மம்ப்ஸ் வைரஸ்: அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்!
நன்றி குங்குமம் டாக்டர்
மம்ப்ஸ் வைரஸ் அறிமுகம்
பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல்
மம்ப்ஸ் (Mumps) என்பது குழந்தைகளுக்கு மற்றும் இளம் வயதினருக்குப் பெரும்பாலும் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இந்த நோய் paramyxovirus குடும்பத்தைச் சேர்ந்த மம்ப்ஸ் வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இது பொதுவாக உமிழ்நீர் சுரப்பிகளைப் பாதிக்கிறது, குறிப்பாகச் காதின் கீழ் உள்ள பரோடிட் சுரப்பிகளை பாதிக்கிறது. இதன் காரணமாகக் கன்னங்கள் வீங்கி, கன்னம் வீங்கி அழற்சி (Mumps) என்று அழைக்கப்படுகிறது.
மம்ப்ஸ் எவ்வாறு பரவுகிறது?
இந்த வைரஸ் நோயாளியின் தும்மல், இருமல், அல்லது நெருக்கமான தொடர்பு மூலம் மிக எளிதாகப் பரவுகிறது. பாதிக்கப்பட்டவருடன் உணவு அல்லது குடிபானங்களைப் பகிர்ந்துகொள்வது போன்ற வழிகளிலும் இந்த நோய் பரவலாம். பொதுவாக, நோய் தொற்று ஏற்பட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தும், கன்னத்தில் வீக்கம் தென்பட்ட பிறகு ஐந்து நாட்களுக்குள்ளும் இந்த வைரஸ் பிறருக்குப் பரவுவதற்கான ஆபத்து அதிகம்.
முக்கிய அறிகுறிகள்
கன்னத்தில் வீக்கம் - ஒரு அல்லது இரு கன்னங்களின் செவட்டின் கீழ் கடுமையான வலி மற்றும் வீக்கம்.
காய்ச்சல் - உடல் வெப்பநிலை 38-40°C வரை உயரலாம்.
தலைவலி மற்றும் உடல் வலி.
பசியின்மை மற்றும் சோர்வு.
வாய் வறட்சி மற்றும் விழுங்குவதில் சிரமம்.
சில நேரங்களில், மம்ப்ஸ் விந்துப்பை வீக்கம் (orchitis), மூளைக்காய்ச்சல் (encephalitis), கர்ப்பிணிகளுக்குக் கருச்சிதைவு போன்ற கடுமையான சிக்கல்களையும் ஏற்படுத்தலாம்.
சிகிச்சை மற்றும் மேலாண்மை
மம்ப்ஸ் ஒரு வைரஸ் தொற்றாக இருப்பதால், இந்த நோயை முற்றிலுமாகக் குணப்படுத்த மருந்துகள் இல்லை. எனவே, அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதே சிகிச்சையின் முக்கிய நோக்கம். உடனடியாக மருத்துவமனையில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.
ஓய்வு: நோயாளி போதுமான அளவு ஓய்வெடுக்க வேண்டும்.
நீர்ச்சத்து: உடல் வறட்சி அடையாமல் இருக்க அதிக தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பானங்களை அருந்த வேண்டும்.
வலி நிவாரணி: மருத்துவ ஆலோசனையுடன் பாராசிட்டமால் அல்லது ஐபுப்ரோஃபென் போன்ற மாத்திரைகள் வலி மற்றும் காய்ச்சலைக் குறைக்க பயன்படுத்தலாம். (ஆஸ்பிரின் குழந்தைகளுக்குத் தரப்படக்கூடாது, ஏனெனில் அது ரேய் சிண்ட்ரோம் எனும் அரிதான நோய்க்கு வழிவகுக்கும்).
குளிர் அல்லது சூடான தடவல்: வீக்கம் இருக்கும் இடத்தில் குளிர் அல்லது சற்று சூடான துணியை வைத்து ஒத்தடம் கொடுப்பது வீக்கத்தைக் குறைக்க உதவும்.
அமிலம் குறைந்த உணவுகள்: எலுமிச்சை, தக்காளி போன்ற அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மென்மையான உணவுகளைத் தருவது நல்லது.
தடுப்பு முறைகள்
மம்ப்ஸ் நோயைத் தடுக்க MMR (Measles, Mumps, Rubella) தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்தத் தடுப்பூசியின் முதல் டோஸ் 12-15 மாதங்களிலும், இரண்டாவது டோஸ் 4-6 வயதிலும் போடப்படுகிறது.குடும்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் நோயாளிக்கு வீக்கம் தென்பட்ட பிறகு ஐந்து நாட்களுக்குத் தனிமைப்படுத்துவது அவசியம்.
பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் துணிகளைத் தனியாகக் கழுவ வேண்டும்.கைகளை அடிக்கடி சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
முக்கிய எச்சரிக்கை
பெரும்பாலும் மம்ப்ஸ் தானாகவே குணமாகிவிடும். ஆனாலும், சிக்கல்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
முடிவுரை
மம்ப்ஸ் ஒரு தடுப்பூசி மூலம் எளிதில் தடுக்கக்கூடிய நோய். குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதன் மூலம் இந்த நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். நோய் தென்பட்டால் பதற்றப்படாமல், உரிய மருத்துவ சிகிச்சையுடன், ஓய்வெடுத்து, நீர்ச்சத்தை பராமரித்துக்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதே சிறந்த மருத்துவம்.
வைரஸ் தொடர் முடிவுரை
வைரஸ்கள் நம் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. இந்த சிறு தொடர் மூலம் மம்ப்ஸ், ரூபெல்லா, சின்னம்மை போன்ற பல வைரஸ் தொற்றுகளின் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். நோய்களை எதிர்க்க தடுப்பூசிகள், மருத்துவ ஆலோசனைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சரியான மருத்துவ அறிவு மற்றும் எச்சரிக்கையுடன் இருந்தால், இந்த நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். நோய் வராமல் தடுப்பதே சிறந்த மருத்துவம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.