இலைகளின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர்
கற்பூரவல்லி
கற்பூரவல்லி ஒரு மருத்துவ மூலிகை ஆகும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். சிறு கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.
மருத்துவ பயன்கள்
கற்பூரவல்லி இலை இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாக திகழ்கிறது. வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சலை தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
பயன்படுத்தும் முறை
இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.
இலைச்சாற்றை, நல்லெண்ணெய் கலந்து நன்கு காய்ச்சி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும்.
இலைகளை சாறெடுத்து இரண்டு மி.லி சாறுடன் எட்டு மி.லி தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.
அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.
கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
குப்பைமேனி
குப்பைமேனி மாற்று அடுக்கிலும் வட்ட அடுக்கிலுமாக அமைந்த தாவரம். ஓரத்தில் பற்களுடன், பல அளவுகளில் உள்ள இலைகளை உடைய தாவரம். இலைக்காம்புகளின் இடுக்குகளில் அமைந்த பசுமையான, கொத்தான பூக்களைக் கொண்டது.
மருத்துவ பயன்கள்
தோல் நோய்கள் குணமாக, இதன் இலைச்சாற்றுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் குழைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவர வேண்டும். குப்பைமேனி இலையுடன் உப்பு வைத்து கசக்கி சாறு எடுத்து அதனுடன் மஞ்சள் கலந்து தொண்டையில் பற்றிட தொண்டை கட்டு, தொண்டை கரகரப்பு சரியாகும். இதன் இலைச் சாற்றினை 4 துளிகள் அளவு நாக்கில் தடவலாம். அல்லது குப்பைமேனி இலையைக் காய வைத்துத் தூள் செய்து, கால் தேக்கரண்டி அளவு உட்கொண்டுவர கோழை வெளிப்படும்.
குப்பைமேனி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனை இலேசாக நசுக்கி, 1 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி, வடிகட்டிக் குடிக்க சளி இருமல் கட்டுப்படும்.
பெண்கள் குப்பைமேனியின் இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுவி வர, முகத்திலுள்ள பருக்கள், புள்ளிகள் மறைவதுடன் முகம் பளபளப்பாக மாறும்.
ஆவாரை
ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ! என்பது பழமொழி..
அத்தனை மருத்துவ குணங்கள் உள்ள தாவரம் ஆவாரை. ஆவாரை பூ மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம், தேநீராக, குளியல் பொடியாக ஆனால் ஆவாரை இலை, பட்டை, பூ, விதை, பிசின் என அனைத்துமே ஏதேனும் ஒரு விதத்தில் நமக்கு பயன் தருகிறது.
மருத்துவ பயன்கள்
ஆவாரை இலை மற்றும் பூவில் உள்ள வேதிப்பொருட்கள் கணையத்தை சுரக்கச் செய்து, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சருமத்தின் நிறத்தை சீராக்கவும், பழுப்பு நிறத்தை நீக்கவும், முகப்பருக்களை குறைக்கவும் உதவுகிறது. சருமத்தை பளபளப்பாகவும் புத்துயிர் பெறவும் செய்கிறது. குடல் இயக்கத்தை ஊக்குவித்து, மலச்சிக்கலைத் தடுப்பதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடல் சூடு, பித்த அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது.
ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக உதிரப்போக்கு போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. குடற்புண் மற்றும் வயிற்றுப்புண் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
ஆவாரை இலை, பூ அல்லது பொடியை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம்.ஆவாரம்பூ மற்றும் கருப்பட்டியை சேர்த்து மணப்பாகு செய்து பருகலாம். சருமப் பிரச்சனைகளுக்கு ஆவாரம்பூ பவுடரை குளியல் பொடிகளில் (நலங்கு மாவு) பயன்படுத்தலாம்.
தூதுவளை
தூதுவளை இலை சளி, இருமல், நெஞ்சுச் சளி, மூக்கடைப்பு மற்றும் சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், கண் நோய்களுக்கும் மருந்தாகிறது.
மருத்துவ பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறை
தூதுவளை இலையை சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியற்றை நீக்கும்.தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.
தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத, பித்த நோய்கள் தீரும்.தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். தூதுவளைப் பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல் நீங்கும். பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை தூதுவளைக்கு உண்டு.
திருநீற்றுப் பச்சிலை
திருநீற்றுப் பச்சிலையின் இலைகளுக்கும் மணம் உண்டு. உருத்திரசடை, பச்சை, பச்சிலை, சப்ஜா என்ற பெயர்களும் இதற்கு உண்டு. திருநீற்றுப்பச்சிலை, காய்ச்சல், வயிற்றுவலி, கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வாந்தி மற்றும் தலைவலியை குணப்படுத்த உதவும். அதன் விதைகள், உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
மருத்துவ பயன்கள்
திருநீற்றுப் பச்சிலையின் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும். தேள் கடிப்பதால் வலி ஏற்படும்போது அதன் கடிவாயில் திருநீற்றுப்பச்சிலையை கசக்கி பூசினால் வலி குறையும்.இந்த இலையைக் கசக்கி முகர்ந்து பார்த்தால், தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகிவிடும்.திருநீற்றுப் பச்சிலை செடியின் வேரை இடித்து, பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீரை பெருக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.
காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும். முகப்பருவை விரட்ட திருநீற்றுப்பச்சிலை சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்துப் பூசினால் பலன் கிடைக்கும்.கர்ப்பிணிப் பெண்கள் பச்சிலைச்சாறு சாப்பிட்டால் பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய கடுமையான வலிகள் குறையும். பச்சிலை விதையை கசாயம் செய்து குடித்து வந்தால் சுறுசுறுப்பு கிடைப்பதோடு சிறுநீரகக் கோளாறுகள் சரியாகும்.
திருநீற்றுப்பச்சிலை விதையை சப்ஜா விதை என்பார்கள். இதில் செய்த சர்பத்தை குடித்துவந்தால் சீதபேதி, வெள்ளை, வெட்டைச்சூடு, இருமல் சரியாகும்.தலையில் பேன் மற்றும் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இந்த இலையின் சாறை தனியாகவோ அல்லது எண்ணெயில் கலந்தோ தேய்த்து தலைக்குக் குளித்து வாருங்கள். பேன், பொடுகுத் தொல்லை போயே போய்விடும்.இன்னும் வயிற்றுப் பூச்சிகள் அகற்ற, பருக்களை கரைக்க என்று எண்ணற்ற பலன்கள் கொண்டது இந்த திருநீற்று பச்சிலை.
தொகுப்பு: ரிஷி