MINDFUL WALKATHON
நன்றி குங்குமம் தோழி
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 உலக மனநல தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, சென்னை சேப்பாக்கத்தில் இயங்கி வரும் ‘யுவதி’ அமைப்பு, ‘மைன்ட்ஃபுல் வாக்கத்தான்’ நிகழ்ச்சி ஒன்றை ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.இந்தாண்டு செனாய் நகர் திரு.வி.க பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், யுவதி அமைப்பின் இயக்குநர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களாக செயல்படும் டாக்டர் சுமதி சந்திரசேகரன் மற்றும் டாக்டர் காயத்ரி ஆகியோரை நேரில் சந்தித்ததில்...
‘‘நமக்கு உடம்பு சரியில்லை எனில் மருத்துவரை நாடுகிறோம். ஆனால், நமது மனது கஷ்டப்படுது, பதட்டம் அடையுது என்றால் அதை வெளியில் சொல்லாமல், அதுவாக சரியாகிவிடும் என கண்டு கொள்ளாமலே விட்டுவிடுகிறோம். பிரச்னை பெரிதாகி, பூதாகரமாக வெடிக்கும் போதே மனநல மருத்துவர் உதவியை நாடுகிறோம். இதை தடுக்க ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கையாய் ஒரு பிரிவென்டிவ் மாதிரி மனநலத்தையும் பார்க்கணும்’’ என்றவர்கள், ‘மைன்ட்ஃபுல் வாக்கத்தான்’ குறித்து விரிவாக... விளக்கமாக பேச ஆரம்பித்தனர்.‘‘இன்று ஒரு நிமிடம் கூட நின்று...
நிதானித்து... நாம் என்ன செய்கிறோம்? நம்மைச் சுற்றியிருக்கும் விஷயத்தை எப்படி கவனிக்கிறோம் என்பதை துளியும் உணராமல், எப்போதும் ஆட்டோமேட்டிக் மோடில், ரோபோ மாதிரி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.முன்பெல்லாம் உணவின் ருசி, மனம், சுவை என சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்டோம். ஆனால், இன்று சாப்பிடும் போதும் மொபைல் போனில்தான்
கவனம் வைக்கிறோம். என்ன சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலே போனையும் லேப்டாப்பையும் பார்த்தவாறே சாப்பிடுகிறோம். மழை நேர மண்வாசனை... சமைக்கும் போது வருகிற வாசனை என அனைத்தையும் அனுபவிக்க நாம் தவறுகிறோம்.
நமக்கு நேரமில்லை என்பதைவிட இதையெல்லாம் நாம உணர்ந்து செய்யணும் என்கிற எண்ணமின்றி எப்போதும் ஓட்டம்... ஓட்டம்... ஓட்டம்தான். காலையில் அவசரமாய் கிளம்பும் நேரம் வாசலில் இருக்கும் செடியில் ஒரு பூ பூத்திருக்கலாம் அல்லது எதிர் வீட்டில் உள்ள ஒரு குழந்தை நம்மைப் பார்த்து சிரிக்கலாம். இதையெல்லாம் நின்னு நிதானித்து பார்க்கிறோமா? ரசிக்கிறோமா? என்றால் இல்லை.
குழந்தைகளோடு கொஞ்சி விளை யாடிய போது கிடைத்த மென்மையான தொடு உணர்வு... நம்மைச் சுற்றிச் சுழலும் மென்மையான காற்றின் சத்தம்... மழையின் ஓசை... அலை சத்தம் என எதையும் கவனிப்பதில்லை. அப்போது நம்மைச் சுற்றி ஏதாவது பாட்டு ஓடலாம் அல்லது பறவை சத்தம் கேட்கலாம் அல்லது அருகில் இருப்பவர்கள் எதையாவது பேசலாம்... இவை நம் காதில் விழுந்தாலும் மனதில் பதியாமல் நமது கவனம் எங்கோ இருக்கும்.
நமது தோல் மிகப்பெரிய உணர்வு உறுப்பு. ஆனால், அந்த உணர்வே இன்றி, யாராவது நம்மைத் தொட்டால் கூட உறைப்பதில்லை. இதனால் நமது ஐம்புலன்களான பார்த்தல், கேட்டல், சுவைத்தல், தொடுதல், நுகர்தல் என்ற இந்த உணர்வுகளை சரியாக நாம் பயன்படுத்துவதில்லை. ஆக, ஐம்புலன்களையும் சரியாக நாம் பயன்படுத்தாததால், அந்த கனத்தையும் நாம் சரியாக வாழ்வதில்லை. நாம் என்ன செய்கிறோம் என்பதை, நமது புலன்கள் மூலம் முழுதாய் உணர்ந்து கவனமாய் செய்வதே மைன்ட்ஃபுல்னெஸ். இது ஒரு வாழ்க்கை முறை. நாம் வாழும் கனமே தியானம்’’ என்றவர்களிடம் மேலும் பேசியதில்...
‘‘பிரச்னை வந்த பிறகு யோகா, தியானம் என செய்ய முயற்சிப்பதைவிட, நமது வாழ்க்கையில் ரெகுலராக இவற்றை செய்வதற்கு பழக்கப்படுத்திக் கொண்டு வருவதே மைன்ட்ஃபுல்னெஸ். சொல்லப் போனால் அந்தந்த கனத்தை நாம் உணர்ந்து வாழ்வது. இதுவும் மெடிடேஷன் மாதிரிதான். இதை வெறும் பேச்சாக இல்லாமல், அனுபவமாக மக்களுக்கு கொடுக்க நினைத்தே மைன்ட்ஃபுல் வாக்கத்தான் என்பதைத் தொடங்கினோம்.
மனநலத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டவர்கள், சமுதாயத்தில் நல்ல மாற்றம் வர வேண்டும் என நினைப்பவர்கள் எங்களுடன் இதில் கைகோர்த்தனர். இதற்கென 10 உளவியலாளர்களைக் கொண்ட(Psychologist) கோர் டீம் இருக்கிறது. இது போக மருத்துவர்கள், சோஷியல் வொர்க்கர்ஸ், ஆசிரியர்கள், மாணவர்கள், சுய உதவிக்குழு பெண்கள் என பல்வேறு துறை சார்ந்த தன்னார்வலர்கள் 250 பேர் குழுவில் இருக்கின்றனர்.
பரபரப்பான நகர சூழலில் இருந்து விலகி இயற்கையோடு இணையும்போது நமது ஐம்புலன்களும் நன்றாக வேலை செய்யும் என்பதற்காக, சேத்துப்பட்டு ஈக்கோ பூங்கா அல்லது செனாய் நகர்
திரு.வி.க பூங்கா என அமைதியான இயற்கை சூழல் நிறைந்த இடங்களை நாங்கள் தேர்வு செய்கிறோம். இந்த சூழல் எங்களின் மைன்ட்ஃபுல்னெஸ் பயிற்சிக்கு உதவுகிறது.
இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு எப்படி நமது நடையை கவனிப்பது, மூச்சை கவனிப்பது, சுற்றியிருக்கும் காட்சிகள் மற்றும் சத்தத்தை எப்படி கவனிப்பது, வாசனையை எப்படி உணர்வது போன்ற மைன்ட்ஃபுல் டெக்னிக்கை கற்றுத் தருகிறோம். இதன் மூலமாக இயற்கையோடு இணைவதுடன், புலன் உணர்வுகளும் கூர் தீட்டப்படுகிறது. இது மனதுக்கு மட்டுமல்ல மூளைக்கும் நல்லது.
நமது மூளை எப்போதும் புதிதாய் எதையாவது கற்றுக்கொண்டே இருக்கின்ற ஒன்று. நமது புலன்களை நாம் அதிகமாக பயன்டுத்தும் போது, மூளையில் புது நரம்பு இணைப்புகளும் உருவாகும். எனவே, இந்த மைன்ட்ஃபுல்னெஸ் பயிற்சிகள், புலன் உணர்வு பயிற்சிகள் எல்லாமே, நம் மூளையில் இருக்கின்ற பிரெய்ன் எலாஸ்டிசிட்டி அல்லது நியூரோ எலாஸ்டிசிட்டியினை அதிகப்படுத்தும் விஷயம். இதில் கற்கும் திறன் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கிறது. மேலும், வயதான காலத்தில் வரும் டிமென்சியா, அல்சைமர் நோய்களின் தாக்கம் குறைவதுடன் தள்ளிப்போடவும் இந்தப் பயிற்சிகள் உதவும்.
மைன்ட்ஃபுல் வாக்கத்தான் என்பது ரொம்ப மெதுவா ஒவ்வொரு அடியையும் உணர்ந்து எடுத்து வைக்கிற நடை என்பதால் குழந்தையில் தொடங்கி வயதானவர்கள் வரை பங்கேற்கலாம்.
முற்றிலும் இலவசமாக சொல்லித் தரப்படும் இந்தப் பயிற்சியில், எங்களுடன் யோகா நிபுணர்களும், மியூசிக் தெரபிஸ்டுகளும் பங்கேற்று சில டிப்ஸ் மற்றும் டெக்னிக்ஸ்
குறித்து விளக்குவதுடன், நடக்கும் போதும் உடன் வந்து சில விஷயங்களை நமக்கு அறிவுறுத்துவார்கள்.
யுவதி அமைப்பின் மைன்ட்ஃபுல் வாக்கத்தான் முதல் நிகழ்ச்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த போது வரவேற்பு அபரிதமாக இருந்தது. 1500 நபர்களுக்கு மேல் இதில் பங்கேற்றனர். நிகழ்வின் தனித்துவம் மற்றும் பங்களிப்புக்காக, நோபுல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் இதனை அங்கீகரிக்க, உலக சாதனை நிகழ்வாகவும் மாறியது. இது எங்கள் குழுவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். எனவே, யுவதி அமைப்பின் முக்கிய வருடாந்திர நிகழ்வாகவும் மைன்ட்ஃபுல் வாக்கத்தான் மாறியதுடன், பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் இருக்கிறது’’ என்றவாறு விடைபெற்றனர்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்