லிஜோமோல் ஜோஸ் -ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!
நன்றி குங்குமம் டாக்டர்
மலையாள சினிமாவில் 2016-ம் ஆண்டு மஹேஷிண்டே பிரதிகாரம் மற்றும் கட்டப்பனையிலே ரிதவிக் ரோஷன் என்ற இரு திரைப்படங்களில் ஒரே சமயத்தில் நடித்து
மலையாள திரையுலகில் அறிமுகமானவர் லிஜோமோல் ஜோஸ். லிஜோமோல் தனது பட்டப்படிப்பினை முடித்த பின்னர் ஜெய் ஹிந்த் என்ற மலையாள தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார்.
அதன்மூலம் மலையாள சினிமாவில் வாய்ப்பு கிட்டியுள்ளது. பின்னர் மலையாள திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து புகழ் பெற்றார். தமிழ் ரசிகர்களுக்கும் இவர் அறிமுகமானவர்தான். 2019-ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார், சித்தார்த் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின்னர், நடிகர் சூர்யாவுடன் ‘ஜெய் பீம்’ படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இவர். பொதுவாக திரையுலகில் திருமணத்திற்கு பின்பு நடிகைகளுக்கு பெரிய வாய்ப்பு இருக்காது என்பார்கள்.
ஆனால், இவருக்கு திருமணத்துக்கு பின்பே நிறைய பட வாய்ப்புகள் வந்ததாம். வித்தியாசமான, எதார்த்தமான திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் ஜெயபிரகாஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காதல் என்பது பொதுவுடைமை என்ற படத்தில் தன் பாலின ஈர்ப்பாளராக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார். அடுத்ததாக, தமிழில் ஜேஷ்வா சேதுராமன் இயக்கத்தில் ஜென்டில்வுமன் மற்றும் சத்யசிவா இயக்கத்தில் ப்ரீடம் என்ற படங்களில் நடித்து வருகிறார். லிஜோமோல் தனது ஃபிட்னெஸ் குறித்து பகிர்ந்து கொண்டவை:
ஒர்க்கவுட்ஸ்: எனக்கு பொதுவாக ஜிம்முக்கு போகிற பழக்கம் இல்லை. ஆனால், தினசரி நடைப்பயிற்சி, யோகா மற்றும் நடனப் பயிற்சி செய்வேன். அவ்வளவுதான் எனது ஒர்க்கவுட் ரொட்டீன். இதையறிந்த பலரும் ஜிம்முக்குப் போகாமல் எப்படி கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் எடையை சமாளிக்கிறீர்கள் என்று கேட்பார்கள். நான் தேர்வு செய்யும் கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதைப் பொருத்து உணவில் கட்டுப்பாட்டை கொண்டு வந்துவிடுவேன்.
அதற்காக, எந்த உணவையும் தவிர்ப்பது கிடையாது. எப்போதும் போல் சைவம், அசைவம் என எல்லா உணவுகளையும் எடுத்துக் கொள்வேன். அதேசமயம், கேரக்டருக்கு ஏற்றபடி உணவின் அளவை குறைத்தோ, கூட்டியோ எடுத்துக் கொள்வேன். இது தவிர, சின்ன சின்ன வொர்க் அவுட் பயிற்சிகளை யூடியூப் பார்த்து வீட்டிலேயே செய்து கொள்வேன் அவ்வளவுதான். மற்றபடி ஜிம் சென்று உடலை வருத்திக் கொள்ளும் அளவு அதிக ஒர்க்கவுட் எல்லாம் செய்ய மாட்டேன்.
பியூட்டி: மேக்கப்புக்காக அதிகம் செலவு செய்வது, தினசரி சருமப் பராமரிப்புக்காக இதெல்லாம் செய்கிறேன் என்று சொல்கிற அளவு என்னுடைய தினசரியில் ஒன்றும் இல்லை. சிலர் வீட்டிலிருக்கும் பாலாடை, மஞ்சள் போன்ற பொருட்களை வைத்தே அழகு பராமரிப்பில் ஈடுபடுவார்கள். அதுபோலவும் நான் எந்த மெனக்கெடலும் செய்வதில்லை. ஏனென்றால், வீட்டிலேயே சருமப் பராமரிப்பு செய்வதாக இருந்தாலும் அதைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். என்னால் அது முடியாது. காரணம், நான் கொஞ்சம் சோம்பேறி தனம் உடையவள். அதனால்தான் பியூட்டி பார்லர் போகிற பழக்கம் இல்லை. ஹேர் கட்டுக்காக எப்போதாவது போவேன் அவ்வளவுதான். ஃபேஷியல் பண்ண மாட்டேன்.
அதிகபட்சமாக காஜல், லிப்ஸ்டிக், சன் ஸ்க்ரீன் மட்டும்தான் என்னுடைய மேக்கப். அதுவும் டிராவல் டைம் என்றால் காஜல் கூட போட மாட்டேன். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், நெயில் பாலிஷ் போடுகிற பழக்கம் கூட பல வருடங்களாக கிடையாது. கர்லி ஹேர் எப்படி மெயின்டெயின் செய்கிறீர்கள் என்று பலரும் கேட்பார்கள். அது மட்டும்தான் கொஞ்சம் கஷ்டம். சமீப காலமாகத்தான் அதற்கான வேலையையே ஆரம்பித்திருக்கிறேன். கர்லி ஹேருக்கு ஸ்பெஷலாக ஷாம்பூ, கண்டிஷனர், ஹேர் கேர் ஜெல் எல்லாம் இருக்கின்றன.
வீட்டில் இருக்கிற நேரத்தில் இந்த விஷயங்களைச் செய்துகொள்வேன். அதையும் தொடர்ச்சியாகச் செய்வதில்லை. ஷூட்டிங் நேரத்தில் அந்தக் கதாபாத்திரத்துக்காக மேக்கப் போட வேண்டும் என்பதால் வேறு எதையும் செய்வதில்லை.எனக்கு சீக்கிரம் தூங்குகிற பழக்கமும் இல்லை. நான் கொஞ்சம் லேட்டாக தூங்குகிற பெண். அதனால் கருவளையம் வந்துவிட்டது என்று கவலைப்படுவதும் இல்லை. ஷூட்டிங்கில் மேக்கப் போடுகிறபோது அவர்கள் அதற்கேற்றாற்போல் மேக்கப் போட்டுவிடுவார்கள். இதுதான் எனது ஃபிட்னெஸ் ரகசியங்கள்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்