பயிற்சி செய்யவில்லையென்றால், தசைகள் பலவீனமாக இருக்கும்.
அப்போது எலும்புக்கு அதிக எடையை நாம் கொடுக்க நேரிடுகிறது. இதனால் எலும்பு பலவீனமாகி, ஒரு எலும்போடு இன்னோர் எலும்பு உரச ஆரம்பிக்கும். மேலும், இதற்கு நடுவில் உள்ள ஜெல்லி போன்ற திசு தட்டுகள் வற்றி ஒன்றோடு ஒன்று உராயும். பின் நரம்புகள் அழுந்தக் கூடும். முடிவாக கை வரைக்கும் செல்லும் நரம்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு கை குடைவது, கைகள் மரத்துப்போவது போன்ற பிரச்னைகள் தோன்றலாம். இதனால்தான் ஆரம்பம் முதலே உடற்பயிற்சிகள் செய்வது அவசியம் என்று வலியுறுத்துகிறோம்.
*கழுத்து வலி உள்ளவர்கள் எத்தகைய தலையணையை தேர்வு செய்ய வேண்டும்? தலையணையை பயன்படுத்தலாமா? அதனால் மேலும் ஏதேனும் பாதிப்பு வருமா?
தலையணை இல்லாமல் இருப்பதுதான் சிறந்தது. ஆனால், தலையணை வைத்து பழக்கம் வந்துவிட்டால், மிகவும் மெலிதாகவும் இல்லாமல் மிகவும் தடியாகவும் இல்லாமல் மிதமான அளவில் தலையணையை வைத்துப் படுப்பது சிறந்தது. சிலர் இரு தலையணைகள் அல்லது மூன்று தலையணைகளை வைத்து உறங்க விரும்புவார்கள். அப்படி செய்யக்கூடாது. மேலும், கழுத்து வலி வந்த பின் எந்த விதமான தலையணை மாற்றமும் செய்யக்கூடாது. ஏனென்றால் அது மேலும் கழுத்து வலியை அதிகரிக்கும் என்பதால் ஏற்கனவே பயன்படுத்தி வந்த தலையணையை மட்டும் தேர்வு செய்தால் போதும்.
*எனக்கு உடற்பயிற்சிகள் செய்வது புதிய விஷயமாக உள்ளது என்பதால் பிடிக்கவில்லை. ஆனால், எனக்கு கழுத்தில் இருந்து வரும் நரம்புகள் அழுந்தி இருப்பதாகவும், இதனால் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்துவர வேண்டும் என்றும், அப்போதுதான் கழுத்து வலி சரியாகும் என்றும் மருத்துவர் சொல்லியிருக்கிறார். ஒருவேளை நான் கழுத்து வலிக்கான பயிற்சிகளை செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?
உடற்பயிற்சிகள் நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் தினசரி வாழ்க்கையின் நடைமுறையாக நாம் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும். அத்தகைய தேவை உள்ளது இன்றைய அவசர உலகில். எனவே, எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் உடற்பயிற்சிகள்தான் தீர்வு. ஆகவே, நரம்பு அழுத்தம் உள்ளவர்கள் மேலும் அந்த நரம்பு பாதிக்காமல் இருப்பதற்கு நிச்சயம் உடற்பயிற்சிகள் செய்வது அவசியம். அப்படி செய்யவில்லையெனில் நரம்பு அழுத்துவது கூடிக் கொண்டே இருக்கும். இதனால் தசைகளுக்கு செல்லும் நரம்புகள் மேலும் அழுத்தப்பட்டு தசைகள் பலவீனமாக இருக்கும். கை, கால்களை தூக்க இயலாது. இதனால் உடற்பயிற்சிகள் செய்வது அவசியம்.
*என் அம்மாவுக்கு கழுத்து வலி இருக்கிறது. இதற்கு நான் குளிர் நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டுமா? இல்லை, சுடுநீர் ஒத்தடம் கொடுக்க வேண்டுமா? எது சிறந்தது? எதில் என்ன பலன் இருக்கிறது?
கழுத்து வலி வந்து குறைந்தது ஆறு மாதங்கள்தான் ஆகிறது எனில் சூடு ஒத்தடம் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது என்றால் குளிர் நீர் ஒத்தடம் கொடுக்கலாம். எதுவாக இருந்தாலும் 15 நிமிடம் தொடர்ந்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் நல்ல பலன் கிடைக்கும். மேலும், ஒரு சில கழுத்து வலிக்கு ஒத்தடம் கொடுப்பதில் பலனில்லை என்பதால் உங்கள் இயன்முறை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
*நான் ஒரு பக்கமாக தினமும் தூங்கும் பழக்கம் உடையவன். இதனாலே எனக்கு கழுத்து வலி வந்தது என்று வீட்டில் அனைவரும் சொல்கின்றனர். இது உண்மையா? தூங்கும் நிலை ஒருவரின் கழுத்து மூட்டு வலிக்கு காரணமாக அமையுமா?
நாம் தூங்கும் நிலை கழுத்து எலும்பினை பாதிக்கக்கூடும். ஆனால், நாம் தினமும் உடற்பயிற்சிகள் செய்து வருவதால் இந்த பிரச்னையில் இருந்து தப்பலாம். சிலர் வருடக் கணக்கில் ஒரே நிலையில்தான் உறங்குவர். இதனால் அந்தப் பக்கத்தில் உள்ள தசைகளுக்கும் எலும்புகளுக்கும் சேதம் நிச்சயம் வரும். ஆனால், தொடர்ந்து அவர் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக இருப்பின், இவ்வகையான பிரச்னைகளை தடுக்கலாம்.
*நான் வீட்டில் கழுத்து வலிக்கான உடற்பயிற்சிகளை செய்ய விரும்புகிறேன். ஆனால், எனக்கு என்னென்ன உபகரணங்கள் தேவைப்படும் எனத் தெரியவில்லை. எந்த மாதிரியான உபகரணங்களை நான் வாங்க வேண்டும்? அதற்கு எவ்வளவு பணம் செலவாகும்?
கழுத்து வலிக்கு வீட்டில் உடற்பயிற்சிகள் செய்ய இரு பொருட்கள் மட்டுமே தேவையானது. இதுவே போதுமானதும் கூட. ஒரு ஜோடி டம்பெல்ஸ் (Dumbbell) மற்றும் அழுத்தம் தரும் உடற்பயிற்சி பேண்ட் (Resistance band). கழுத்து வலிக்கான முழு தீர்வையும் இந்த இரண்டு வகையான உபகரணத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ஆயிரம் ரூபாய்க்குள் செலவாகும்.
*கழுத்து சுளுக்கு ஏற்பட்டதற்கு என் வீட்டில் உள்ளவர்கள் சுளுக்கு பேண்டேடை (Bandaid) ஒட்டச் சொன்னார்கள். இதனால் கழுத்து வலி சரியாகும் என்கிறார்கள். இது உண்மையா? அப்படி நான் செய்தும் எனக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லையே, ஏன்?
கழுத்து சுளுக்கு ஏற்பட்டு திருப்ப முடியாமல் ஒரு பக்கமாக வலித்தால் அதற்கு பேண்டைட் போடுவதில் பயனில்லை. அந்த இடத்தை இறுக்கமாக பேண்டைட் பிடித்துக் கொள்ளும். மேலும், அதில் வலியை குறைக்கவும், வலி வராமல் இருப்பதற்கான எந்தவிதமான தீர்வும் இல்லை. அதனால் வலி கட்டாயம் இருக்கத்தான் செய்யும். அதனை விடுத்து அருகில் உள்ள இயன்முறை மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெற்றுவந்தால் வலி குறைந்துவிடும். மேலும், வலி வராமல் இருப்பதற்கு உடற்பயிற்சிகள் செய்து வருவது அவசியம்.
*அரசு மருத்துவமனையில் கழுத்து வலிக்கு சென்றால் என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் இருக்கும்? மொத்தத்தில் எவ்வளவு செலவாகும்?
அரசு மருத்துவமனையில் கழுத்து வலிக்கான சிகிச்சை பெறுவதற்கு எந்தவிதமான பணமும் தேவைப்படாது. ஒருவேளை எக்ஸ்ரே அல்லது ஸ்கேன் எடுப்பதற்கு மருத்துவர் பரிந்துரைத்தால் பணம் தேவைப்படும். எக்ஸ்ரேவுக்கு குறைந்தது ஐம்பது ரூபாயும், ஸ்கேனுக்கு குறைந்தது இரண்டாயிரம் வரையும் ஆகலாம். மற்றபடி இயன்முறை சிகிச்சை அளிப்பதற்கு எந்தவிதமான பணமும் தேவைப்படாது.
கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்