துரியன் பழத்தின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர்
துரியன் பழம் தென்கிழக்கு ஆசியாவில் பிரபலமான ஒரு பழமாகும். துரியன் பழம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.இவை குறிப்பாக இந்தோனேஷியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. தமிழகத்தில் குன்னூர் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் துரியன் பழம் அதிகம் கிடைக்கும். துரியன் பழம் ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் என்பதால் இந்த பழங்கள் சீசன் இல்லாத காலங்களில் 3000 ரூபாய்க்கு கூட விற்கப்படுகிறது. மேலும் சாதாரண நாட்களில் ஒரு பழம் ரூபாய் 1000 முதல் 1500 வரை விற்கப்படுகிறது.
இதில் உடலுக்குத் தேவையான கொழுப்புகள் உள்ளன. இதை அளவோடு உட்கொள்ளும்போது உடலுக்கு நன்மைகளைக் கொடுக்கிறது. துரியன் பழம் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்பட்டு, புற்றுநோயின் அபாயம் குறைகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், துரியன் பழத்தில் பெண்களுக்குத் தேவையான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உள்ளது. இது பெண்கள் இயற்கையாக கருத்தரிப்பதற்கு உதவுகிறது.
துரியன் பழத்தின் முக்கிய அம்சங்கள் இந்த பழம் பார்ப்பதற்கு சிறியளவிலான பலாபழம் தோற்றத்தில், கூர்மையான முட்களால் மூடப்பட்ட தோலைக் கொண்டிருக்கும். இது தனித்துவமான சுவை மற்றும் வாசனை கொண்டது, இது சிலருக்கு மிகவும் பிடித்தமாகவும், சிலருக்கு பிடிக்காமலும் இருக்கிறது. கூழ் போன்ற சதைப்பகுதி, இனிப்பு மற்றும் சிறுங்கசப்பு கலந்த சுவை கொண்டது.
ஊட்டச்சத்து: நார்ச்சத்தும், வைட்டமின்களும் நிறைந்தது. குறிப்பாக, வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளது.
துரியன் பழத்தின் நன்மைகள்: துரியன் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.
இதயத்திற்கு நல்லது: துரியன் பழத்தில் உள்ள நார்ச்சத்து இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது.
சருமத்திற்கு நல்லது: துரியன் பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
எடை பராமரிப்பு: கர்ப்ப காலத்தில் பெண்களின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க துரியன் பழம் உதவும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
துரியன் பழத்தின் தீமைகள்: துரியன் பழத்தில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளதால், அதை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கலாம். அதுபோன்று, சர்க்கரை அளவும் அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் இதை அளவாக உட்கொள்ள வேண்டும். சிலருக்கு துரியன் பழம் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
தொகுப்பு: ரிஷி